சர்வதேச செஸ் கூட்டமைப்பான ஃபிடே சார்பில் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடக்கிறது. இந்தப் போட்டியில் கேண்டிடேட்ஸ் தொடரில் வெற்றி பெற்ற உலகின் நம்பர்-5 வீரரான இந்தியாவின் குகேஷ் (18) மற்றும் நடப்பு உலக சாம்பியனும், உலகின் நம்பர்-15 வீரரான சீனாவின் டிங் லிரென் (32) ஆகியோரும் மோதி வருகிறார்கள்.
மொத்தம் 14 சுற்று நடக்கும் இந்தப் போட்டியில், முதலில் 7.5 புள்ளி பெறும் வீரர், உலக சாம்பியன் ஆகலாம். மொத்த பரிசுத் தொகை ரூ. 21 கோடி. முதல் சுற்றை டிங் லிரென் வென்ற நிலையில், இரண்டாவது சுற்று 'டிரா' ஆனது. தொடர்ந்து நடந்த மூன்றாவது சுற்றில் எழுச்சி கண்ட குகேஷ் வெற்றி பெற்றார்.
இதனையடுத்து நடந்த 4, 5, 6, 7-வது சுற்று ஆட்டங்கள் டிராவில் முடிந்துள்ளன. 7-வது சுற்று ஆட்டம் சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற நிலையில், 73 நகர்த்தலுக்குப் பிறகு போட்டி டிரா என அறிவிக்கப்பட்டது.
இதுவரை முடிந்துள்ள 7 போட்டிகளில் டிங் லிரென் மற்றும் குகேஷ் ஆகிய இருவரும் தலா 3.5 புள்ளிகளைப் பெற்று சமனில் உள்ளனர். முதல் பாதி ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில், மீதமுள்ள 7 ஆட்டங்கள் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“