இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது. வருகிற 27 ஆம் தேதி முதல் தொடங்கும் இந்த தொடருக்கான இந்திய அணி கடந்த வாரத்தில் அறிவிக்கப்பட்டது.
இதன்படி, இந்திய டி20 அணிக்கு சூரியகுமார் யாதவ் கேப்டனாகவும், ஒருநாள் அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். டி20 மற்றும் ஒருநாள் அணிகளுக்கு சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இந்த தொடரில் பங்கேற்கும் இந்திய அணி இலங்கைக்கு இன்று (திங்கள்கிழமை) புறப்பட்டது. முன்னதாக, இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்துப் பேசினர்.
அப்போது, தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கரிடம் முதல் கேள்வி, டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆல்ரவுண்டர் வீரர் ஹர்திக் பாண்டியாவுக்கு ஏன் இந்திய டி20 கேப்டன் பதவி வழங்கப்படவில்லை? என்பதாகும். அதற்கு பதிலளித்த அவர் “டிரஸ்ஸிங் ரூமில் இருந்து கருத்துக்களைக் (ஃபீட்பேக்) கேட்டோம்." என்று குறிப்பிட்டார்.
அஜித் அகர்கரின் பதிலில் இருந்து, இந்திய அணியில் துணை கேப்டனாக பாண்டியா இருந்தபோதும், தேர்வாளர்கள் மற்ற விருப்பங்களைப் பார்த்துக் கொண்டிருந்தனர் என்பது தெரிய வருகிறது. மேலும் முக்கியமாக மற்ற வீரர்களின் கருத்துகளைக் கேட்கிறார்கள் என்பதும் வெளிப்படுகிறது. "சூரியாவைப் பற்றி நாங்கள் நல்ல கருத்துக்களைப் பெற்றோம். அவரிடம் ஒரு நல்ல கேப்டனாக இருப்பதற்கு தேவையான அனைத்து குணங்களும் உள்ளதாக நாங்கள் நம்புகிறோம். மேலும் அவரை அந்த ரோலில் உருவாக்க முடியும் என்று நம்புகிறோம்," என்று அஜித் அகர்கர் அவர்களின் தேர்வு பற்றி கூறினார்.
அகர்கர் குறிப்பிட்டது போல், இது அவசரத்தில் எடுக்கப்பட்ட முடிவு அல்ல. கருத்துக்கள் கேட்கப்பட்டுள்ளன. நன்மை தீமைகள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன. "கடந்த சில ஆண்டுகளாக உடற்தகுதி அவருக்கு (ஹர்திக் பாண்டியா) ஒரு சவாலாக உள்ளது, அது ஒரு பயிற்சியாளர் மற்றும் தேர்வாளர்களுக்கு கொஞ்சம் கடினமாக உள்ளது. அடிக்கடி அணியில் விளையாடக்கூடிய ஒருவரை நாங்கள் விரும்புகிறோம், ”என்று அவர் கூறினார்.
அப்போது மைக் இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரிடம் கொடுக்கப்பட்டது. இந்திய அணியில் கம்பீரின் செயல்பாடு செயல்படுமா? என்ற கேள்விகள் ஏராளமாக இருந்தன. எப்போதும் போலவே, அரை மணி நேர உரையாடலில் ஒருமுறை சிரித்துக் கொண்டே, இன்முகத்துடன் வைத்துக்கொண்டு அமர்ந்தார் கம்பீர். ஆனால் அவர் பயிற்சியைப் பற்றிய தனது பார்வையை விளக்கினார். “வீரர்களுக்கு சுதந்திரம் கொடுப்பது முக்கியம். அதைத்தான் நான் முழுமையாக நம்புகிறேன். தலைமைப் பயிற்சியாளருக்கும் வீரர்களுக்கும் இடையே ஒரு உறவை நான் கொண்டிருக்க விரும்பவில்லை. நம்பிக்கையின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட உறவுதான் சிறந்த உறவு, அது மிகவும் முக்கியமானதாக இருக்கும்” என்று கம்பீர் கூறினார்.
டிரஸ்ஸிங் ரூமை வெல்வதே மிகப்பெரிய குறிக்கோள் என்று வலியுறுத்திய அவர், "மகிழ்ச்சியான டிரஸ்ஸிங் ரூம் ஒரு வெற்றிகரமான டிரஸ்ஸிங் ரூம் என்று நான் எப்போதும் கூறுவேன். முழு ஆதரவு ஊழியர்களுடன் இது எனது பொறுப்பு. செய்வதற்கு இன்னும் பெரிய வேலைகள் உள்ளன. அதை எதிர்நோக்கி இருக்கிறேன்," என்று கம்பீர் கூறினார்.
அவர் கூறியது எளிமையாக இருந்தது. ஆனால் கம்பீரும் இந்தியாவும் இது அவ்வளவு எளிதல்ல என்பதை அறிவார்கள், குறிப்பாக, ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் அவர்களுக்கு வெகு தொலைவில் இல்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.