நேற்றைய போட்டியை பற்றி சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில், மேற்கு இந்திய தீவுகள் அணியை வைத்து, இந்திய அணி தனது ரன் ரேட்டை உயர்த்தி இருக்கிறது என்று நாம் சொல்லலாம்.
மான்செஸ்டர் மைதானத்தில் இந்திய அணி டாஸ் வென்ற போது, நிபுணர்கள் பெரும்பாலானோர் சொன்ன கருத்துகள், 'இந்தியா 350 ரன்களுக்கும் மேல் குவிக்கலாம்' என்று. டாஸ் தோற்ற எதிரணி கேப்டன் ஹோல்டரும், 'நாங்கள் டாஸ் வென்றிருந்தாலும் பேட்டிங் செய்திருப்போம்' என்றே தெரிவிக்க, நிச்சயம் ரன்கள் திருவிழா என்றே அனைவரும் எதிர்பார்த்தனர்.
ஆனால், நடந்தது எல்லாம் தலை கீழ். இந்திய அணி சச்சின், கங்குலியின் தொடக்க காலத்திற்கு சென்றுவிட்டதோ என்று இப்போதெல்லாம் நினைக்கத் தோன்றுகிறது. சச்சினும், கங்குலியும் மூச்சைப் போட்டு சதம் அடித்தும் இந்திய அணி 273 ரன்கள் மட்டுமே அடித்திருக்கும். ஏனெனில், அவ்வளவு மோசமான நடுவரிசையும், பின் நடுவரிசையும் கொண்ட அணியாக இந்தியா இருக்கும். அவர்கள் இருவரும் கஷ்டப்பட்டு அடித்ததை, கேரி கிறிஸ்டன் தனி ஆளாக 144 ரன்கள் அடித்து, மேட்சை விரைவில் முடித்து விடுவார்.
அப்படிப்பட்ட ஒரு இந்திய அணியின் காலத்திற்கு இந்தியா சென்றுவிட்டதா? என்றே தோன்றுகிறது. நேற்றையப் போட்டியில், ஒரு சர்ச்சையான அவுட்டால் பலியாக்கப்பட்ட ரோஹித், 18 ரன்களில் வெளியேற, வழக்கம் போல் லோகேஷ் ராகுல் மிக நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பிறகு, ஹோல்டரின் அற்புதமான இன் ஸ்விங் பந்தில், 48 ரன்களில் லோகேஷ் ராகுல் போல்டானார். அவர் அவுட்டான போது, இந்திய அணியின் ஸ்கோர் 20.4 ஓவரில், 98-2.
அதன்பின் களமிறங்கிய விஜய் ஷங்கர் இம்முறையும் தேர்வுக் குழுவை ஏமாற்றி, 14 ரன்களில் ரோச் பந்துவீச்சில் கீப்பர் கேட்ச் ஆனார். தொடர்ந்து களமிறங்கிய கேதர் ஜாதவ் 7 ரன்களில் அவுட்டாக, இந்திய அணியின் நடு வரிசை பலவீனம், மீண்டும் வெட்டவெளிச்சமானது.
பிறகு கோலியுடன் கூட்டணி அமைத்த தோனி, வழக்கம் போலவே மிக பொறுமையான இன்னிங்சை வெளிப்படுத்தினார். ஒருக்கட்டத்தில், 72 ரன்களில் கோலி அவுட்டாக, தோனி - பாண்டியா இணை பொறுப்பை ஏற்றுக் கொண்டது. பாண்டியா 46 ரன்களில் காட்ரல் ஓவரில் வெளியேற, கடைசி வரை களத்தில் நின்ற தோனி, 61 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார். இதில், கடைசி ஓவரில் மட்டும் அவர் அடித்த ரன்கள் 16. இதனால், இந்திய அணி 50 ஓவர்களில், 7 விக்கெட் இழப்பிற்கு 268 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 34.2-வது ஓவரில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 143 ரன்களுக்கு சுருண்டது. இந்தியா சார்பில் முகமது ஷமி, 6.2 ஓவர்கள் வீசி 16 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
6 ஓவர்கள் வீசிய பும்ரா, 9 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். சாஹால் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்தியா 125 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை பதிவு செய்தது.
நேற்றைய போட்டியை பற்றி பேச, இந்த தகவலே போதும் என நினைக்கிறேன். ஆனால், இதைத் தாண்டிபேச நிறைய விஷயம் இருக்கிறது என்பதே உண்மை.
முதல் விஷயம் : விராட் கோலியின் தடுமாற்றம்.
தலைப்பு பார்க்க சற்று ஆச்சர்யமாக தான் இருக்கும். ஆனால், அது உண்மை தான். இந்திய கேப்டன் விராட் கோலி தடுமாறுகிறார் தான். ரன்களை அடிக்க அல்ல... 70 ரன்களுக்கு மேல் அடித்தும், அதை சதமாக மாற்ற முடியாமல் தவிக்கிறார். விராட் கோலி இந்த உலகக் கோப்பையில் வரிசையாக நான்கு அரைசதங்களை அடித்திருக்கிறார். ஆனால், அதில் ஒன்றைக் கூட அவரால் சதமாக மாற்ற முடியவில்லை.
அதுமட்டுமின்றி, அவரது ஸ்டிரைக் ரேட்டில் சுணக்கம் ஏற்பட்டு இருப்பதையும் நம்மால் காண முடிகிறது. நேற்றைய போட்டியை விடவும், இக்கட்டான சூழ்நிலையில் பல போட்டிகளில் களமிறங்கி இருக்கும் கோலி, தனது வழக்கமான அதிரடியான ஆட்டத்தையே வெளிப்படுத்தி ஆளுமை செலுத்தி இருக்கிறார். ஆனால், சமீப நாட்களாக அவர் சிறப்பாக விளையாடுகிறாரே தவிர, அவரால் ஆளுமை செலுத்த முடியவில்லை.
இரண்டாவது விஷயம்: தோனி
தோனி... தோனி பற்றி பேச நிறைய உள்ளது. ஆனால், சுருக்கமாகவே முடித்துக் கொள்ளலாம். அனைவரும் தோனியின் பொறுமையான ஆட்டத்தை விமர்சனம் செய்கிறார்கள். தோனி ஓய்வு பெற வேண்டும் என வலியுறுத்துகிறார்கள். தோனி ஓய்வுப் பெற வேண்டிய வயதில் உள்ளார் என்பது உண்மை தான். ஆனால், அவரது திறன் குறைத்துவிட்டதாக கூறுவது அப்பட்டமான முட்டாள் தனம் கலந்த கூற்று எனலாம். அவரது திறன் குறைந்து இருந்தால், ஓஷானோ தாமஸ் வீசிய கடைசி ஓவரில், இரண்டு சிக்ஸர்களை பறக்க விட்டிருக்க மாட்டார்.
இங்கே, இவரது திறன் மீது நமக்கு சந்தேகம் இல்லை. அவரது நோக்கம் மீதே நமக்கு சந்தேகம் எழுகிறது. பேட்டிங் செய்ய வரும் போது அவரது நோக்கம் என்ன, வந்து செட் ஆகி விளையாடும் போதும் அவரது நோக்கம் என்ன, முடிக்கும் போது அவரது நோக்கம் என்ன என்பதே நமது கேள்வி.
விக்கெட்டுகள் ஒருபக்கம் சரியும் போது, அச்சரிவைத் தடுக்க நங்கூரம் போட்டு நிற்பது ஒரு ரகம். அந்த நங்கூரத்தை, 49வது ஓவர் வரை அவர் போடுவது எந்த ரகம்? 50வது ஓவரில் அவர் 16 ரன்கள் அடித்தார் சரி... அதனை 47வது ஓவரில் இருந்தே அவர் செய்யத் தொடங்கி இருக்கலாமே. நேற்றைய போட்டியிலாவது, தோனிக்கு பிறகு அடிக்க பேட்ஸ்மேன் இல்லை என்பதால், அவர் கடைசி ஓவரில் மட்டும் அடித்தார் என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால், தோனி, இதைத் தான் பெரும்பாலான போட்டிகளில் கடைப்பிடித்து வருகிறார்.
