ஜப்பானின் கோபியில் நடைபெற்று வரும் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் உயரம் தாண்டுதல் டி63 (T63) போட்டியில் மாரியப்பன் தங்கவேலு தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
ஜப்பானில் உள்ள கோபி நகரில் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பாரா ஒலிம்பிக் சாம்பியனான சுமித் ஆன்டில், ஆடவருக்கான ஈட்டி எறிதல் போட்டியின் T64 பிரிவில் தனது உலகப் பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டார்.
அதேநேரம் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு ஜப்பானின் கோபியில் நடந்து வரும் 2024 உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். ரியோ பாரா ஒலிம்பிக் சாம்பியனான மாரியப்பன் தங்கவேலு டி63 பிரிவில் 1.88 மீட்டர் உயரத்தைத் தாண்டி தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
முன்னதாக அமெரிக்காவைச் சேர்ந்த எஸ்ரா ஃப்ரீச் (1.85 மீ) மற்றும் சாம் க்ரூ (1.82 மீ) ஆகியோரின் சாதனையை மாரியப்பன் தங்கவேலு முறியடித்துள்ளார். மற்ற இரண்டு இந்திய வீரர்களான வருண் பாடி மற்றும் ராம்சிங்பாய் படியார் ஆகியோர் முறையே 4 மற்றும் 7வது இடங்களைப் பிடித்துள்ளனர்.
இந்நிலையில், தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுக்கு தமிழக தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டி.ஆர்.பி ராஜா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஜப்பானின் கோபியில் நடைபெற்று வரும் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் (WorldParaAthletics Championship) போட்டியில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் நமது மாரியப்பன் தங்கவேலு தங்கம் வென்றுள்ளார், பாராட்டுகளும் வாழ்த்துக்களும்,” என்று குறிப்பிட்டு வாழ்த்தியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“