உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அரையிறுதி ஆட்டங்களில் இந்தியா - நியூசிலாந்து, ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளன. அடுத்து அரையிறுதிச் சுற்று நடைபெற உள்ளது. ஆஸ்திரேலியா தன் கடைசி லீக் ச போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியிடம் தோல்வி அடைந்து புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்தது. இதன்மூலம், இந்தியா முதல் இடத்திற்கு முன்னேறியது.
ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி இருந்தால், இது அப்படியே தலை கீழாக மாறி இருக்கும். இந்தியா - இங்கிலாந்து அணியையும், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணியையும் சந்தித்து இருக்கும்.
லீக் போட்டிகளில், இங்கிலாந்து அணி சற்று சறுக்கினாலும், கடைசி இரண்டு போட்டிகளில், இந்தியா மற்றும் நியூாசிலாந்து அணியை வீழ்த்தியது. மறுபுறம், நியூசிலாந்து அணி தொடர்ந்து வெற்றிகளை குவித்து வந்தநிலையில், கடைசியாக விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது.
நியூசிலாந்து அணி மொத்தமாக பார்ம் அவுட் ஆனது போன்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், இந்திய அணிக்கு நியூசிலாந்து அணியுடனான அரையிறுதி சற்றே எளிதான ஒன்றாகவே இருக்கும். போட்டிக்கு முன்பு இரு அணிகளில், நியூசிலாந்து அணிக்குத் தான் அழுத்தம் அதிகமாக இருக்கும்.