VRINDA RATHI – Janani Narayanan – Gayathri Venugopalan ; Women umpires in Ranji Trophy Tamil News: பொதுவாக, கிரிக்கெட்டில், ஆடவர் போட்டிக்கு கள நடுவர்களாகவும், மூன்றாம் நடுவார்களாகவும் ஆண் நடுவர்களும், மகளிர் போட்டிக்கு பெண் நடுவர்களுமே செயல்பட்டு வருகிறார்கள். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பட்டு வாரியம் (பிசிசிஐ) ஆண்களுக்கான உள்நாட்டு சர்க்யூட்டில் பெண் நடுவர்களை உருவாக்க முடிவு செய்துள்ளது. அதன்படி, இந்த சீசன் ரஞ்சி டிராபி போட்டிகளில் கள நடுவர்களாக (ஆன்-ஃபீல்ட் அம்பயர்) பெண் நடுவர்களை களமிறக்க உள்ளது.
பல மாநில சங்கங்கள், பெண்கள் கிரிக்கெட்டைத் தவிர, உள்நாட்டில் ஆண்களுக்கான விளையாட்டுகளில் நடுவராக பெண்களை உருவாக்குகின்றன. ஆனால் இதுவரை, ஆண்கள் சீனியர் போட்டிகளில் ஆன்-பீல்ட் அம்பயர்களாக பணியாற்றும் வாய்ப்பை பிசிசிஐ பெண்களுக்கு வழங்கவில்லை. இந்த நிலையில், ரஞ்சி டிராபி போன்ற ஒரு நீண்ட தொடரில் பெண் நடுவர்களை நியமிக்கும் ஒரு புதிய முற்சியை பிசிசிஐ மேற்கொண்டுள்ளது.
“முன்னோக்கிச் செல்லும்போது, பெண்கள் நடுவர்கள் ரஞ்சி டிராபி போட்டிகளில் விளையாடுவார்கள். இது ஒரு ஆரம்பம்தான். ஆண்களுக்கான ஆட்டத்திலும் அவர்களுக்கு வாய்ப்பளிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது” என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்துள்ளார்.
விருந்தா ரதி – ஜனனி நாராயணன் – காயத்திரி வேணுகோபாலன்: பெண் நடுவர்கள் பின்னணி
ரஞ்சி டிராபி போட்டிகளில் கள நடுவர்களாக களமிறங்க உள்ள பெண் நடுவர்கள் விருந்தா ரதி, ஜனனி நாராயணன் மற்றும் காயத்திரி வேணுகோபாலன் ஆகியோர் ஆவார். இந்த மூன்று பெண் நடுவர்களும் வருகிற 9 ஆம் தேதி முதல் இந்தியாவில் தொடங்கும் 5 போட்டிகள் கொண்ட இந்தியா – ஆஸ்திரேலியா மகளிர் டி20 தொடரில் நடுவர்களாக செயல்பட இருக்கிறார்கள். ரஞ்சி கோப்பை வருகிற 13 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ள நிலையில், அவர்கள் முதல் கட்டத்தை தவறவிட்ட பிறகு, போட்டியின் 2வது சுற்றில் இருந்து நடுவர்களாக தொடங்குவார்கள். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிசிசிஐ விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விருந்தா ரதி
மும்பையைச் சேர்ந்த விருந்தா ரதி (32), நடுத்தர வேகப்பந்து வீச்சாளர் மற்றும் மும்பை பல்கலைக்கழக அணியில் விளையாடியவர். மும்பையில் உள்ளூர் போட்டிகளில் வழக்கமான ஸ்கோரராக இருந்தார், மேலும் 2010ல், பிசிசிஐ நடத்திய தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர். 2013 ஆம் ஆண்டில், மகளிர் உலகக் கோப்பைக்கான அதிகாரப்பூர்வ பிசிசிஐ ஸ்கோரராக இருந்தார். அப்போது நியூசிலாந்து சர்வதேச நடுவர் கேத்தி கிராஸை சந்தித்தார். இந்த சந்திப்பு அவரை கள நடுவாராக மைதானத்திற்குள் அடியெடுத்து வைக்க தூண்டியுள்ளது. தொடர்ந்து அவர் மும்பை கிரிக்கெட் சங்கம் நடத்திய தேர்விலும், பிசிசிஐ நடத்திய தேர்விலும் தேர்ச்சி பெற்றார்.
ஜனனி நாராயணன்
36 வயதான ஜனனி நாராயணன், சென்னையைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் ஆவார். இவர் கிரிக்கெட்டை ஒருபோதும் தீவிரமான அளவில் விளையாடியதில்லை. ஆனால், அதன் மீது எப்போதும் ஈர்ப்பை கொண்டிருந்தார். அவர் 2009 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தை (டிஎன்சிஏ) அணுகி, நடுவராக ஆவதற்கான விண்ணப்பப் படிவத்தைக் கேட்டு உள்ளூர் அதிகாரிகளை ஆச்சரியப்படுத்தினார். அதன் தொடர்ச்சியாக 2015 ஆம் ஆண்டில், டிஎன்சிஏ அவர்களின் விதிகள் மற்றும் கருத்துக்களை மாற்றியது. மேலும் அவருக்கு விண்ணப்பம் வழங்கியது. 2018ல், பிசிசிஐயின் லெவல் 2 நடுவர் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஜனனி நாராயணன், பிறகு தனது ஐடி வேலையை விட்டு விலக முடிவு செய்தார்.
காயத்திரி வேணுகோபாலன்
டெல்லியைச் சேர்ந்த காயத்திரி வேணுகோபாலன், 43, ஒரு தொழில்முறை கிரிக்கெட் வீராங்கனையாக விரும்பினார். ஆனால், அவருக்கு தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் அவரது கனவை சிதைத்தது. மேலும், தன்னை மறுபரிசீலனை செய்ய கட்டாயப்படுத்தியது. எனவே, அவர் தனது கார்ப்பரேட் வாழ்க்கையை கைவிட்டார். பிசிசிஐ நடுவர் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றார். மேலும் 2019ல் நடுவராகப் பதிவு செய்யப்பட்டார்.
23 வயதுக்குட்பட்டர்களுக்கான சி.கே.நாயுடு டிராபி விளையாட்டுகளில் ரதி மற்றும் ஜனனி நாராயணன் நடுவர்களாக உள்ளனர். ஆனால் அவர்கள் இப்போது ரஞ்சி கோப்பையில் களமாட உள்ளார்கள்.
வழக்கமாக, இந்திய வாரிய-ஒப்பந்த நடுவர்கள் ஊடகங்களுடன் தொடர்பு கொள்ள அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் சர்க்யூட்டில் உள்ள நடுவர்கள் சரித்திரம் படைக்கவிருக்கும் இந்த மூன்று பெண்களைப் பற்றியும் அறிந்திருப்பதாகக் கூறுகிறார்கள். ஆண்கள் நிறைந்த ஒரு துறையில் பெண்களும் அடியெடுத்து வைக்க பிசிசிஐ-யின் இந்த முயற்சி தற்போது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil