'இப்படியொரு ஆதரவு கிடைத்தால் உயிரையும் கொடுப்போம்'! - வெற்றிக்குப் பின் இந்திய கால்பந்து கேப்டன் உருக்கம்

சுனில் சேத்ரி இந்திய அணியின் மெஸ்ஸி, ரொனால்டோவாக கொண்டாடப்பட வேண்டியவர் தானே!?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
'இப்படியொரு ஆதரவு கிடைத்தால் உயிரையும் கொடுப்போம்'! - வெற்றிக்குப் பின் இந்திய கால்பந்து கேப்டன் உருக்கம்

ஆசைத் தம்பி

Advertisment

தெலங்கானா மாநிலத்தின் செகந்தராபாத்தைச் சேர்ந்த 33 வயதான சுனில் சேத்ரி தான் கடந்த நான்கு நாட்களாக இந்திய இணையத்தின் வைரல். யார் இவர்? இந்திய கால்பந்து அணியின் கேப்டன் தான் இந்த நபர்.

நான்கு நாடுகள் மோதும் கால்பந்து தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது. இதில், சீன தைபே அணியுடன்

சமீபத்தில் மோதிய இந்தியா, 5-0 என்ற கணக்கில் அபார வெற்றிப்பெற்றது. சுனில் சேத்ரி ஹாட்ரிக் கோல் அடித்தார். இது அவரது மூன்றாவது சர்வதேச ஹாட்ரிக் கோலாகும்.

Advertisment
Advertisements

ஹாட்ரிக் கோல் அடித்த சுனில் சேத்ரி, மைதானத்தை சுற்றிப் பார்த்தால், சொற்பமான தலைகளே அங்கு அமர்ந்து கைத் தட்டிக் கொண்டிருந்தன. இதனால், மன வேதனையின் உச்சிக்கு சென்ற சுனில், தனது ட்விட்டரில் 'எங்களை திட்டினாலும் பரவாயில்ல... கிண்டல் செய்தாலும் பரவாயில்ல.. ஆனா, கிரவுண்டுக்கு வந்து அதை செய்யுங்க' என்ற உருக்கமாக பதிவிட, நடப்பு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, முதல் ஆளாய் சுனிலுக்கு தோள் கொடுத்து நின்றார். அவரைத் தொடர்ந்து சச்சினும் கைக்கோர்க்க, ஒட்டுமொத்த ரசிகர்களும் தங்கள் ஆதரவை இந்திய கால்பந்து அணிக்கு அளித்தனர்.

இதனால் நேற்று இரவு (04.06.18) நடந்த கென்யா அணிக்கு எதிரான இரண்டாவது லீக் ஆட்டத்திற்கு மைதானத்தை நிரப்பினர் இந்திய ரசிகர்கள். மைதானம் முழுவதும் ரசிகர்கள் தேசிய கொடிகளுடன் ஆக்கிரமித்து இருந்தனர்.

இப்போட்டியின் முதல் பாதிநேர ஆட்டத்தில் இரு அணியினரும் கோல் அடிக்கவில்லை. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 68-வது நிமிடத்தில் இந்திய அணிக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பில் கேப்டன் சுனில் சேத்ரி கோல் அடித்தார். இது அவரின் 60-வது சர்வதேச கோலாகும். இதனால் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது.

அதைத்தொடர்ந்து 71-வது நிமிடத்தில் ஜேஜே ஒரு கோல் அடித்தார். அதன்பின் கூடுதலாக அளிக்கப்பட்ட நேரத்தில் சுனில் சேத்ரி மீண்டும் ஒரு கோல் அடித்தார். இறுதியில், இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வெற்றிப் பெற்றது.

இப்போட்டி சுனில் சேத்ரியின் 100வது சர்வதேச போட்டியாகும். இந்த போட்டியில் அடித்த இரண்டு கோல்கள் உட்பட சுனில் இதுவரை சர்வதேச போட்டிகளில் 61 கோல்கள் அடித்துள்ளார்.

இதன் மூலம் சர்வதேச கால்பந்து போட்டிகளில் அதிக கோல் அடித்த தற்போதைய வீரர்கள் பட்டியலில், ஸ்பெயினின் டேவிட் வில்லாவை (59 கோல்கள்) பின்னுக்கு தள்ளி சுனில் சேத்ரி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். இந்த பட்டியலில் போர்ச்சுகல் வீரரும், அதிவேகமாக பந்தை கடத்துவதில் கில்லியுமான கிறிஸ்டியானோ ரொனால்டோ முதல் இடத்தில் உள்ளார். இவரது கோல்களின் எண்ணிக்கை 81. இவருக்கு அடுத்தபடியாக 'கால்பந்து ஜாம்பவான்' மாரடோனாவிற்கு இணையாக ஒப்பிடப்படும் அர்ஜெண்டினாவின் லயோனல் மெஸ்ஸி 64 கோல்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். இப்போது இந்தியாவின் சுனில் சேத்ரி 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இன்னும் நான்கு கோல்கள் அடித்தால் மெஸ்ஸியை பின்னுக்குத் தள்ளி இரண்டாவது இடத்தை பிடித்துவிடலாம். அடுத்ததாக, இந்திய அணி வரும் 7ம் தேதி நடைபெறும் லீக் போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. அதன்பின் 10ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டிக்கும் இந்திய அணி ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டதால் மெஸ்ஸியை சுனில் சேத்ரியை பின்னுக்கு தள்ள அதிக வாய்ப்புகள் உள்ளது.

100வது போட்டியில் இரு கோல்கள் அடித்து அசத்திய சுனில் சேத்ரிக்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில், “தேவைப்பட்ட சிறப்பான வெற்றி இது. நன்றாக விளையாடினீர்கள் இந்தியா. 100-வது போட்டி, இரு கோல்கள் என்பது சிறந்த சாதனை, சுனில் சேத்ரி”, என வாழ்த்தி பதிவிட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து சுனில் சேத்ரி தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள நன்றிப் பதிவில், "இந்த போட்டியில் கிடைத்த ஆதரவு நாட்டிற்காக விளையாடும் ஒவ்வொரு போட்டிக்கும் கிடைத்தால், மைதானத்தில் எங்கள் உயிரையும் கொடுப்போம் என்று நாங்கள் உங்களுக்கு உறுதியளிக்கிறோம். இந்தியா, இந்த இரவு சிறப்பானது, ஏனெனில் நாம் இன்று ஒன்றாக இருந்தோம். மைதானத்திற்கு வந்து ஆரவாரம் செய்தும், வீட்டில் இருந்தும் ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி" என்று உருக்கமுடன் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

மெஸ்ஸி, ரொனால்டோ சிறந்த வீரர்கள் என்பது அவர்களது ஆட்டமுறையிலும், கோல்களின் எண்ணிக்கை அடிப்படையிலும் என்றால், 61 கோல்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ள சுனில் சேத்ரி இந்திய அணியின் மெஸ்ஸி, ரொனால்டோவாக கொண்டாடப்பட வேண்டியவர் தானே!?.

Sunil Chhetri

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: