காமன்வெல்த் போட்டிகளில் மீண்டும் கிரிக்கெட் விளையாட்டைச் சேர்த்திருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பர்மிங்கமில் 2022ல் நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டிகளில் பெண்கள் கிரிக்கெட் விளையாடப்படும் என காமன்வெல்த் விளையாட்டுச் சங்கமும், ஐசிசியும் இன்று அறிவித்துள்ளன.
இதற்கு முன்னதாக, 1998ல் கோலாலம்பூரில் நடைபெற்ற CWG போட்டிகளில் கிரிக்கெட் (ஆண்கள் அணி) விளையாடப்பட்டது. இதில், தென்னாப்பிரிக்கா முதலிடம் பிடித்தது. அதாவது தென்.ஆ., தங்கம் வெல்ல, ஆஸ்திரேலியா வெள்ளிப் பதக்கமும், நியூசிலாந்து வெண்கலப் பதக்கமும் வென்றன.
1998ல் தங்கம் வென்ற தென்னாப்பிரிக்க அணி
பர்மிங்கம் காமன்வெல்த் தொடர் 2022ம் ஆண்டு, ஜூலை 27 - ஆகஸ்ட் 7 வரை நடைபெறுகிறது. இதில், எட்டு சர்வதேச அணிகள் கலந்து கொள்கின்றன.
இதுகுறித்து CGF தலைவர் டேம் லூசி மார்டின் கூறுகையில், "இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். காமன்வெல்த் விளையாட்டுகளில் கிரிக்கெட்டை மீண்டும் வரவேற்பதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம்" என்றார்.
ஐசிசி தலைமை செயல் அதிகாரி மனு சானே கூறுகையில், "பெண்கள் கிரிக்கெட்டுக்கும், உலக கிரிக்கெட் சமூகத்துக்கும் இதுவொரு பொன்னான நாள்" என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
காமன்வெல்த் தொடரில் நடைபெறவுள்ள எட்டு கிரிக்கெட் போட்டிகளும் எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், பல முக்கிய ஆட்டங்கள் இந்த மைதானத்தில் தான் நடைபெற்றன.