பேட்டையே பிடிக்கத் தெரியாத சில பந்து வீச்சாளர்களுக்கு, 49வது ஓவரில் சிங்கிள் கொடுத்தால், என்னவென்று சொல்வது? தோனியின் பேட்டிங்கை பார்க்கும் போது, அவர் மினிமம் கியாரண்டி கிரிக்கெட்டராக தன்னை உருமாற்றிக் கொண்டாரோ என்ற ஐயம் எழுகிறது. அதாவது, களத்திற்கு செல்வோம், 40 ரன்கள் அடிப்போம் (எத்தனை பந்துகள் என்பதற்கு கணக்கில்லை). முடிந்தால் கடைசிக் கட்டத்தில் அடிப்போம். இல்லையேல், 40 ரன்களில் வந்துவிடுவோம் என்று, மினியம் கியாரண்டி கிரிக்கெட்டராக ஆகிவிட்டார் போல. அவரால் பெரிய லாபமும் இல்லை, நஷ்டமும் இல்லை என்பதைப் போல.
ஆனால், ஒன்று உறுதி. தோனிக்கான நேரம் வந்துவிட்டது. அதை அவர் புரிந்து கொள்வார் என நம்புவோம்.
இறுதியாக,
மூன்றாவது விஷயம் : இந்திய அணி.
இந்திய அணியின் தற்போதைய கட்டமைப்பை நினைத்தால் உண்மையில் பயமாக இருக்கிறது. தோனி கேப்டனாக இருந்த போது, அவர் தனக்கென்று ஒரு அணியை உருவாக்கி வைத்திருந்தார். அதனை மிக பலமான செதுக்கி வைத்திருந்தார். ரோஹித், தவான், யுவராஜ், ரெய்னா, ஜடேஜா, அஷ்வின் என்று தனக்கென்று ஒரு அணியை கட்டமைத்து, அந்த அணியை வைத்தே வெற்றி வாகை சூடினார். அந்த 'தனக்கென்ற' அணியை கோலி உருவாக்கத் தவறிவிட்டாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. இன்னும் சொல்லப் போனால், கோலியால் எந்த வீரர் திறமையானவர் என்பதை அறிவதில் சிக்கல் இருக்கிறதோ என்றும் தோன்றுகிறது. இல்லையெனில், விஜய் ஷங்கர், கேதர் ஜாதவ் போன்ற பிளேயர்களுக்கு உலகக் கோப்பை மாதிரியான பிரம்மாண்ட தொடர்களில் எப்படி வாய்ப்பு கொடுத்திருப்பார்?
விளைவு, ரோஹித், கோலி அவுட்டானால், இந்தியாவின் நிலைமை அவ்வளவு தான் என்று உருமாறி விட்டது. எதிரணி பவுலர்கள், இந்திய அணியின் மிடில் ஆர்டர் தான் எங்கள் இலக்கு என்று வெளிப்படையாகவே சொல்லும் அளவுக்கு மோசமாக வந்துவிட்டது இந்திய அணியில் நடுவரிசை மற்றும் பின் நடுவரிசை. தோனியால் முன்பு போல் செயல்பட முடியவில்லை. பாண்டியா தன்னால் முடிந்த பங்களிப்பை அளிக்கிறார்.
குறைந்தபட்சம் ரெய்னாவையாவது கோலி தயார் செய்திருக்க வேண்டும்.
இந்த உலகக் கோப்பையில் இதுவரை இந்தியா தோற்காத அணியாக இருக்கலாம். ஆனால், அது இந்தியாவின் முழுத் திறமையால் அல்ல, எதிரணியின் மோசமான செயல்பாடுகளால் தான்.
இப்போது இந்திய அணியன் பலம் என்றால் அது பவுலிங் மட்டுமே. ஒருவேளை, இந்தியா உலகக் கோப்பையை வென்றாலும் கூட, அது இந்தியாவின் பவுலிங்கால் தான் சாத்தியமாகும் என்பதே உண்மை!.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.