இந்தியாவில் கடந்த ஐந்தாறு வருடங்களில் கால்பந்துக்கான போட்டிக்கான வரவேற்பு அதிகரித்துள்ளது. 'இந்தியன் சூப்பர் லீக்' எனும் கால்பந்து தொடர், 'புரோ கபடி லீக்' போன்ற புதிய அறிமுகங்கள் மக்களின் பார்வையே கொஞ்சம் திசை திருப்பி உள்ளன.
கால்பந்து என்பது நமது நாட்டில் சில மாநிலங்களில் மட்டும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மேற்குவங்கம், கோவா, கேரளா மற்றும் வடகிழக்கு மாநிலங்களான அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, திரிபுரா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் தான் கால்பந்து அதிகம் விளையாடப்பட்டு வருகிறது. மற்ற மாநிலங்களில் கிரிக்கெட் தான் டாப், தமிழகம் உட்பட.
ஆனால், மேலே நாம் குறிப்பிட்ட அந்த இரு தொடர்கள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர், மக்களிடம் நிறைய மாற்றங்கள். கால்பந்து பார்வையாளர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்துள்ளது. தொலைக்காட்சி மூலம், பல விதமான விளையாட்டுகளையும் இந்திய மக்கள் ரசிக்கத் தொடங்கியிருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
ஃபிபாவின் முன்னாள் தலைவர் செப் பிளாட்டர், உலக கால்பந்து அரங்கில் இந்தியாவை 'Sleeping Giant' என்று அழைக்கிறார். கால்பந்து வளர்ச்சியில் இந்தியா இன்னும் பல படிகளை தாண்ட வேண்டும் என அவர் கூறுகிறார்.
லயோனல் மெஸ்ஸி, நெய்மர், ஹேரி கேன், கவானி, கிறிஸ்டியானோ ரொனால்டோ போன்ற நடப்பு கால்பந்து வீரர்களை மெய்மறந்து ரசிக்கும் இந்திய ரசிகர்கள், அதைப்போன்று இந்திய கால்பந்து வீரர்களை தங்கள் ஹீரோக்களாக நினைக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை. ஆனால், அதற்கு மிகக் கடுமையாக உழைக்க வேண்டும்.
தரவரிசையில் தற்போது இந்திய கால்பந்து அணி, 97வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், இந்திய கால்பந்து அணியின் தலைமை கோச் ஸ்டீபன் கான்ஸ்டடைன் சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, எதிர்வரும் ஹீரோ இன்டர் காண்டினண்டல் தொடருக்கு தயாராகும் பொருட்டு, அணித் தயாரிப்பு முகாம் ஒன்றை தொடங்கியிருக்கிறார். இதில், கலந்து கொள்ளுமாறு 30 இந்திய கால்பந்து வீரர்களை அவர் அழைத்துள்ளார்.
மே 16ம் தேதி இந்த முகாம் மும்பையில் தொடங்குகிறது. அழைப்பு விடுக்கப்பட்டுள்ள வீரர்கள் அனைவரும் மே 16 அன்று அசெம்பிள் ஆக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹீரோ இன்டர் காண்டினண்டல் தொடர் ஜூன் 1ம் தேதி தொடங்குகிறது. கென்யா, நியூசிலாந்து சைனீஸ் தைபே அணிகளுடன் இந்தியா மோதவிருக்கிறது.
இதுகுறித்து கான்ஸ்டடைன் கூறுகையில், "இந்த முகாமிற்கு அனைத்து வீரர்களும் நிச்சயம் பங்கேற்க வேண்டும். திறந்த மனதோடு வந்து அவர்களது ஆகச்சிறந்த திறமையை காட்ட வேண்டும். இப்போது இந்திய கால்பந்து அணி மிகவும் முன்னேறி இருக்கிறது. பல தடைகளை கடந்து முன்னேறி இருக்கிறது. ஆனால், இதனை தக்க வைத்துக் கொள்ள நாம் அதிகம் உழைக்க வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த ஹீரோ இன்டர் காண்டினண்டல் தொடரில் இந்திய அணி சிறப்பாக செயல்படும் பட்சத்தில், அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை தொடரில் இந்திய கால்பந்து அணியால் சாதிக்க முடியும். அதற்கு, இந்த முகாமை வீரர்கள் நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே இந்திய கால்பந்து ரசிகனின் எதிர்பார்ப்பாக இருக்க முடியும்.
சுதந்திரம் அடைந்த பிறகு, 1948ம் ஆண்டு பிரான்ஸை 1-2 எனும் கோல் கணக்கிலும், 1956ம் ஆண்டு சிட்னியில் ஆஸ்திரேலியாவை 1 - 7 என்ற கணக்கிலும் இந்திய அணி வீழ்த்தி இருக்கிறது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?. அப்படிப்பட்ட பலம் வாய்ந்த இந்திய அணி மீண்டும் உயிர்த்தெழுந்து வர வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாகும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.