உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. 10 அணிகள் பங்கேற்றுள்ள தொடரில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் முறையே 14,12 புள்ளிகள் உடன் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. ஆஸ்திரேலிய அணி 10 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது. எனினும் தற்போது 4-வது இடத்தைப் பெற்று அரையிறுதிக்கு நுழைவது யார் என்பதில் தான் போட்டி உள்ளது.
நேற்று(நவ.4) முறையே 4-வது மற்றும் 5-வது இடத்தில் உள்ள நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 401 ரன்கள் குவித்தது. இமாலய இலக்கை துரத்திய பாகிஸ்தான் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்து வந்தது. இருப்பினும் மழையால் போட்டி பாதிக்கப்பட்டது. இதையடுத்து டக்வொர்த் லிவிஸ் விதிப்படி 21 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. 8 புள்ளிகள் +0.036 நெட் ரன் ரேட் பெற்று அதே 5-ம் இடத்தில் உள்ளது. நியூசிலாந்து அணியும் 8 புள்ளிகள் உடன் +0.398 நெட் ரன் ரேட் உடன் 4-வது இடத்தில் உள்ளது.
நியூசிலாந்து அணியுடன் பாகிஸ்தான் வெற்றி பெற்றும் நெட் ரன் ரேட் அடிப்படையில் பின் தங்கி உள்ளது. இதனால் பாகிஸ்தான் அரையிறுதி வாய்ப்பு இன்னும் உறுதி செய்யப்பட வில்லை.
இன்னும் இருக்கும் வாய்ப்புகள்
நியூசிலாந்து அணி அடுத்து இலங்கை அணிக்கு எதிராக ஆட உள்ளது. அந்தப் போட்டியில் நியூசிலாந்து பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் 10 புள்ளிகள் பெற்று அதிக நெட் ரன் ரேட் பெற வேண்டும். அதே போல, பாகிஸ்தான் அணி அடுத்து இங்கிலாந்து அணியுடன் மோத வேண்டும். அந்தப் போட்டியில் வென்றால் 10 புள்ளிகள் பெறும். ஆனால், நியூசிலாந்து அணியை விட அதிக நெட் ரன் ரேட் பெற வேண்டும். அப்போது தான் அந்த அணியை விட முன்னே செல்ல முடியும்.
பலம் பெறும் ஆப்கானிஸ்தான்
இருப்பினும் இன்னும் சிக்கல் தீரவில்லை. ஏன் எனில் ஆப்கானிஸ்தான் அணி தற்போது நன்றாக விளையாடி வருகிறது. 7 போட்டிகளில் 4 வெற்றி 3 தோல்விகளுடன் -0.330 என்ற நெட் ரன் ரேட் அடிப்படையில் 6-வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் அணிகளுக்கு ஒரு போட்டி மட்டுமே லீக் சுற்றில் மீதமுள்ள நிலையில், ஆப்கானிஸ்தான் அணிக்கு இரண்டு போட்டிகள் மீதமுள்ளன. அது ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா என்ற இரண்டு பலமான அணிகளுக்கு எதிரான போட்டி என்பது மட்டுமே ஆப்கானிஸ்தான் அணிக்கு இருக்கும் சவால்.
இந்த இரு போட்டிகளிலும் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றால் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் அரையிறுதி செல்ல முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.