IND vs SL: Suryakumar Yadav tamil news: இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இலங்கை அணி தற்போது 3 போட்டிகள் ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், இவ்விரு அணிகள் மோதும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பர்சபரா ஸ்டேடியத்தில் பகல்-இரவு ஆட்டமாக இன்று நடக்கிறது.
இப்போட்டியானது பிற்பகல் 1:30 மணிக்கு தொடங்கிய நிலையில், டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. முன்னதாக, டாஸ் போடப்பட்ட போது பேசிய இந்திய கேப்டன் ரோகித் சர்மா அணியில் அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ் இல்லை என்றும் அவருக்கு பதில் மிடில்-ஆடரில் ஷ்ரேயாஸ் ஐயர் களமாடுவர் என்றும் குறிப்பிட்டார்.
கேப்டன் ரோகித் இவ்வாறு கூறியது கிரிக்கெட் ரசிகர்களுக்கு நிச்சயம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கும். ஏன்னென்றால் சூரியகுமார் யாதவ் டி20 ஃபார்மெட்டில் உலகின் நம்பர் ஒன் வீரராக வலம் வருகிறார். அவரின் சமீபத்திய ஃபார்ம் எதிரணி பந்துவீச்சாளர்களை அச்சுறுத்தும் வகையில் உள்ளது. கடந்த 14-15 மாதங்களில் இந்தியாவிற்கும் உலகிற்கும் சிறந்த டி20I பேட்ஸ்மேனாக அவர் உருவெடுத்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை (7 ஆம் தேதி) இலங்கைக்கு எதிராக நடந்த 3வது டி20 போட்டியில் சூரியகுமார் சதத்துடன் 112 ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றிக்கு வலுவான அடித்தளத்தை அமைத்து கொடுத்தார். மேலும், அவர் தனது மூன்று டி20 சதத்தையும் பதிவு செய்தார். தற்போது அவரது டி20 சராசரி 46 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 180 ஆக உள்ளது.
பெரும்பாலும் நம்பர் 4 இடத்தில் பேட்டிங் செய்யும் அவர் இத்தகைய சாதனையை படைத்து இருப்பது அவரை இந்த ஃபார்மெட்டில் ஆகச் சிறந்த வீரர் ஆக்குகிறது. ஆனாலும் டி -20 என்பது இங்கே முக்கிய வார்த்தையாக இருக்கிறது. ஏனெனில், சூரியகுமார் டி -20 போட்டிகளில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளியிருப்பதைப் போல் ஒருநாள் போட்டிகளில் இன்னும் வெளிக்காட்டவில்லை. இதனால், அவரை இரண்டு ஃபார்மெட்டுகளிலும் மாறி மாறி விளையாட வைப்பதை இந்திய நிர்வாகம் விரும்பவில்லை.

சூரியகுமார் யாதவ் இதுவரை விளையாடிய 16 ஒருநாள் போட்டிகளில், அவரின் சராசரி 32 ஆகவும், ஸ்டிரைக் ரேட் 100க்கு மேலும் தான் உள்ளது. இந்த போட்டிகளில் அவர் 2 அரைசதங்களை மட்டுமே விளாசி இருக்கிறார். மறுபுறம், ஷ்ரேயாஸ் ஐயர், கடந்த ஆண்டு ஒருநாள் போட்டிகளில் இந்தியாவிற்காக அதிகபட்ச ரன்களை குவித்தவராகவும், மற்ற வீரர்களை விட மிடில் -ஆடரில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவராகவும் உள்ளார். எனவே, சூரியகுமாரை பெஞ்சில் அமர வைத்த அணி நிர்வாகம் ஷ்ரேயாசை களமிறக்கியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/