உலகக் கோப்பை கிரிக்கெட் 2019 தொடரில், பயிற்சிப் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது என்பதே பல ரசிகர்களுக்கு இன்னமும் தெரியவில்லை. அதில், விளையாடிய இந்தியா படு மோசமாக தோற்றிருப்பது எத்தனை பேருக்கு தெரியும்?
ஆம், நேற்று(மே.25) இரு பயிற்சிப் போட்டிகள் நடைபெற்றது.
ஒன்றில், நடப்பு உலக சாம்பியன் ஆஸ்திரேலியா, உலகக் கோப்பைத் தொடரை நடத்தும் இங்கிலாந்தை எதிர் கொள்ள மற்றொன்றில் இந்தியாவும் நியூசிலாந்து மோதின.
ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து
சவுத்தாம்ப்டன் நகரில் நடைபெற்ற இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஆரோன் ஃபின்ச் ஆஸ்திரேலியா 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 297 ரன்கள் எடுத்தது. இதில், ஹாட் நியூஸ் என்னவெனில், Ball Tampering விவகாரத்தில் சிக்கி ஒரு வருட தடைக் காலத்திற்கு பிறகு அணிக்கு திரும்பிய ஸ்டீவன் ஸ்மித் சதம் விளாசியது தான். (வந்துட்டான்....வந்துட்டான்....வந்துட்டான்.... பேக்கிரவுண்டில் KGF தீம் மியூசிக்கை பிளே பண்ணிக்கோங்க).
102 பந்துகளில் 116 ரன்கள் எடுத்தார் ஸ்மித்.
அதே போன்று, தடையில் இருந்து அணிக்கு திரும்பிய டேவிட் வார்னரும் நேற்று 55 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார்.
பிறகு, களமிறங்கிய இங்கிலாந்து 49.3 ஓவரில் 285 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜேம்ஸ் வின்ஸ் 64 ரன்களும், ஜோஸ் பட்லர் 52 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். சமீப காலங்களில் ஒருநாள் போட்டிகளில் ஆக்ரோஷம் காட்டி வரும் இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவிடம் இப்போது அடி வாங்கியிருக்கிறது.
இந்தியா vs நியூசிலாந்து
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நியூசிலாந்தை எதிர் கொண்டது. டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணி, 39.2 ஓவரில் 179 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 54 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து 37.1வது ஓவரில் 4 விக்கெட் மட்டும் இழந்து 180 ரன்கள் எடுத்து வென்றது.
தக்காளி, இந்த வேர்ல்டு கப்பு நமக்கு தாண்டா!!