India Women vs West Indies Women Match updates Tamil News: 8-வது பெண்கள் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தென்ஆப்பிரிக்க மண்ணில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசமும், 'பி' பிரிவில் இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ், அயர்லாந்தும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.
மகளிர் உலகக்கோப்பை தொடரில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
இரு அணிகளின் ஆடும் லெவன் வீராங்கனைகள் பட்டியல்:
இந்திய பெண்கள் அணி:
ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), தீப்தி சர்மா, பூஜா வஸ்த்ரகர், தேவிகா வைத்யா, ராதா யாதவ், ராஜேஸ்வரி கயக்வாட், ரேணுகா தாக்கூர் சிங்
வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் அணி:
ஹெய்லி மேத்யூஸ் (கேப்டன்), ஸ்டாஃபனி டெய்லர், ஷெமைன் கேம்பெல், ஷபிகா கஜ்னபி, சினெல்லே ஹென்றி, செடியன் நேஷன், அஃபி பிளெட்சர், ஷாமிலியா கானல், ரஷாதா வில்லியம்ஸ் (விக்கெட் கீப்பர்), கரிஷ்மா ராம்ஹராக், ஷகேரா செல்மன்
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் 8-வது மகளரிர் 20 ஓவர் உலகக் கோப்பை தொடரில், கேப்டவுனில் பிப்ரவரி 15-ம் தேதி நடைபெற்ற 'பி' பிரிவு லீக் ஆட்டத்தில், இந்தியாவும், வெஸ்ட் இண்டீசும் மோதின. இந்திய அணியில் யாஸ்திகா பாட்டியா, ஹர்லீன் தியோல் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ஸ்மிர்தி மந்தனா, தேவிகா வைத்யா சேர்க்கப்பட்டனர்.
'டாஸ்' வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. அந்த அணியின் கேப்டன் ஹேய்லி மேத்யூஸ் 2 ரன்னில் கேட்ச் ஆனாலும் 2-வது விக்கெட்டுக்கு ஸ்டெபானி டெய்லரும், கேம்ப்பெல்லும் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
அந்த அணியின் 77 ரன் எடுத்திருந்த போது, சுழற்பந்து வீச்சாளர் தீப்தி ஷர்மா ஒரே ஓவரில் கேம்ப்பெல் 30 ரன்னிலும், ஸ்டெபானி டெய்லர் 42 ரன்னிலும் அவுட் ஆக்கி வெளியேற்றினார். இதையடுத்து வந்தவர்கள் சரியாக விளையாடததால், வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 118 ரன் மட்டுமே எடுத்தது.
இந்திய அணி தரப்பில் தீப்தி ஷர்மா 3 விக்கெட்டும், ரேணுகா சிங், பூஜா வஸ்ட்ராகர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
119 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியின் துணை கேப்டன் ஸ்மிர்தி மந்தனா 10 ரன்னிலும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஒரு ரன்னிலும், ஷபாலி வர்மா 28 ரன்னிலும் அவுட் ஆகி இந்திய அணிக்கு அதிர்ச்சி அளித்தார்கள். இந்தியா 43 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது, கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரும், விக்கெட் கீப்பர் ரிச்சா கோசும் பொறுப்புடன் விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர். ஹர்மன்பிரீத் கவுர் 33 ரன்னில் அவுட் ஆனார்.
இந்திய அணி 18.1 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 119 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ரிச்சா கோஷ் 44 ரன்களுடனும், தேவிகா ரன் ஏதுமின்றியும் களத்தில் இருந்தனர்.
8-வது 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு இது 2-வது வெற்றியாகும். ஏற்கனவே பாகிஸ்தானை வீழ்த்தி இருந்த இந்திய அணி இப்போது வெஸ்ட் இண்டீஸ் அணியையும் வீழ்த்தியூள்ளது. வெஸ்ட் இண்டீசுக்கு இது 2-வது தோல்வி. இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் இங்கிலாந்தை 18-ந்தேதி எதிர்கொள்கிறது.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil