Super 4 – Asia Cup 2022 Tamil News: 15-வது ஆசிய கோப்பை போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள துபாய் மற்றும் ஷார்ஜாவில் நடைபெற்று வருகின்றன. இதில், இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங், இலங்கை, வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த 6 அணிகளும் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு, ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் அணிகளும், ‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், இலங்கை அணிகளும் இடம் பெற்றுள்ளன.
சூப்பர் “4” சுற்று என்பது என்ன?
தற்போது நடைபெறும் லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் “4” சுற்றுக்கு முன்னேறும்.
அதாவது லீக் சுற்று முடிவில், அட்டவணையில் ஏ1, ஏ2, பி1 மற்றும் பி2 ஆகிய இடங்களில் உள்ள அணிகள் ஒரு பிரிவில் இடம்பிடிக்கும். இரண்டாவது ரவுண்ட்-ராபின் சுற்றில் அனைத்து அணிகளும் ஒவ்வொரு அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

சூப்பர் “4” சுற்றின் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் 2022 ஆம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். இவ்விரு அணிகள் மோதும் இறுதிப் போட்டி ஆட்டம் வருகிற செப்டம்பர் 11 ஆம் தேதி துபாயில் அரங்கேறும்.
ஆசிய கோப்பை: சூப்பர் “4” சுற்று போட்டிகள் எப்போது, எங்கு நடைபெறும்?
ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று போட்டிகள் செப்டம்பர் 3 ஆம் தேதி ஷார்ஜாவில் தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து துபாயில் செப்டம்பர் 9 வரை ஐந்து போட்டிகள் நடைபெறும்.
ஆசிய கோப்பை: சூப்பர் 4 சுற்றில் இந்தியா மீண்டும் பாகிஸ்தானுடன் மோதுமா?

ஆசியக் கோப்பை போட்டியில் சூப்பர் 4-ல் இந்தியாவும் பாகிஸ்தானும் மீண்டும் மோத அதிக வாய்ப்புகள் உள்ளது. லீக் சுற்றின் முடிவில் இந்த அணிகள் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் பட்சத்தில், செப்டம்பர் 4-ம் தேதி துபாயில் நடக்கும் ஆட்டத்தில் இவ்விரு அணிகளும் நேருக்கு நேர் சந்திக்கும்.
2018 ஆசிய கோப்பையில் சூப்பர் “4” சுற்றுக்கு தகுதி பெற்ற அணிகள் எவை?
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற 2018 ஆசியக் கோப்பையில் இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றன. இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் குரூப் பட்டியலில் முதலிடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறின. ரோகித் சர்மா தலைமையிலான அணி, இறுதிப் போட்டியில் வங்கதேசத்தை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தைத் தக்க வைத்து கொண்டது.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil