நியூசிலாந்து அணிக்கு எதிரான கிரிக்கெட் அரையிறுதி போட்டியில், தோனி 7ம் இடத்தில் பேட்டிங் செய்ய களமிறக்கும் கேப்டன் கோலியின் முடிவிற்கு முன்னாள் வீரர்களான கங்குலி மற்றும் லட்சுமண் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
உலககோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. முதல் அரையிறுதி போட்டியில், இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில், நியூசிலாந்து அணியிடம் தோல்வியை தழுவி தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.
இந்திய- நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் அரையிறுதி போட்டியில், நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 239 ரன்கள் எடுத்தது. 9ம் தேதி, நியூசிலாந்து அணி 46.1 ஓவரில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்தநிலையில் மழை குறுக்கிடவே, 10ம் தேதி போட்டி தொடர்ந்து நடைபெற்றது.
240 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணி துவக்கத்திலேயே ராகுல், ரோகித், கோலி விக்கெட்களை பறிகொடுத்தது. சீரான இடைவெளியில் விக்கெட்களை இந்திய அணி இழந்து கொண்டிருந்தது. இந்த சமயத்தில், கேப்டன் கோலி, தோனியை 7வது இடத்தில் இறக்கிவிட்டார். தோனி மற்றும் ஜடேஜாவின் பங்களிப்பால், படுதோல்வியடைய வேண்டிய போட்டியில், இந்திய அணி கவுரவமான தோல்வி அடைந்துள்ளது.
கங்குலி, லட்சுமண் எதிர்ப்பு : விக்கெட் தொடர்ந்து சரிந்துகொண்டிருந்த நிலையில், ரிஷப் பண்ட் நிதானமாக விளையாடிக்கொண்டிருந்தார், அந்த நேரத்தில் தோனியை இறக்காமல், பாண்ட்யாவை களமிறக்கியது தவறு என்று முன்னாள் வீரர்களான கங்குலி மற்றும் லட்சுமண் தெரிவித்துள்ளனர்.
கங்குலி கூறியதாவது, ரன் சேஸ் பண்ண வேண்டிய போட்டியில், தோனியை 7ம் இடத்தில் இறக்குவது போட்டியின் முடிவை நிச்சயமாக பாதிக்கும். இந்த போட்டியில், முன்னதாக களமிறக்க வேண்டும். கடைசி சில ஓவர்கள் இருக்கும்போது தோனியை இறக்கிவிட்டது தவறான நடவடிக்கை. இந்த தொடரில் போதிய அனுபவமில்லாத தினேஷ் கார்த்திக்கை, தோனிக்கு முன்னதாக, கோலி இறக்கிவிட்டார். அவர் ரன் எடுக்காமல், பந்தை வீணடித்ததும் தோல்விக்கு காரணம் என கங்குலி கூறியுள்ளார்.
ஜடேஜா பதிலடி : ஜடேஜாவின் திறமை குறித்து கடும் விமர்சனம் செய்திருந்த முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கருக்கு ரவீந்திர ஜடேஜா, நேற்றைய போட்டியின் மூலம் தக்க பதிலடி கொடுத்திருந்தார். ஜடேஜா 59பந்துகளில் 4 சிக்ஸ், 4 பவுண்டரிகளை விளாசி 77 ரன்கள் எடுத்தார். தோனி - ஜடேஜா இணைந்து 7வது விக்கெட் பார்ட்னர்ஷிப்பிற்கு 116 ரன்கள் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.