IPL 2024 | Chennai Super Kings | Royal Challengers Bangalore: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கான லீக் சுற்றில் இன்னும் 6 ஆட்டங்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், அடுத்த சுற்றான பிளே-ஆஃப்க்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய இரண்டு அணிகள் அதிகாரப்பூர்வமாக தகுதி பெற்றுள்ளன. குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய மூன்று அணிகளும் பிளே-ஆஃப் சுற்றில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளன.
பிளே-ஆஃப் சுற்றில் மீதமுள்ள 2 இடங்களுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் உள்ளிட்ட 5 அணிகள் மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், இந்த ஐ.பி.எல்.தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் வருகிற சனிக்கிழமை (மே 18) பெங்களூருவில் மோதிக் கொள்கின்றன. இது லீக் சுற்றில் அரங்கேறும் நாக்-அவுட் போட்டியாகப் பார்க்கப்படுகிறது. இதில் சென்னை அணி வென்றால், அதன் பிளே ஆஃப் வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியாகிவிடும்.
சென்னை அணிக்கு இதுவே கடைசி லீக் ஆட்டம் என்பதால், இப்போட்டியுடன் ஜாம்பவான் வீரர் தோனி ஓய்வு பெறலாம் என ரசிகர்கள் யூகித்து வருகிறார்கள். இதனால், பெங்களூருவில் அரங்கேறும் போட்டியின் விலை தாறுமாறாக எகிறியுள்ளது. டிக்கெட்டை சமூக வலைதள பக்கங்களில் விற்பதற்காக எக்ஸ் தளத்தில் #RCBvsCSKtickets என்ற தனி ஹேஷ்டேக்கை உருவாக்கியுள்ளனர். ஆர்.சி.பி-யின் அதிகாரப்பூர்வ இணையதளம் ஏற்கனவே போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டதை வெளிப்படுத்தியுள்ளது. இதனால், கள்ளச் சந்தையில் டிக்கெட்டுகளை வாங்க வேண்டாம் என்று ரசிகர்களை பலரும் எச்சரித்து வருகிறார்கள்.
ஸ்டேடியத்திலிருந்து வெகு தொலைவில் உள்ள கப்பன் பார்க் பகுதியில், கடந்த வாரம் ஆர்.சி.பி - டெல்லி கேப்பிட்டல்ஸ் இடையே நடந்த போட்டிக்கு முன்பே, சி.எஸ்.கே அணி மேட்ச்-டே கிட்களை வியாபாரிகள் விற்பனை செய்வதைக் காண முடிந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு, சனிக்கிழமை ஆர்.சி.பி-க்கு எதிராக வெற்றி பெற்றால், சி.எஸ்.கே பிளே -ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். ஒரு சிறிய வித்தியாசத்தில் அவர்கள் தோற்றாலும், அவர்கள் வெற்றிபெற இன்னும் வாய்ப்பு உள்ளது.
சி.எஸ்.கே அணிக்கு முக்கிய போட்டி என்பதால், சென்னையில் இருந்து பல ரசிகர்கள் இந்த விளையாட்டிற்காக பெங்களூரு செல்ல திட்டமிட்டுள்ளனர். டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்றுத் தீர்ந்துவிட்டதால், மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் டிக்கெட்டுகளுக்கு அதிக கிராக்கி உள்ளது. கடந்த சீசனில், போட்டியை முன்னிட்டு, 2,405 ரூபாய் மதிப்புள்ள டிக்கெட்டுகள், 10,000 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இந்த ஐ.பி.எல் போட்டியின் தொடக்கப் போட்டி, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்த நிலையில், அதில் சி.எஸ்.கே அணி வெற்றியை ருசித்தது. அதற்கு பதிலடி கொடுக்க பெங்களூரு அணி தீவிரம் காட்டும். அதனை முறியடித்து வெற்றியைப் பதிவு செய்வதோடு, பிளே ஆஃப் வாய்ப்பை மேலும் பிரகாசப்படுத்த சென்னை அணி நினைக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.