World test championship final Tamil News: இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 18) முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், மழையின் குறுக்கீட்டால் போட்டி துவங்க ஒரு நாள் தாமதம் ஆனாது. எனவே சனிக்கிழமை (ஜூன் 19ம் தேதி) தான் போட்டி நடந்தது.
முதல் நாள் தான் இப்படி ஆகிவிட்டது. சரி 2வது நாள் ஆட்டமாவது தொடர்ந்து நடைபெறுமா என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 2வது மற்றும் நேற்றைய 3வது நாள் ஆட்டம் மழையின் குறுக்கீட்டாலும், வெளிச்சமின்மையாலும் தடை பட்டது.
இருப்பினும், முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணி ஓரளவு நிலையாக ஆடியது. அந்த அணி ஒரு வலுவான இலக்கை நிர்ணயிக்கும் என பலர் தெரிவித்து வந்தனர். ஆனால் தொடர் விக்கெட் சரிவால் 217 ரன்கள் மட்டும் சேர்த்து ஆல் அவுட்டானது. அணியில் அதிகபட்சமாக ரஹானே 49 ரன்களும், விராட் கோலி 44 ரன்களும் எடுத்தனர். சிறப்பாக பந்துகளை வீசிய ஜேமிசன் 22 ஓவர்களில் 31 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
தொடர்ந்து களம் கண்ட நியூசிலாந்து அணி 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 101 ரன்கள் எடுத்துள்ளது. இன்று 4ம் நாள் ஆட்டம் முழுமையாக மழையால் பாதிக்கப்படும் சூழல் தற்போது நிலவுகிறது.
முன்னதாக, 5 நாட்கள் நடக்கும் இந்த ஆட்டத்திற்கு முடிவு எட்டப்படாவிட்டால் ‘ரிசர்வ் டே' (மாற்றுநாள்) ஒதுக்கப்படும் என ஐசிசி அறிவித்திருந்தது. எனினும், ரிசர்வ் டே ஒதுக்கப்படுவது குறித்து இப்போதே முடிவு செய்யப்படாது. நாளைய கடைசி நாளின் கடைசி நேரத்தில்தான் முடிவு செய்யப்படும். மேலும் இது குறித்த முடிவை ஆட்ட நடுவர் கிறிஸ் பிராட் தான் எடுப்பார்.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் ரிசர்வ் டே ஒதுக்கப்பட்டு, அதில் விளையாடியும் முடிவு எட்டவில்லை என்றால் என்ன ஆகும் என்பதே பல ரசிகர்களின் கேள்வியாக உள்ளது. இது போல ஒருவேளை நடந்தால் என்ன செய்வது என்ற விதியை ஏற்கனேவே ஐசிசி அறிவித்துள்ளது. இதன்படி, 'போட்டி ட்ரா - வானால் இரு அணிகளும் சாம்பியன்ஸ்களாக அறிவிக்கப்படுவார்கள். பரிசுத்தொகையை மொத்தமாக சேர்த்து இரு அணிகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்படும். மேலும் காதயம் (கோப்பை) இரு அணிகளிடமும் சம காலம் இருக்கும்' என குறிப்பிட்டுள்ளது.
ஆனால், இந்த முடிவை கிரிக்கெட் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்பதில் பெரும் கேள்வி நிலவுகிறது. அதோடு இப்படி ஒரு முடிவிற்காகவா நாங்கள் இத்தனை நாட்கள் டெஸ்ட் தொடர்களை ஃபாலோ செய்து வந்தோம்? என்பது போன்ற கேள்விகளை அவர்கள் பொது தளங்களில் எழுப்பி வருகிறார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.