கிரிக்கெட் என்பது கணிக்க முடியாத விளையாட்டு என்ற கூற்று நேற்று நிரூபணம் ஆகியுள்ளது. கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்தை கால்பந்து போல் உதைத்து தள்ளியிருக்கிறது ஆஸ்திரேலிய அணி.
வரலாற்றுக் சிறப்புமிக்க லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில், 'ஆஷஸ்' அணிகள் மோதுகின்றது என்றால், கேட்கவா வேண்டும்? மைதானம் முழுவதும் இரு நாட்டு ரசிகர்களும் முழுவதும் ஆக்கிரமிக்க, டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் மோர்கன் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
ஆரோன் பின்ச், டேவிட் வார்னர் மிக நிதானமாக இன்னிங்சை தொடங்கினர். க்றிஸ் வோக்சின் லென்த் பந்துகளையும், ஜோப்ரா ஆர்ச்சரின் வேகப் பந்துகளையும் மிக நேரத்தியாக கையாண்டது இந்த ஜோடி. அவ்வப்போது இரு வீரர்களுக்கும் விக்கெட் சந்தேகங்களுக்காக ரிவியூ கேட்டும், அது தோல்வியில் முடிய, லார்ட்ஸில் காற்று ஆஸ்திரேலியா பக்கம் வீசியது நமக்கு விளங்கியது. அங்கேயே இங்கிலாந்து உஷாராகி இருக்க வேண்டும்.
ஆனால், தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய வார்னர் - பின்ச் ஜோடி, அரைசதம் கடந்து சதம் கூட்டணி அமைத்தது.
ஆஸ்திரேலியா, தனது கடைசி ஏழு இன்னிங்ஸில், 6 போட்டிகளில் முதல் பத்து ஓவர்களில் விக்கெட்டுகளே இழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
55/0 v ஆப்கானிஸ்தான்
48/4 v மேற்கு இந்திய தீவுகள்
48/0 v இந்தியா
56/0 v பாகிஸ்தான்
53/0 v இலங்கை
53/0 v வங்கதேசம்
44/0 v இங்கிலாந்து(நேற்று)
அந்தளவுக்கு வலிமையான ஓப்பனிங்கை கட்டமைத்து வருகிறது இந்த ஆஸி., ஜோடி.
ஒருவழியாக, 61 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்திருந்த வார்னரை, மொயின் அலி 22.4வது ஓவரில் அவுட் செய்ய, முதல் விக்கெட்டை கைப்பற்றியது இங்கிலாந்து. தொடர்ந்து உஸ்மான் கவாஜா 23 ரன்களில் ஸ்டோக்ஸ் பந்தில் போல்டாக, ஸ்டீவன் ஸ்மித் 38 ரன்களில் வோக்ஸ் பந்துவீச்சில் கேட்ச் ஆனார்.
கிளென் மேக்ஸ்வெல் 12 ரன்னிலும், மார்கஸ் ஸ்டாய்னிஸ் 8 ரன்களிலும் ஆட்டமிழக்க 250 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து திருதிருவென முழித்தது ஆஸ்திரேலியா. ஆனால், சிறப்பாக ஆடிய கேப்டன் பின்ச், 116 பந்துகளில் சதம் அடித்து, அதே 100 ரன்களில் வெளியேறினார். இறுதிக் கட்டத்தில் அலெக்ஸ் கேரே 27 பந்துகளில் 38 ரன்கள் என்று அதிரடிக் காட்ட, 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் சேர்த்தது ஆஸ்திரேலியா.
இந்த இடத்தில் நான் ஒரு விஷயத்தை பதிவு செய்ய விரும்புகிறேன். ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியை நகல் எடுத்தது போன்று தொடர்ந்து விளையாடி வருவதை கவனித்தீர்களா? இந்திய அணியின் பலமே டாப் 3 பேட்ஸ்மேன்கள் தான். ரோஹித், தவான், விராட் கோலி. இந்த மூவரில், யாரேனும் ஒருவர் மாற்றி மாற்றி சிறப்பாக விளையாடித் தான், இந்திய அணி கடந்த மூன்று ஆண்டுகளாக ஒருநாள் போட்டிகளில் வெற்றிகளைக் குவித்து வருகிறது. உலகக் கோப்பையிலும் அதே கதை தான் தொடர்கிறது. ஒன்று ரோஹித் அடிப்பார், இல்லை தவான் அடிப்பார், அல்லது விராட் கோலி அடிப்பார். (தவான் காயம் காரணமாக வெளியேறிய நிலையில், லோகேஷ் ராகுல் ஆடி வருவது குறிப்பிடத்தக்கது). இந்தியாவின் மிடில் ஆர்டர் சுத்தமாக பலவீனமாக உள்ளது. சச்சினே தோனி மீது வருத்தப்படும் அளவுக்கு இந்தியாவின் மிடில் ஆர்டர் மோசமாக உள்ளது. இறுதிக் கட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா மட்டும், தன்னால் முடிந்த அதிரடியை காட்டிவிட்டு போக, எப்படியோ ரன்களைச் சேர்த்து, மேற்கொண்டு பவுலிங்கை வைத்து இந்தியா ஜெயித்து காலத்தை ஓட்டி வருகிறது.
