உலககோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணியின் முகமது ரிஸ்வான் தென்ஆப்பிரிக்க அணியின் மார்கோ ஜென்சன் ஆகிய இருவரும் களத்தில் வார்த்தை போரில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கிரிக்கெட் போட்டிகளை பொருத்தவரை மிகவும் முக்கியமான வாழ்வா சாவா ஆட்டத்தில் இரு அணி வீரர்கள் மோதலில் ஈடுபடுவது பதட்டமான தருணங்களுக்கு வழிவகுக்கும். அந்த வகையில், சென்னை சேப்பாக்கம எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 26-வது லீக் ஆட்டத்தில், அரையிறுதி வாய்ப்பு ஆபத்தில் இருக்கும் பாகிஸ்தான் அணி தென்ஆப்பிரிக்க அணியுடன் மோதியது.
இந்த போட்டியில், பாகிஸ்தானின் முகமது ரிஸ்வானும், தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் மார்கோ ஜான்சனும், கடும் வார்த்தைப் போரில் ஈடுபட்ட நிலையில், இருவரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி , தீவிரமாக முறைத்துக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி பவர்பளே ஓவர்களில் முக்கிய 2 விக்கெட்டுகளை இழந்தது.
இதில் மார்கோ ஜான்சன் இமாம்-உல்-ஹக்கை 12 ரன்களில் வெளியேற்றினார். அதன்பிறகு களத்திற்கு வந்த விக்கெட் கீப்பர் முகமுது ரிஸ்வான். தான் சந்தித்த முதல் பந்திலேயே கொடுத்த கேட்ச் வாய்ப்பை ஜென்சன் தவறவிட்டார். இதனால் விக்கெட் ஆவதில் இருந்து தப்பினார். தொடர்ந்து அடுத்த பந்தில் அதிரடியாக விளையாடிய ரிஸ்வான் தெர்டுமேன் திரையில் பவுண்டரி அடித்தார். இதை பார்த்த ஜான்சன் ரிஸ்வனை முறைத்தபடி பார்த்தார்.
முதலில் அதை ரிஸ்வான் கவனிக்காத நிலையில், ஜான்சன் சில வார்த்தைகளை பேசினார். இதை கவனித்த ரிஸ்வான் ஜான்சனுடன் ஏதோ பேசினார். உடனே இருவரும் மாறி மாறி பேசிக்கொண்டதை தொடர்ந்து ரிஸ்வான் அங்கிருந்து செல்லுமாறு சைகை காட்டியுள்ளார். உடனடியாக அங்கு வந்த தென்ஆப்பிரிக்க அணியின் ஜெரால்ட் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார். இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
2023 உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான அதிர்ச்சி தோல்வியுடன் 3 தோல்விகளை சந்தித்துள்ள பாகிஸ்தான் அணி இந்த போட்டியில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“