ICC World Cup 2023 schedule, IND vs PAK on Oct 15 Tamil News: ஒருநாள் உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) இன்று வெளியிட்டது. அதன்படி, அக்டோபர் 5-ம் தேதி முதல் நவம்பர் 19-ம் தேதி வரை போட்டிகள் இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்திய அணியின் முதல் ஆட்டம், அக்டோபர் 8-ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. அதே நேரத்தில், ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் அக்டோபர் 15-ம் தேதி அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, போட்டிகள் தொடங்கிய 3 நாட்கள் கழித்து, 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை சென்னையில் வைத்து சந்திக்கிறது. அதன்பிறகு, அக்டோபர் 11 ஆம் தேதி ஆப்கானிஸ்தானை எதிர்கொள்ள இந்திய அணி டெல்லிக்கு செல்லும். அதைத் தொடர்ந்து அக்டோபர் 15 ஆம் தேதி அகமதாபாத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான பரபரப்பான போட்டியில் களமாடும்.
அடுத்த இரண்டு போட்டிகளில் - அக்டோபர் 19 அன்று புனேவில் வங்கதேச அணிக்கு எதிராகவும், அக்டோபர் 22 அன்று தர்மஷாலாவில் நியூசிலாந்து அணிக்கு எதிராகவும், இந்தியா விளையாடும். இதன்பிறகு, அக்டோபர் 29 அன்று லக்னோவில் இங்கிலாந்தை எதிர்கொள்வதற்கு முன் இந்திய அணிக்கு 6 நாள் இடைவெளி கிடைக்கும். அவர்களின் கடைசி மூன்று போட்டிகள் நவம்பர் 2, 5 மற்றும் 11 ஆகிய தேதிகளில் மும்பை, கொல்கத்தா மற்றும் பெங்களூருவில் நடக்கும். கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்ளும் இந்திய அணி மும்பை மற்றும் பெங்களூருவில் குவாலிபையர் 1 மற்றும் 2 அணியை எதிர்கொள்ளும்.
அட்டவணையின்படி, இந்தியா அரையிறுதிக்கு முன்னேறினால், அவர்கள் வான்கடே மைதானத்தில் விளையாடுவார்கள். இருப்பினும், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் பட்சத்தில், பாதுகாப்பு காரணங்களுக்காக அரையிறுதிப் போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும்.
அகமதாபாத்தில் இந்தியாவை எதிர்கொள்ளும் பாகிஸ்தான், ஐதராபாத் (இரண்டு), பெங்களூரு (ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து), சென்னை (ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா), மற்றும் கொல்கத்தா ( வங்கதேசம் மற்றும் இங்கிலாந்து) ஆகிய இடங்களில் தனது மற்ற லீக் ஆட்டங்களில் விளையாடுகிறது.
2023 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அட்டவணை:
இந்தியா vs ஆஸ்திரேலியா – அக்டோபர் 8 – சென்னை
இந்தியா vs ஆப்கானிஸ்தான் – அக்டோபர் 11, டெல்லி
இந்தியா vs பாகிஸ்தான் – அக்டோபர் 15, அகமதாபாத்
இந்தியா vs வங்கதேசம் – அக்டோபர் 19, புனே
இந்தியா vs நியூசிலாந்து – அக்டோபர் 22, தர்மசாலா
இந்தியா vs இங்கிலாந்து – அக்டோபர் 29, லக்னோ
இந்தியா vs குவாலிஃபையர் – நவம்பர் 2, மும்பை
இந்தியா vs தென் ஆப்ரிக்கா – நவம்பர் 5, கொல்கத்தா
இந்தியா vs குவாலிஃபையர், நவம்பர் 11, பெங்களூரு.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil