கிரிக்கெட்டில் ஒரு 'இடி' அடிச்சு பார்த்து இருக்கீங்களா...? அதான் நம்ம கிறிஸ் கெயில். வெஸ்ட் இண்டீஸின் கிரிஸ் கெயில். மீண்டும் ஒருநாள் போட்டியில் இடம் பிடித்து, எதிரணிக்கு பயத்தை விதைத்திருக்கிறார்.
அதுவும், டெஸ்ட் தொடரில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக மிக மோசமாக தோற்று வெதும்பி போயிருக்கும் இங்கிலாந்து அணி, அடுத்ததாக நடைபெறவுள்ள ஒருநாள் தொடரில், கெயிலின் கம்-பேக்கால் அரண்டு போயிருக்கிறது.
கிறிஸ் கெய்ல் 23 ஒருநாள் சதங்களுடன் மே.இ.தீவுகளில் அதிக சதம் எடுத்த வீரராகத் திகழ்கிறார், ஒருநாள் போட்டிகளில் 9,727 ரன்கள் எடுத்துள்ளார். பிரைன் லாராவின் லாரா 10,405 ரன்களுக்கு அடுத்த இடத்தில் கெயில் உள்ளார்.

இந்தியா மற்றும் வங்கதேசத்திற்கு எதிராக நடந்த தொடர்களில் கெயில் சேர்க்கப்படவில்லை. தொடர்ந்து அணியில் இருந்து புறக்கணிக்கப்பட்டு வந்ததால், 2019 உலகக் கோப்பைக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் அவர் இடம் பெற வாய்ப்பில்லை என்றே கருதப்பட்டது. ஆனால், தற்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் கெயிலுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதற்கு முக்கியமான ஒரே காரணம் கேப்டன் ஜேசன் ஹோல்டர். மிக மூத்த அனுபவசாலியான கிறிஸ் கெயிலுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று தேர்வுக் குழுவினரை வேண்டி வலியுறுத்தி கேட்டுக் கொண்டதன் பேரிலேயே அவர் அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
ஒருவருட காலமாக சர்வதேச கிரிக்கெட் பக்கமே தலை வைக்காமல் இருந்த கெயிலை, மீண்டும் அணிக்குள் சேர்க்க வேண்டும் என்று ஆர்வத்துடன் வலியுறுத்தி, ரசிகர்களின் மனதை மட்டுமல்லாமல், கெயிலின் மனதையும் வென்றுள்ளார் ஜேசன் ஹோல்டர்.
கெய்ல், எவின் லூயிஸ், ஷிம்ரன் ஹெட்மையர், டேரன் பிராவோ தவிர ஷேய் ஹோப் என வரிசைக்கட்டும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரில், இங்கிலாந்துக்கு மெகா சோதனை காத்திருக்கிறது.
மே.இ.தீவுகள் அணி விவரம்: ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), ஃபேபியன் ஆலன், தேவேந்திர பிஷூ, டேரன் பிராவோ, கிறிஸ் கெய்ல், ஷிம்ரன் ஹெட்மையர், ஷேய் ஹோப், எவின் லூயிஸ், ஆஷ்லி நர்ஸ், கீமோ பால், நிகோலஸ் பூரன், ரோவ்மன் போவெல், கிமார் ரோச், ஒஷேன் தாமஸ்.
பிப்ரவரி 20ம் தேதி துவங்கும் இந்த 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், 22, 25, 27, மார்ச் 2 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
