ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு கடந்த பிப்.14ம் தேதி மாலை துணை ராணுவப்படையினர் 2,500 பேர் 90க்கும் மேற்பட்ட பேருந்தில் சென்றனர். புல்வாமா மாவட்டம் அவந்திபோரா நெடுஞ்சாலையில் பேருந்து வந்த போது 5-வது வரிசையில் சென்றுகொண்டிருந்த பேருந்து மீது வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரை மோதச் செய்து ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தீவிரவாதி தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தினான். இதில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
தீவிரவாதிகளின் இந்த தாக்குதல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பாகிஸ்தானில் இயங்கி வருவதால், தீவிரவாதிகளை பாகிஸ்தான் ஊக்குவித்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனால், இரு நாடுகள் இடையே பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில், வரும் மே மாதம் இங்கிலாந்தில் தொடங்கவுள்ள 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாடக் கூடாது என்று நாடு முழுவதும் பரவலாக எதிர்ப்பு எழுந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்பஜன் சிங் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர், இந்த தீவிரவாத தாக்குதல் குறித்து விரைவில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இனியும் இதுபோன்ற நிகழ்வு நமது ராணுவ வீரர்களுக்கு நிகழக் கூடாது என்று தெரிவித்தனர். குறிப்பாக, 'உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா கண்டிப்பாக விளையாடக் கூடாது' என ஹர்பஜன் சிங் காட்டமாகவே கருத்து தெரிவித்து இருந்தார்.
இதன் தொடர்ச்சியாக ரசிகர்களும், இந்தியா பாகிஸ்தானுடன் விளையாடக் கூடாது என்று சமூக தளங்களில் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பிசிசிஐ இதுகுறித்து கூறுகையில், "இந்தியா உலகக் கோப்பையில் பாகிஸ்தானுடன் விளையாடாமல் போனால் புள்ளிகளை இழக்க நேரிடும். இறுதிப் போட்டியில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோத வேண்டிய சூழ்நிலை வந்தால், இந்தியா வெளியேறும் பட்சத்தில் பாகிஸ்தான் உலகக் கோப்பையை வெல்லும். இந்த விவகாரத்தில் மத்திய அரசு தான் முடிவெடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளது.
இந்தச் சூழ்நிலையில், இம்மாதம் 27ம் தேதி துபாயில் நடக்கவுள்ள ஐசிசி ஆலோசனை கூட்டத்தில், உலகக்கோப்பையில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடுவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏஎன்ஐ வெளியிட்டுள்ள செய்தியில் இத்தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.