World Test Championship Final Tamil News: இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி இந்த மாதம் 18ம் தேதி முதல் சவுத்தாம்ப்டன் நகரில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்காக மும்பையில் தனிமைப்படுத்துதலில் இருந்த இந்திய அணியினர் தனி விமானம் மூலம் கடந்த வாரத்தில் லண்டன் சென்றனர்.
இதற்கிடையே, இங்கிலாந்து சுற்றுப்பயணமாக சென்றுள்ள நியூசிலாந்து அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. அதில் கடந்த 2ம் தேதி முதல் துவங்கிய முதல் டெஸ்ட் போட்டி ‘ட்ராவில்’ முடிந்தது. மிகவும் விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் நியூசிலாந்தின் அறிமுக வீரர் ‘டெவான் கான்வே’ தனது முதல் போட்டியிலேயே இரட்டை சதம் அடித்து அசத்தியிருந்தார். இருப்பினும், அந்த அணியின் மிடில் – ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.
இந்த சொதப்பலான மிடில் – ஆர்டரை இந்திய அணி சாதகமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார் முன்னாள் இந்திய வீரர் சபா கரீம்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி குறித்து சபா கரீம் கூறுகையில், ” நியூசிலாந்து அணி அதன் மிடில் – ஆர்டரில் மிகவும் வலுவற்றதாக உள்ளது. இது கேப்டன் கோலி தலைமையில் களம் காணும் இந்திய அணிக்கு மிகவும் சாதகமான ஒன்றாக இருக்கும்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து என இரண்டு அணிகளுக்கும்மே சில பிரச்சனைகள் உள்ளன. இதில் நியூசிலாந்து அணியின் மிடில் – ஆர்டர் படு மோசமான ஒன்றாக உள்ளது. இருப்பினும் அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் இந்திய அணிக்கு சிம்ம சொப்பனமாக இருப்பார். அவரின் விக்கெட்டை மட்டும் இந்திய விரைவில் கைப்பற்றினால், அந்த அணியை எளிதில் ஆல்-அவுட் செய்து விடலாம். இந்த சூட்சமம் அனைத்து அணிகளுக்குமே தெரிந்த ஒன்று தான்.”என்றுள்ளார்.
நடந்த முடிந்த இங்கிலாந்து – நியூசிலாந்து முதல் டெஸ்ட் போட்டியில், கேப்டன் வில்லியம்சன் ஆட்டமிழந்ததும் தொடர்ந்து பின்னர் களமிறங்கிய வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக பெவிலியன் நோக்கி நடையை கட்டினர். இதே போல் 288 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வலுவான நிலையில் இருந்த அந்த அணி, அடுத்த 6 ரன்களை அடிப்பதற்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது. ‘கேப்டன் வில்லியம்சன் ஆட்டமிழந்தால் அந்த அணியின் பேட்டிங் வரிசை நிலை குழைந்து விடும்’ என முன்னாள் வீரர் சபா கரீம் குறிப்பிட்டு கூறியிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
தற்போது இங்கிலாந்து அணியுடனான 2 வது டெஸ்ட் போட்டிக்கு தயராகி வரும் நியூசிலாந்து அணி, அந்த அணியை பர்மிங்காம் நகரின் எட்க்பாஸ்டன் மைதானத்தில் வரும் 10ம் தேதி சந்திக்கிறது. இந்த போட்டிகள் முடிந்த பின்னர் நியூசிலாந்து அணி இந்தியாவுடனான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் பங்கேற்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“