9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் வருகிற பிப்ரவரி 19 ஆம் தேதி முதல் மார்ச் 9 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன.
பிப்ரவரி 19 ஆம் தேதி கராச்சியில் தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை சந்திக்கிறது. இதில் இந்திய அணிக்குரிய ஆட்டங்களும், முதலாவது அரையிறுதியும் துபாயில் நடைபெற உள்ளன. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த தொடரின் முக்கியமான இந்தியா- பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் பிப்ரவரி 23 ஆம் தேதி அமீரகத்தில் உள்ள துபாயில் நடக்க உள்ளது. இந்தப் போட்டிக்கு முன் பிப்ரவரி 20 ஆம் தேதி வங்கதேசத்தையும், மார்ச் 2 ஆம் தேதி நியூசிலாந்தையும் இந்திய அணி எதிர்கொள்கிறது.
இந்நிலையில், சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் பும்ரா நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய ஒருநாள் அணியின் துணை கேப்டனாக சுப்மன் கில் உள்ள நிலையில், பும்ராவுக்கு அந்தப் பதவி வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
பும்ரா காயம்
இந்த நிலையில், சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற 5-வது மற்றும் கடைசி டெஸ்டில் இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஏற்பட்ட காயம் நினைத்ததை விட மோசமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்டின் 2-வது நாளில் பும்ரா மருத்துவமனைக்குச் செல்ல களத்தை விட்டு வெளியேறியபோது, காயம் வெறும் 'முதுகு பிடிப்பு' என்று கூறப்பட்டாலும், அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் அவரை நீண்ட காலத்திற்கு அணியில் இருந்து ஓரங்கட்ட வைக்கும் என்றும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக, பும்ரா இங்கிலாந்துக்கு எதிரான சொந்த மண்ணில் வருகிற ஜனவரி 22 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெறவுள்ள 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்க இயலாமல் போகலாம் என்றும், பிப்ரவரியில் தொடங்கி நடக்கவிருக்கும் ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபியில் அவர் பங்கேற்பதும் சந்தேகம் தான் என்றும் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டுகளில் காயம் காரணமாக சில முக்கியமான போட்டிகளை பும்ரா தவறவிட்ட நிலையில், அது மீண்டும் நடக்காமல் இருக்க தேர்வாளர்கள் ஆர்வமாக உள்ளனர். எனவே, இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அவரை களமிறங்க இந்திய அணி நிர்வாகம் விரும்பவில்லை. அதனால், பும்ரா இந்தியாவின் சாம்பியன்ஸ் டிராபி அணியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் அவர் பங்கேற்பது நிபந்தனையுடன் இருக்கும். மேலும், பும்ராவை சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பயன்படுத்த வேண்டுமென்றால், அணி நிர்வாகத்திற்கு தேசிய கிரிக்கெட் அகாடமி (என்.சி.ஏ) மருத்துவ ஊழியர்களிடமிருந்து அனுமதி தேவைப்படும் என்றும் கூறப்படுகிறது.
பும்ராவுடன், சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் முகமது ஷமி மற்றும் குல்தீப் யாதவ் போன்ற வீரர்கள் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சுப்மன் கில்லுடன் ஜோடி சேரலாம். யஷஸ்வி ஜெய்ஸ்வால் அவர்ளுக்கு பேக்-அப் வீரராக இருக்கலாம். இவர்களை தொடர்ந்து விராட் கோலியும், ஷ்ரேயாஸ் ஐயர் 3வது மற்றும் 4வது இடத்தில் பேட் செய்வார்கள்.
தற்போது விக்கெட் கீப்பர் ஸ்லாட்டுக்கு கே.எல்.ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் போட்டியிடுகின்றனர். ஆனால் சஞ்சு சாம்சன் அந்த இடத்திற்கு வலுவான போட்டியாளராக இல்லை. ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் சுழற்பந்து வீச்சாளர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் வாஷிங்டன் சுந்தரையும் அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு தேர்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தொடருக்கு நிதிஷ் குமார் ரெட்டி குறித்து அதிக உறுதிப்படுத்தல் இல்லை என்றாலும், ஹர்திக் பாண்டியாவும் பட்டியலில் சேர்க்கப்பட உள்ளார். வருண் சக்ரவர்த்தி மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் இருக்கலாம். வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் ஓய்வளிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதே அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கான அணி பட்டியலில் அவரது பெயர் இடம் பெறலாம். அவர் அர்ஷ்தீப் சிங்குடன் சாம்பியன்ஸ் டிராபிக்கு தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.