Advertisment

WTCFinal 2021: 170 ரன்னில் சுருண்ட இந்தியா; வெற்றி வாகை சூடிய நியூசிலாந்து...!

World Test Championship Final 2021 india vs new zealand highlights: சவுத்தம்டனில் நடந்த முதலாவது உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிபோட்டியில் இந்தியாவை வீழ்த்திய நியூசிலாந்து அணி சாம்பியன் பட்டத்தை சொந்தமாக்கியது.

author-image
WebDesk
New Update
World Test Championship Final

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி ஜூன் 18 முதல் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி இங்கிலாந்தின் சவுத்தாம்டன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஐசிசியின் டெஸ்ட் தர வரிசையில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதி வருகின்றன.

Advertisment

பலம் வாய்ந்த இரு அணிகள் மோதி வருவதால், ரசிகர்களிடையே போட்டி பெரிய எதிர்ப்பார்ப்பை தூண்டியுள்ளது. 144 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறுகிறது. இதில் வெற்றி பெற்று பதக்கம் வெல்லும் அணி வரலாற்றில் முத்திரை பதிக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

இந்தநிலையில், இந்தியா நியூசிலாந்து இடையேயான இந்த போட்டி ஜூன் 18 தேதி ஆரம்பமானது. ஆனால் முதல் நாள் ஆட்டம் மழையின் காரணமாக நடைபெறவில்லை. இரண்டாம் நாள் மழை இல்லாததால் டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற நியூலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

இந்திய அணிக்காக கோலி தலைமையில், ரோகித் ஷர்மா, சுப்மன் கில், புஜாரா, ரகானே, ரிஷப் பண்ட், ஜடேஜா, அஸ்வின், இஷாந்த் ஷர்மா, மொகமது ஷமி மற்றும் பும்ரா ஆடும் லெவனில் இடம் பெற்றுள்ளனர்.

இதேபோல் நியூசிலாந்து அணியில் வில்லியம்சன் தலைமையில், டாம் லாதம், தேவோன் கான்வே, ராஸ் டெய்லர், ஹென்றி நிக்கோலஸ், வாட்லிங், கிராண்ட்ஹோம், ஜேமிஷன், வாக்னர், டிம் சவுத்தீ மற்றும் டிரெண்ட் போல்ட் ஆடும் லெவனில் இடம் பெற்றுள்ளனர்.

இந்திய அணியின் சார்பாக துவக்க ஆட்டக்காரர்கள், ரோகித் மற்றும் கில் இருவரும் களமிறங்கி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ரோகித் 34 ரன்களுக்கும், கில் 28 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

அடுத்து வந்த புஜாரா நிலைத்து நின்று ஆட முயற்சித்து 54 பந்துகளில் 8 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். பின்னர் 64.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 146 ரன்களை எடுத்திருந்தநிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது. இதனால் இரண்டாம் நாள் முடிவுக்கு வந்தது. கேப்டன் விராட் கோலி 44 ரன்களுடனும், அஜிங்க்யா ரஹானே 29 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். கேப்டன் கோலி மற்றும் ரஹானே ஜோடி ரகானே அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.நியூசிலாந்து அணியின் சார்பில் அதிகபட்சமாக டிரண்ட் போல்ட், ஜேமிசன் மற்றும் வேக்னர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் கோலி 44 ரன்களில் ஜேமிஷன் பந்தில் எல்.பி.டபுள்யூ மூலம் அவுட்டாகி வெளியேறினார். ரகானே அரை சதத்தை நூலிழையில் நழுவ விட்டு 49 ரன்களில் லாதமிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இளம் வீரர் ரிஷப் பண்ட் 4 ரன்கள் மட்டுமே எடுத்து ஜேமிஷன் பந்தில் கேட்ச் மூலம் அவுட் ஆனார். பின்னர் ஜடேஜாவுடன் இணைந்த அஸ்வின் அதிரடியாக ஆடி ஃபோர்கள் மூலம் ரன்களை குவித்தார், இருப்பினும், 27 பந்துகளில் 22 அடித்து சவுத்தீ பந்தில் லாதமிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இந்திய அணி உணவு இடைவேளையின் போது 7 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்தது.

உணவு இடைவேளை முடிந்து ஆட்டத்தை தொடர்ந்த ஜடேஜா மற்றும் இஷாந்த ஷர்மா ரன் குவிக்க முடியாமல் திணறினர். இஷாந்த் ஷர்மா 4 ரன்கள் எடுத்து ஜேமிஷன் பந்தில் டெய்லரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்த களமிறங்கிய பும்ரா முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார். ஜேமிஷன் எல்.பி.டபுள்யூ மூலம் பும்ரா விக்கெட்டை வீழ்த்தினார்.

