/indian-express-tamil/media/media_files/2025/05/05/aorH3YLFLjtF9Wgbca43.jpg)
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரும், துணை கேப்டனுமான ஜஸ்பிரித் பும்ரா, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் துணை கேப்டன் பொறுப்பை ஏற்க வாய்ப்பில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜூன் மாத இறுதியில் தொடங்கும் இந்த தொடரில் பும்ரா ஐந்து டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடமாட்டார் என்று கூறப்படுகிறது. அவரது பணிச்சுமையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்படலாம் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆங்கிலத்தில் படிக்க: No leadership role for Jasprit Bumrah on England tour
சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் பும்ரா இந்திய அணியை வழிநடத்தியுள்ளார். இருப்பினும், அவர் தொடர்ச்சியாக அனைத்து போட்டிகளிலும் விளையாட முடியாத நிலை இருப்பதால், தொடர் முழுவதும் அணியுடன் இருக்கும் ஒரு வீரரை துணை கேப்டனாக நியமிக்க தேர்வுக்குழு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகையில், "ஐந்து டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடக்கூடிய ஒரு வீரரை நாங்கள் துணை கேப்டனாக நியமிக்க விரும்புகிறோம். பும்ரா அனைத்து போட்டிகளிலும் விளையாடமாட்டார் என்பதால், ஒவ்வொரு போட்டிக்கும் வெவ்வேறு வீரர்களை நியமிப்பதை விட, கேப்டனும் துணை கேப்டனும் உறுதியாக இருந்து அனைத்து போட்டிகளிலும் விளையாடுவது நல்லது" என்று தெரிவித்தனர்.
மேலும், அணியின் எதிர்கால தலைவராக உருவாகக்கூடிய ஒரு இளம் வீரரை துணை கேப்டனாக நியமிக்க தேர்வுக்குழு ஆர்வமாக உள்ளது. தற்போதைய அணியில் ஷுப்மன் கில் (25 ) மற்றும் ரிஷப் பந்த் (27) ஆகியோர் இந்த தகுதிக்கு பொருத்தமானவர்களாக பார்க்கப்படுகிறார்கள். விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் 30 வயதை கடந்தவர்கள். யாஷஸ்வி ஜெய்ஸ்வால் (23 ) இன்னும் இளம் வீரராக கருதப்படுகிறார்.
பும்ராவின் முந்தைய காயம் தொடர்பான பிரச்சினைகளையும் தேர்வுக்குழு கவனத்தில் கொண்டுள்ளது. கடந்த ஆண்டு சிட்னி டெஸ்ட் போட்டியின்போது ஏற்பட்ட முதுகுவலி காரணமாக அவர் மூன்று மாதங்கள் கிரிக்கெட் விளையாடாமல் இருந்தார். இதனால் சாம்பியன்ஸ் டிராபி போட்டியையும் அவர் தவறவிட்டார். 2022 ஆம் ஆண்டு முதுகு வலி காரணமாக அறுவை சிகிச்சை செய்துகொண்ட அவர், சுமார் 11 மாதங்கள் விளையாடவில்லை. மேலும், விரல் மற்றும் வயிற்றுப் பிடிப்பு போன்ற காயங்களாலும் அவர் பல போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூன் 20 ஆம் தேதி தொடங்குகிறது. கடைசி டெஸ்ட் போட்டி ஜூலை 31 ஆம் தேதி நடைபெற உள்ளது. முன்னாள் இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பும்ரா டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட முக்கிய காரணமாக இருந்தார். ஆனால் இந்த தொடரில் பும்ராவின் உடல்நிலையை கவனமாக கையாள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "நான் பும்ராவை மிகவும் கவனமாக கையாளுவேன். ஒவ்வொரு இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்குப் பிறகும் அவருக்கு ஓய்வு கொடுப்பேன். அவர் சிறப்பாக விளையாடத் தொடங்கினால் 5 போட்டிகளிலும் விளையாட வைக்க ஆசைப்படுவீர்கள். ஆனால் அவரது உடல் எப்படி ஒத்துழைக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். அவருக்கு உடலில் சிறு வலி ஏற்பட்டாலும் ஓய்வு எடுக்க வாய்ப்பு கொடுக்க வேண்டும்" என்று அவர் ஐசிசி விமர்சன நிகழ்ச்சியில் கூறயிருந்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.