நியூசிலாந்து
நிலை: 1
புள்ளிகள்: 11 போட்டிகளில் 6 புள்ளிகள்
மீதமுள்ள போட்டிகள்: 3 (vs பாகிஸ்தான், vs ஆஸ்திரேலியா, vs இங்கிலாந்து)
லீக் சுற்றில் இருந்து வெளியேறும் வாய்ப்பு: ஆபத்து இல்லை
நியூசிலாந்து எதிர்பார்த்ததைவிட, இந்த உலகக் கோப்பைத் தொடரில் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறது. பயிற்சிப் போட்டியில் இந்தியாவை துவம்சம் செய்த நியூஸி., லீக் சுற்றின் தொடக்க போட்டிகளில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளை ஊதித் தள்ளியது. தவிர, தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளை வீழ்த்தி, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய மூன்று அணிகளை நியூஸி., சந்திக்கவிருக்கிறது. இதில், ஒரு போட்டியில் அந்த அணி வெற்றிப் பெற்றாலே போதும். ஒருவேளை, மூன்று போட்டிகளிலும் தோற்றாலும் கூட, வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளின் முடிவுகளை பொறுத்து, நியூஸி., அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்பிருக்கிறது.
ஆஸ்திரேலியா
நிலை:2
புள்ளிகள் : 6 போட்டிகளில் 10 புள்ளிகள்
மீதமுள்ள போட்டிகள்: 3 (vs இங்கிலாந்து, vs நியூசிலாந்து, vs தென்னாப்பிரிக்கா)
லீக் சுற்றில் இருந்து வெளியேறும் வாய்ப்பு: ஆபத்து இல்லை
புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ள நடப்பு உலக சாம்பியன் ஆஸி.,க்கும் அரையிறுதிக்கு முன்னேற தேவைப்படுவது ஒரேயொரு வெற்றி மட்டுமே. ஒருவேளை, இலங்கை தனது மீதமுள்ள அனைத்துப் போட்டிகளிலும் வெற்றிப் பெற்றால், ஆஸ்திரேலியாவை 12 புள்ளிகளுடன் சமன் செய்வார்கள். அப்போது, அதிக ரன் ரேட் வைத்திருக்கும் அணி அரையிறுதிக்கு முன்னேறும்.
இந்தியா
நிலை : 3
புள்ளிகள்: 5 போட்டிகளில் 9 புள்ளிகள்
மீதமுள்ள போட்டிகள்: 4 (வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, வங்கதேசம், இலங்கை)
லீக் சுற்றில் இருந்து வெளியேறும் வாய்ப்பு: ஆபத்து இல்லை
இந்தியாவை பொறுத்தவரை, மீதமுள்ள நான்கு போட்டிகளில் இரண்டில் வெற்றிப் பெற்றால் கூட அரையிறுதிக்கு முன்னேறிவிடலாம். ஆனால், ஒரு போட்டியில் மட்டும் இந்தியா வெற்றிப் பெற்றால், அப்போது சிக்கல் உருவாகும். அப்படி நடக்குமாயின், இங்கிலாந்து தனது மீதமுள்ள 3 போட்டிகளில் ஒன்றில் மட்டும் வெற்றிப் பெற வேண்டும். இலங்கை இரண்டு போட்டிகளிலும் வெல்ல வேண்டும். அப்படி நடந்தால், இந்தியா அரையிறுதிக்கு முன்னேறலாம்.
இங்கிலாந்து
நிலை : 4
புள்ளிகள்: 6 போட்டிகளில் 8 புள்ளிகள்
மீதமுள்ள போட்டிகள்: 3 (இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து)
லீக் சுற்றில் இருந்து வெளியேறும் வாய்ப்பு: சிக்கல்
பெரும் பலத்தொடு, பல நிபுணர்களின் முதல் சாய்ஸோடு களமிறங்கிய இங்கிலாந்து அணி, ஆசிய அணிகளான இலங்கை மற்றும் பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்திருக்கிறது. அடுத்த மூன்று போட்டிகளில், இரண்டில் வென்றால் அரையிறுதிக்கு முன்னேறிவிடலாம். இன்னும் 3 புள்ளிகள் எடுத்தால் கூட அரையிறுதியில் அவர்களை பார்க்க முடியும்.
ஆனால், இங்கு சிக்கல் என்னவெனில், இங்கிலாந்து எதிர்கொள்ளப் போவது இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற பலம் வாய்ந்த அணிகளை. கடந்த 27 வருடங்களில், உலகக் கோப்பையில் இம்மூன்று அணிகளையும் இங்கிலாந்து வென்றதேயில்லை என்பது இங்கு கூடுதல் தகவல்.
வங்கதேசம்
நிலை : 5
புள்ளிகள்: 7 போட்டிகளில் 7 புள்ளிகள்
மீதமுள்ள போட்டிகள்: 2 (இந்தியா, பாகிஸ்தான்)
லீக் சுற்றில் இருந்து வெளியேறும் வாய்ப்பு: நிச்சயமற்ற தன்மை
எதிர்வரும் இரண்டு போட்டிகளிலும், நிச்சயம் வங்கதேசம் வென்றாக வேண்டும். அதேசமயம், மற்ற அணிகளின் முடிவுகளுக்காகவும் அவர்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.
இலங்கை
நிலை : 6
புள்ளிகள்: 6 போட்டிகளில் 6 புள்ளிகள்
மீதமுள்ள போட்டிகள்: 3 (தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இந்தியா)
லீக் சுற்றில் இருந்து வெளியேறும் வாய்ப்பு: கடினம்
மீதமுள்ள அனைத்துப் போட்டிகளிலும் கட்டாயம் வெற்றிப் பெற வேண்டும். இரண்டு போட்டியில் வென்றால் கூட லேசாக வாய்ப்புள்ளது. பல் பிடுங்கிய பாம்பாக உள்ள தென்னாப்பிரிக்கா மற்றும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தாத வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி இலங்கைக்கு மிக முக்கியமானதாகும். அதேசமயம், 2017 சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இந்தியாவை 300 ரன்களுக்கும் மேல் சேஸ் செய்து இலங்கை வெற்றிப் பெற்றதையும் நாம் மறந்துவிடக் கூடாது.
பாகிஸ்தான்
நிலை: 7
புள்ளிகள்: ஆறு போட்டிகளில் 5 புள்ளிகள்
மீதமுள்ள போட்டிகள்: 3 (நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், வங்கதேசம்)
லீக் சுற்றில் இருந்து வெளியேறும் வாய்ப்பு: நிச்சயமற்ற தன்மை
மீதமுள்ள 3 போட்டிகளில் வெற்றிப் பெறுவதோடு மட்டுமில்லாமல், மாபெரும் ரன்கள் வித்தியாசத்திலோ, அதிக விக்கெட்டுகள் வித்தியாசத்திலோ வெற்றிப் பெற வேண்டும். ரன் ரேட்டை எகிற வைக்க வேண்டும். இல்லையெனில், உலகக் கோப்பையில் இருந்து வெளியேற நேரிடும்.
ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் உலகக் கோப்பையில் இருந்து வெளியேறி இருப்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.