இப்போது, ஆஸ்திரேலியா கதையும், கிட்டத்தட்ட நூறு சதவிகிதம் அப்படியே தான் உள்ளது. தொடக்க வீரர்கள் பின்ச், வார்னர் அல்லது ஸ்மித் என இவர்கள் மூவரில் யாரேனும் ஒருவர் கட்டாயம் சதம் அடித்து விடுகின்றனர் அல்லது சிறப்பாக ஆடி விடுகின்றனர். மிடில் ஆர்டர் மக்கிப் போன ஆர்டராக உள்ளது. இறுதிக் கட்டத்தில் அலெக்ஸ் கேரே தன்னால் முடிந்த அதிரடியைக் காட்ட, எப்படியோ ரன்களைச் சேர்த்து, தன்னுடைய சிறப்பான பவுலிங்கை கொண்டு, எதிரணிகளை வீழ்த்தி காலத்தை ஓட்டி வருகிறது ஆஸ்திரேலியா.
நேற்றைய போட்டியில், முதல் 30 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 162 ரன்கள் எடுத்திருந்த ஆஸ்திரேலியா, அடுத்த 20 ஓவர்களில், 6 விக்கெட்டுகளை பறிகொடுத்து , 123 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
இந்த உலகக் கோப்பையில், ஆஸ்திரேலியா டெத் ஓவர்களான 41-50 ஓவர்களில் மட்டும் 27 விக்கெட்டுகளை இழந்திருக்கிறது. வேறு எந்த அணியும் 19 விக்கெட்டுகளை தாண்டி இந்த டெத் ஓவர்களில் இழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதிலிருந்தே, ஆஸி., அணியின் நடு வரிசை மற்றும் பின் நடு வரிசை எவ்வளவு பலவீனமாக உள்ளது என்பது நாம் அறிந்து கொள்ளலாம்.
அதேபோல், இந்த உலகக் கோப்பையில், பின்ச் - வார்னர் ஜோடியின் மூன்றாவது சதக் கூட்டணி இதுவாகும். உலகக் கோப்பை தொடர்களில் இதுவரை சதக் கூட்டணி அமைத்த ஜோடிகளின் விவரம்,
அரவிந்த டி சில்வா - குருசின்ஹா (1996)
ஆடம் கில்கிறிஸ்ட் - மேத்யூ ஹெய்டன் (2007)
தில்ஷன் - சங்கக்காரா (2015)
டேவிட் வார்னர் - ஆரோன் பின்ச் (2019)*
இதன்பின், 286 ரன்கள் என்று எட்டக் கூடிய இலக்கை துரத்திய இங்கிலாந்தின் அஸ்திவாரம், ஜேசன் பெஹ்ரென்டோர்ஃபின் ஸ்விங் பந்திலும், மிட்சல் ஸ்டார்க்கின் மிரட்டலான வேகப்பந்துவீச்சிலும் ஆட்டம் கண்டு போனது. தொடக்க வீரர் ஜேம்ஸ் வின்ஸ், பெஹ்ரென்டோர்ஃப் ஓவரில் போல்டாக, அடுத்து வந்த ஜோ ரூட், ஸ்டார்க் பந்தில் எல்பிடபிள்யூ ஆக வெளிறிப் போனது இங்கிலாந்து. எப்பேற்பட்ட கடினமாக களமாக இருந்தாலும், 50 ரன்கள் வரை தாக்குப்பிடிக்கும் ஜோ ரூட், 15 ரன்களில் அவுட்டான விதத்தை பார்த்த போதே, இங்கிலாந்தின் முடிவை 75 சதவிகிதம் நம்மால் யூகிக்க முடிந்தது.
ஜானி பேர்ஸ்டோ 27 ரன்களிலும், கேப்டன் இயன் மோர்கன் 4 ரன்களிலும் அவுட்டாக, 53 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து பெரும் கோணலை சந்தித்தது இங்கிலாந்து. தொடர்ந்து, ஜோஸ் பட்லர் 25 ரன்களிலும், க்றிஸ் வோக்ஸ் 26 ரன்களிலும் வெளியேற, ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் 115 ரன்களில் 89 ரன்கள் சேர்த்து மிட்சல் ஸ்டார்க்கின் மிக மிக அபாரமான யார்க்கரில் போல்டானார். இந்த உலகக் கோப்பையின் மிகச் சிறந்த யார்க்கர், மிகச் சிறந்த பேட்ஸ்மேனுக்கு எதிராக இது என்றால் அது மிகையல்ல!.
இப்படிப்பட்ட யார்க்கர்களை வங்கதேச வீரர்கள் ஒருவர் சந்தித்து இருந்திருந்தாலும், சகிப் அல் ஹசன், 'ஸ்டார்க் எங்களுக்கு ஒரு மேட்டரே அல்ல' என்று சொல்லியிருக்க மாட்டார் போல.
இறுதியில், 44.4 ஓவரில் 221 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இங்கிலாந்து இழக்க, 64 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்ற ஆஸ்திரேலியா, 7 போட்டிகளில் 6 வெற்றிகளுடன், 12 புள்ளிகள் பெற்று, 2019 உலகக் கோப்பையின் முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது.
ஆனால், 7 போட்டிகளில் ஆடிய இங்கிலாந்து தனது மூன்றாவது தோல்வியை சந்தித்து, 8 புள்ளிகளுடன் அதே நான்காவது இடத்தில் உள்ளது. அடுத்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளை எதிர்க்கொள்ளவிருக்கும் இங்கிலாந்து, அரையிறுதிக்கு செல்ல வேண்டுமெனில், கட்டாயம் இரு போட்டியிலும் வென்றாக வேண்டிய சூழலில் உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.