2023-ம் ஆண்டு உலககோப்பை இறுதிப்போட்டி நாளை அகமதாபாத் நகரில் நடைபெற உள்ள நிலையில், அகமதாபாத் வானிலை நிலவரம் எப்படி இருக்கும் என்பது குறித்து வெதர்மேன் வெளியிட்டுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
2023 உலககோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 5-ந் தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் லீக் மற்றும் அரையிறுதி சுற்றுகளின் முடிவில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இதனையத்து நாளை (நவம்பர் 19) அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ள உலககோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றனர்.
இந்த போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி கோப்பையை வெல்ல வேண்டும் என்பது இந்தியர்களின் எதிர்பார்ப்பாக உள்ள நிலையில், இந்த போட்டி உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே நாளை போட்டி நடைபெறும் அகமதாபாத் நகரின் வானிலை நிலவரம் எப்படி இருக்கும் என்பது குறித்து வெதர்மேன் கணித்துள்ளார். அதன்படி, அகமதாபாத்தில் வழக்கமான குளிர்காலத்திற்கு முந்தைய வானிலை நிலவும் என்று கூறப்படுகிறது.
இது குறித்து வானிலை.காமில் பகிரப்பட்ட அறிவிப்பின்படி, உலககோப்பை இறுதி ஆட்டம் பகல்-இரவு போட்டியாக உள்ள நிலையில், போட்டி தொடங்கும் போது, மதியம் 2 மணியளவில் வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் இன்னிங்ஸ் முடிவடையும் போது, வெப்பநிலை சாய்ந்து கொண்டே இருக்கும், மாலை 6 மணியளவில் சுமார் 30 டிகிரி செல்சியஸில் இருக்கும். சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு, வெப்பநிலை மேலும் குறைந்து, இரவு 9 மணிக்குள் 25 டிகிரி செல்சியஸை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாளைய தினத்தில் வானம் மேக மூட்டம் இல்லாமல் பெரும்பாலும் வெயிலாக இருக்கும். மழைக்கான வாய்ப்புகள் இல்லை, ஆனால் ஈரப்பதம் சராசரியாக 45 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காற்றின் வேகம் பெரும்பாலும் தெற்கு மற்றும் தென்மேற்கு திசையில் மணிக்கு 5-11 கிமீ வேகத்தில் இருக்கும். போட்டியின் இரண்டாவது பாதியில் பனி காரணி வரும் வாய்ப்பு இருக்கும். ஆனால் போட்டி எந்தவித இடையூறும் இன்றி நடைபெற வாய்ப்புள்ளது.
ஈரப்பதம், காற்று, வறட்சி மற்றும் மழைப்பொழிவு போன்ற நிலைமைகள் விளையாட்டின் முடிவை பாதிக்கலாம் மற்றும் வானிலை எப்போதும் ஒரு அணிக்கு சாதகமாகவும் ஒரு அணிக்கு பாதகமாகவும் இருக்கும் என்பதால், கிரிக்கெட்டில் வானிலை ஒரு முக்கிய காரணியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
பெரும்பாலான இந்திய நகரங்களைப் போலவே அகமதாபாத், வானிலையில் அசாதாரணமான திருப்பத்தை அரிதாகவே காண்கிறது. இருப்பினும், நடப்பு ஆண்டில் இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) இறுதிப் போட்டியை சீர்குலைத்த பருவமழை, இறுதியில் ரிசர்வ் நாளில் விளையாடுவதற்கு வழிவகுத்தை மறக்க முடியாது. அதேபோல் நாளை மழைக்கான முன்னறிவிப்பு இல்லை என்றாலும், நவம்பர் 19 ஆம் தேதி போட்டியை முடிக்க முடியாவிட்டால், நவம்பர் 20 ஆம் தேதி போட்டியை நடத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ரிசர்வ் டே வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“