சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியாவும், 2-வது போட்டியில் தென் ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலை இருந்தது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: IND vs SA: Why third India vs South Africa T20I was halted
இந்த நிலையில், இந்தியா - தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையலான 3-வது டி20 போட்டி செஞ்சூரியன் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரராக களமிறங்கிய சஞ்சு சாம்சன் தான் சந்தித்த 2-வது பந்திலேயே டக் அவுட்டாகி வெளியேறினார்.
மற்றொரு தொடக்க வீரரான அபிஷேக் சர்மாவுடன், திலக் வர்மா ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக ஆடினர். இந்த ஜோடியில் அபிஷேக் சர்மா அரை சதமடித்து 50 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஒரு ரன்னிலும், ஹர்திக் பாண்ட்யா 18 ரன்களிலும், ரிங்கு சிங் 8 ரன்களிலும் வெளியேறினர். அதிரடியைத் தொடர்ந்த திலக் வர்மா சதமடித்து அசத்தினார்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 219 ரன்கள் குவித்தது. திலக் வர்மா 107 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதையடுத்து 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங் செய்தது.
முதலில் களமிறங்கிய வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களின் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதையடுத்து களமிறங்கிய டேவிட் மில்லர் மற்றும் ஹென்ரிச் கிளாசென் நிதானமாக விளையாடினர். ஆனால் அந்த பார்ட்னர்ஷிப்பும் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அந்த ஜோடியில் மில்லர் 18 ரன்களும், கிளாசென் 41 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். இறுதி கட்டத்தில் மார்கோ ஜான்சன் அதிரடியாக விளையாட தென் ஆப்பிரிக்க அணி கவுரமான நிலையை எட்டியது.
20 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 208 ரன்கள் மட்டுமே எடுத்து 7 விக்கெட்டுகளை இழந்தது. இதன் மூலம் 11 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக மார்கோ ஜான்சன் 54 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் அர்ஷ்தீப்சிங் 3 விக்கெட்டும், வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் 4 ஆட்டங்கள் கொண்ட போட்டியில் இந்தியா 2-1 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
பவுலிங் போட வந்த ஹர்திக்... திடீரென நிறுத்தப்பட்ட ஆட்டம்: என்ன காரணம் தெரியுமா?
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் தென் ஆபிரிக்க அணி பேட்டிங் ஆடிய போது, 2-வது ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார். அப்போது திடீரென போட்டி நிறுத்தப்பட்டது. கள நடுவர்கள் போட்டி நிறுத்தப்படுவதாக அறிவித்தனர்.
பொதுவாக மழை காரணமாக போட்டி இடை நிறுத்தப்படும். ஆனால், நேற்றைய ஆட்டத்தின் போது, அப்படி மழை எதுவும் பெய்யவில்லை. மாறாக, செஞ்சுரியன் ஸ்டேடியத்தில் திடீரென பறக்கும் எறும்புகள் கூட்டம் அலைமோதியது. இதனால், உடனடியாக போட்டியை நிறுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது.
ஹர்திக் பாண்டியா இரண்டாவது ஓவரை வீசவிருந்தபோது, பேட்டிங் ஆடிய தொடக்க வீரரின் கண்களில் பறக்கும் எறும்புகள் நுழைந்தன. இதேபோல், அர்ஷ்தீப் சிங் தனது ஓவரின் போது இந்த பறக்கும் எறும்புகளில் சிலவற்றை தனது கண்களில் இருந்து விலக்க முயன்றார்.இதனைப் பார்த்து எச்சரிக்கையாக இருந்த கள நடுவர்கள் போட்டி நிறுத்தப்படுவதாக அறிவித்தனர்.
சில நிமிடங்களில் பறக்கும் எறும்புகள் ஆடுகளத்தில் சிதறி கிடந்தன. அவற்றை மைதான ஊழியர்கள் சுத்தம் செய்தனர். தொடர்ந்து, ஆய்வுக்குப் பிறகு இரவு 11.10 மணிக்கு மீண்டும் தொடங்கப்பட்டது. ஆட்டம் தாமதமானதால் ஓவர்கள் எதுவும் குறைக்கப்படவில்லை. ஆட்டம் நிறுத்தப்பட்டபோது, அர்ஷ்தீப் சிங் வீசிய ஒரு ஓவரில் விக்கெட் இழப்பின்றி 7 ரன்களை தென் ஆப்பிரிக்கா எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.