அடுத்து களமிறங்கிய ஷமி தான் சந்தித்த ஒரே பந்தையும் ஃபோருக்கு விரட்டினார். ஏனெனில் அந்த ஓவர் முடிந்து அடுத்து ஆடிய ஜடேஜா 15 ரன்களில் போல்ட் பந்தில் வாட்லிங்கிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

இதன் மூலம் இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 217 ரன்கள் எடுத்துள்ளது. நியூசிலாந்து தரப்பில் ஜேமிஷன் 5 விக்கெட்டுகளையும், போல்ட் மற்றும் வாக்னர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், சவுத்தீ ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.

நியூசிலாந்து அணி பேட்டிங்

தொடர்ந்து களம் நியூசிலாந்து அணி அதன் முதல் இன்னிங்சைத் தொடங்கியது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக டாம் லாதம் மற்றும் தேவோன் கன்வே ஜோடி களமிறங்கியது. நிதான ஆட்டத்தை தொடர்ந்த இந்த ஜோடி அணியின் ஸ்கோரை படிப்படியாக உயர்த்தியது. பந்துவீச்சில் தொடர் தாக்குதலை தொடுத்த இந்திய அணி துவக்க ஓவர்களில் விக்கெட் எடுக்க முடியாமல் திணறியது.

எப்போதும் போல சுழலில் நெருக்கடி கொடுத்த அஸ்வின் அணி முதல் விக்கெட் எடுக்க உதவினார். அவர் வீசிய 34.2 ஓவரில் பேட்டை சுழற்ற முயன்ற டாம் லாதம் கேப்டன் கோலி வசம் சிக்கி வெளியேறினார். எனவே அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் மறுமுனையில் இருந்த தேவோன் கன்வேயுடன் ஜோடி சேர்ந்தார்.

இதற்கிடையில், அணிக்கு வலுவான அடித்தளத்தை இட்டு, தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கன்வே, தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். தொடர்ந்து அணிக்கு வலுவான சேர்க்க முயன்ற அவர் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா பந்து வீச்சில் ஷமியிடம் கேட்ச் கொடுத்தது ஆட்டமிழந்தார்.

பிறகு போதிய வெளிச்சமின்மையால் 3ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஆட்டநேரமுடிவில் நியூசிலாந்து அணி 49 ஒவர்களில் 2 விக்கெட்டை இழந்து 101 ரன்கள் சேர்த்திருந்தது. தொடர்ந்து நேற்று நடைபெறுவதாக இருந்த 4-வது நாள் ஆட்டம் தொடர் மழை காரணமாக ஒரு பந்துகூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து இன்று தொடங்கிய 5-வது நாள் ஆட்டத்தில் தொடர்ந்து பேட் செய்த நியூசிலாந்து அணி வீரர்கள் இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

ராஸ்டெய்லர் 11 ரன்களிலும், நிக்கோலஸ் 7 ரன்களிலும், வாட்லிங் 1 ரன்னிலும், கிராண்ட்ஹோமே 13 ரன்களிலும், சற்று தாக்குபிடித்த ஜேமிசன் 21 ரன்களிலும், அரைசதத்தை நெருங்கிய கேப்டன் வில்லியம்சன், 117 பந்துகளில் 6 பவுண்டரியுடன் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த டிம் சவுத்தி 30 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதனால் தேநீர் இடைவேளைக்கு முன்பாக நியூசிலாந்து அணி 99.2 ஓவர்களில் 249 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்திய அணிதரப்பில், முகமது ஷமி 4 விக்கெட்டுகளும், இஷாந்த் சர்மா 3 விக்கெட்டுகளும், ஆர்.அஸ்வின் 2 விக்கெட்டுகளும், ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். தற்போதைய நிலையில், இந்திய அணி 32 ரன்கள் பின்தங்கிய நிலையில், 2-வது இன்னிங்சை தொடங்கவுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி என்பதால், முதல்நாள் ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டதால் ஒருநாள் கூடுதலாக வழங்கப்பட்டு, இன்றும் ஆட்டம் தொடர்கிறது.

இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, 24 ரன்களில் முதல் விக்கெட்டை இழந்தது. சுப்மன் கில் 8 ரன்களில், சவுத்தீ பந்தில் எல்.பி.டபுள்யூ ஆனார். அடுத்து ரோகித் உடன் ஜோடி சேர்ந்த புஜாரா எப்போதும்போல் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இந்திய அணி 51 ரன்கள் எடுத்திருந்தபோது ரோகித் அவுட் ஆனார். ரோகித் 81 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து சவுத்தீ பந்தில் எல்.பி.டபுள்யூ ஆகி வெளியேறினார். அடுத்து களமிறங்கிய கேப்டன் விராட் கோலி 13 ரன்களில் ஆட்டமிழந்தார். 29 பந்துகளை சந்தித்திருந்த கோலி, ஜேமிஷன் பந்தில் வாட்லிங்- கிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இந்த டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்தியுள்ளார் ஜேமிஷன்.

அடுத்து இந்திய அணி 1 ரன் மட்டும் கூடுதலாக சேர்த்திருந்த நிலையில் புஜாராவும் அவுட் ஆனார். இந்திய அணி அப்போது 3 விக்கெட் இழப்பிற்கு 72 ரன்கள் எடுத்திருந்தது. 80 பந்துகளை சந்தித்த புஜாரா 15 ரன்கள் எடுத்து, ஜேமிஷன் பந்தில் ராஸ் டெய்லரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

அடுத்து களமிறங்கிய ரஹானே 15 ரன்களில் போல்ட் பந்தில் வாட்லிங்- கிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்தடுத்து விக்கெட்கள் சரிந்த நிலையில் இந்திய அணி ரன் குவிக்க தடுமாறியது. பின்னர் ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட் மற்றும் ஜடேஜா இருவரும் அடித்து ஆடி வருகின்றனர்.

உணவு இடைவேளையின் போது இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்களை சேர்ந்திருந்தது. அப்போது பண்ட் 4 ஃபோர்கள் உட்பட 28 ரன்களும், ஜடேஜா 12 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். சிறிது நம்பிக்கை அளித்த ரிஷப் பண்டட் 41 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த வீரர்கள் வந்த வேகத்திலேயே பெவிலியன் நோக்கி நடையைக் கட்டினர்.

73 ஓவர்கள் தாக்குப்பிடித்த இந்திய அணி 170 ரன்களுக்கு மட்டுமே சேர்த்து ஆட்டமிழந்தது. இந்திய அணி நியூசிலாந்து அணியை விட 138- ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. இதனால், நியூசிலாந்து அணிக்கு 139-ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.

நியூசிலாந்தின் 2வது இன்னிங்சை டாம் லாத்தம்-டேவான் கவாய் ஜோடி தொடங்கி வைத்தது. இவர்கள் முறையே 9 மற்றும் 19 ரன்களில் அவுட்டாகி வெளியேறினர். தொடர்ந்து களம் கண்ட கேப்டன் கேன் வில்லியம்சன்(52 ரன்கள், 89 பந்துகள்) மற்றும் ராஸ் டெய்லர்(47 ரன்கள், 100 பந்துகள்) இறுதி வரை நிலைத்து நின்று ஆடி 45.5 ஓவர்கள் 140 ரன்கள் என்ற இலக்கை எட்டினர். இதன் மூலம் நியூசிலாந்து அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை சொந்தமாக்கியது.

இதுவரை உலக அளவிலான எந்த போட்டியிலும் பட்டம் வெல்லாத நியூசிலாந்து அணி அதன் நீண்ட கால ஏக்கத்தை இந்த வெற்றி மூலம் தணித்துள்ளது. இதற்கு முன்பு 2015 மற்றும் 2019-ம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பை போட்டிகளில் இறுதிசுற்று வரை வந்து தோல்வியை அந்த தழுவியது குறிப்பிடத்தக்கது.

தொடர் மழைக்கு நடுவில் விறுவிறுப்புடன் நடந்த இந்த இறுதிப்போட்டியை இந்திய அணி ட்ரா செய்யும் என பலர் கணித்தனர். ஆனால் கூடுதலாக ஒரு மணி நேரம் தாக்குப்பிடிக்க மறுத்த இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொதப்பி வெறுப்பேற்றிவிட்டனர்

இந்த போட்டியில் வாகை சூடிய நியூசிலாந்து அணிக்கு கதாயுதத்துடன் ரூ.11¾ கோடியும், 2-வது இடம் பிடித்த இந்திய அணிக்கு ரூ.5¾ கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil.

Cricket World Test Championship
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment