World cup Kabaddi 2020 : இந்தியாவில் இருந்து வாகா எல்லை வழியாக லாகூர் சென்றுள்ளனர் இந்திய கபடி வீரர்கள். பாகிஸ்தானில் முதன்முறையாக நடைபெறும் உலக கோப்பை கபடி சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பதற்காக இந்த வீரர்கள் பாகிஸ்தான் சென்றுள்ளனர். 10/02/2020 தேதி முதல் துவங்கும் இந்த போட்டி லாகூரில் இருக்கும் பஞ்சாப் கால்பந்து மைதானத்தில் நடைபெற உள்ளது. சில போட்டிகள் ஃபைசலாபாத் மற்றும் குஜராத் பகுதிகளிலும் நடைபெற உள்ளது. லாகூர் விடுதியில் தங்கியிருக்கும் இந்த வீரர்களுக்கு அவ்விடுதி உரிமையாளர்கள் மாலை அணிவித்து வரவேற்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இந்த போட்டியில் இந்தியர்கள் பங்கேற்க விளையாட்டுத்துறை அமைச்சகமோ, நேசனல் ஃபெடரேஷனோ அனுமதி அளிக்கவில்லை என்று இந்தியா தரப்பில் பதில் அளித்துள்ளது. இது தொடர்பாக விளையாட்டு துறை அமைச்சகம் கூறிய போது, வெளிநாடுகளில் விளையாடச் செல்லும் வீரர்களுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும், விளையாட்டுத்துறை அமைச்சகமும் அனுமதி வழங்க வேண்டும். ஆனால் இந்த வீரர்கள் யார் என்றும் தெரியவில்லை. அவர்களுக்கு இந்திய அமைச்சகம் ஏதும் அனுமதி அளிக்கவில்லை” என்றும் அறிவித்துள்ளது.
Advertisment
Advertisements
Amateur Kabbadi Federation of India (AKFI) அமைப்பின் நிர்வாகி, ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதி எஸ்.பி. கார்க் கூறுகையில் , ஏ.கே.எஃப்.ஐ பாகிஸ்தானில் விளையாட எந்த அணிக்கும் அனுமதி வழங்கவில்லை என்றும், பாகிஸ்தானிற்கு விளையாட சென்றவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“
நேசனல் ஃபெடெரேசன் விளையாட்டுத்துறை அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பும். பின்பு விளையாட்டுத்துறை அமைச்சகம் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பும். வெளியுறவுத்துறை அமைச்சகம் தான் பொலிட்டிகல் கிளியரன்ஸை வழங்கும். உள்துறை அமைச்சகம் பாதுகாப்புக்கான கிளியரன்ஸை வழங்கும். ஒரு அணிக்கு மத்திய அரசு நிதி உதவி அளிக்கின்றதோ இல்லையோ இது தான் நடைமுறை.
பாகிஸ்தானின் பஞ்சாப் விளையாட்டுத்துறை அமைச்சர் ராய் தைமூர் கான் பாட்டி இந்திய வீரர்களை வரவேற்று விடுதியில் தங்க வைத்துள்ளார். இந்தியாவில் இருந்து வாகா எல்லை வழியாக பாகிஸ்தானுக்குள் சென்ற வீரர்களை பாதுகாப்பு வாகனம் வாயிலாக ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றனர். 2010 முதல் 2019 ஆண்டு வரை 6 முறை உலக கோப்பை கபடி சாம்பியன்ஷிப் போட்டியை இந்தியா நடத்தியுள்ளது. 6 போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இதில் 2010, 2012, 2013 மற்றும் 2014 ஆண்டுகளில் இறுதி போட்டியில் பாகிஸ்தானை தோற்கடித்து இந்திய வெற்றியை கைப்பற்றியது.
இந்த முறை பாகிஸ்தானில் நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்க ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஈரான், அசெர்பைசான், கென்யா, சியெரா லியோன் ஆகிய நாடுகளில் இருந்து விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு ரூ. 10 மில்லியன் பரிசாக வழங்கப்படும். இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ. 7.5 மில்லியன் வழங்கப்படும்.