Mitchell Starc | india-vs-australia | worldcup | chepauk: 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 10 அணிகள் களமாடியுள்ள இந்த தொடரில் தற்போது லீக் சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. இந்த சுற்றில் ரவுண்ட்-ராபின் முறையில் ஒரு அணி மற்ற 9 அணிகளுடன் நேருக்கு நேர் மோதும்.
இந்நிலையில், நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி அதன் தொடக்கப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை நாளை ஞாயிற்றுக்கிழமை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியானது சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் பிற்பகல் 2 மணிக்கு நடக்கிறது. இதற்காக நேற்று முன்தினம் முதல் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.
சென்னையில் மீண்டும் அடி வாங்குவாரா ஸ்டார்க்
சென்னையில் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் கடைசியாக கடந்த மார்ச் மாதத்தில் மோதின. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்த தொடரில் களமாடிய ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான மிட்சல் ஸ்டார்க், மும்பையில் 3 விக்கெட்டுகளையும், விசாகப்பட்டினத்தில் 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றி மிரட்டினார்.
குறிப்பாக விசாகப்பட்டினத்தில் நடந்த போட்டியில் அவரின் வேகத்தாக்குதலை எதிர்கொள்ள போராடிய இந்திய டாப் ஆடர் சீட்டு கட்டு போல் மளமளவென சரிந்தது. கில் பூஜ்ஜியத்திலும், கேப்டன் ரோகித் 13 ரன்னிலும், சூர்யகுமார் யாதவ் பூஜ்ஜியத்திலும், கே.எல் ராகுல் 9 ரன்னிலும் என சொற்ப ரன்னுக்கு விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினர். இது இந்தியாவுக்கு பெரும் பின்னடைவை கொடுக்கவே இந்தியா 117 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆகியது.
/indian-express-tamil/media/post_attachments/c86bf9a5-dec.jpg)
பந்தை மேலே பிட்ச் செய்வது, வலது கை பேட்ஸ்மேன்களுக்கு மீண்டும் தாமதமாக ஸ்விங் செய்வது, சிலநேரங்களில் கூர்மையான வேகத்தில் மிகவும் தாமதமாக ஸ்விங் செய்வது என ஸ்டார்க் மிரட்டி இருந்தார். உதாரணமாக, அந்த ஒருநாள் தொடரில், ரோகித்த் சர்மா மற்றும் சுப்மான் கில் ஆகியோர் வலது கையை விட்டு வெளியேறிய பந்துகளுக்கு உடலில் இருந்து விலகி விளையாடி கேட்ச் கொடுத்தனர். ஸ்டார்க் ஆடு புலி ஆட்டத்தில் வல்லவர் என்பதை நிரூபித்து இருந்தார்.
ஆனால், சென்னைக்கு வரும் போது அவரது திட்டம் பலிக்கவில்லை. மெதுவான ஆடுகளத்தில் ஸ்டார்க்கின் வேகம் எடுபடவில்லை. அவரது பந்துகளை இந்திய வீரர்கள் பவுண்டரி, சிக்சருக்கு பறக்கவிட்டனர். கடைசி வரை விக்கெட் எடுக்காத ஸ்டார்க் 10 ஓவர்களில் 67 ரன்களை விட்டுக்கொடுத்திருந்தார். இதேபோல் நாளைய போட்டியின் போது நிகழுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
/indian-express-tamil/media/post_attachments/4b0f5106-259.jpg)
ஸ்டார்க் சமீபத்தில் இடுப்பு காயத்திலிருந்து திரும்பியிருந்தாலும், கடந்த சனிக்கிழமை நடந்த பயிற்சி ஆட்டத்தில் நெதர்லாந்திற்கு எதிரான ஹாட்ரிக் விக்கெட் எடுத்து, தான் அதே ஃபார்மில் தான் உள்ளதை வெளியுலகிற்கு வெளிக்காட்டியுள்ளார். சென்னையில் நேற்று லேசான மழை பெய்த பின்னர் கேப்டன் பாட் கம்மின்ஸுடன் ஸ்டார்க் 40 நிமிட பந்துவீச்சு பயிற்சியை மேற்கொண்டிருந்தார். எனவே, அதே உத்வேகத்தில் நாளையும் களமாடுவார் என எதிர்பார்க்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“