ரோகித் சர்மா தலைமையிலான இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. சொந்த மண்ணில் நடந்து வரும் இந்தத் தொடரில் பெங்களூருவில் நடந்த முதல் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியுற்றது. தற்போது, இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி இன்று வியாழக்கிழமை முதல் புனேவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 2023 - 2025 ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி 2025 ஜூன் மாதத்தில் இங்கிலாந்தில் நடைபெற இருக்கிறது. இந்த இறுதிப் போட்டிக்கு தகுதி பெற ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்க வேண்டும். தற்போதைய தரவரிசைப் படி நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. அடுத்ததாக இந்திய அணி உள்ளது.
முன்னதாக, இந்தப் பட்டியலில் இந்திய அணி முதலிடத்தில் இருந்தது. நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வியுற்றால் 2ம் இடத்துக்கு சரிந்தது. இந்தியா மீண்டும் முதலிடத்துக்கு முன்னேற, இப்போது நடக்கும் நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் அடுத்த 2 போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும்.
இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ஆட இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் நிலையில், அந்த தொடரிலும் வெற்றிகளைப் பெற வேண்டும். நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியிலும் இந்தியா தோல்வியுற்றால், மீதமுள்ள 6 டெஸ்ட் போட்டிகளில் 4ல் கண்டிப்பாக வெற்றி பெற, ஒரு போட்டியில் தோல்வியுற்றால் கூட இந்தியாவுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும். மேலும், மற்ற அணிகளின் வெற்றி, தோல்விகளை பொறுத்தே இந்தியாவுக்கு வாய்ப்பு இருக்கும்.
கடைசியாக நடந்த இரண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலும் ஆடிய இந்திய அணி தோல்வியைத் தழுவியது. இம்முறையும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்து இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்பதே ரசிகர்களின் ஆவலாக இருக்கிறது. அதற்கான வாய்ப்பு அமையுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“