உலககோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகளில், இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் வெற்றி பெற்றுள்ளன.
12வது உலககோப்பை கிரிக்கெட் தொடர், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடைபெற்று வருகிறது. நேற்று (ஜூன் 8ம் தேதி), இரண்டு லீக் போட்டிகள் நடைபெற்றன.
இங்கிலாந்து - வங்கதேசம் போட்டி
கார்டிப் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில், டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் மொர்டசா பீல்டிங் தேர்வு செய்தார்.
இங்கிலாந்து சிறப்பான துவக்கம் : துவக்கவீரர்களாக களமிறங்கிய ஜேசன் ராய் மற்றும் பேர்ஸ்டோ சிறப்பான துவக்கம் தந்தனர். 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 386 ரன்கள் எடுத்தது. ஜேசன் ராய் 153 ரன்கள் எடுத்தார். பட்லர் 64 ரன்கள் எடுத்தார்.
வங்கதேசம் தரப்பில் முகம்மது சைபூதீன் மற்றும் மேகிதி ஹசன் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
கடின இலக்கு : 387 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய வங்கதேச அணி, 48.5 ஓவர்களில் 280 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன்மூலம், இங்கிலாந்து அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நியூசிலாந்து - ஆப்கானிஸ்தான் போட்டி
டவுட்டன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், நியூசிலாந்து - ஆப்கானிஸ்தான் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது. ஆப்கன் அணி தடுமாற்றம் : துவக்க வீரர்களாக களமிறங்கிய ஜஜாய் மற்றும் ஜட்ரான் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், அடுத்து வந்த வீர்கள் நிலைத்து நிற்காததால், விக்கெட்கள் தொடர்ந்து வீ்ழ்ந்தன. 41.1 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆப்கானிஸ்தான் அணி 172 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சகிதி அதிகபட்சமாக 59 ரன்கள் எடுத்தார். நியூசி., தரப்பில் நீஷம், 5 விக்கெட்களை வீழ்த்தினார்.
எளிய இலக்கு : 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி, குப்டில் விக்கெட்டை துவக்கத்திலேயே பறிகொடுத்தது. பின்னர் சுதாரித்துக்கொண்ட நியூசி. அணி 32.1 ஓவர்களில் 3 விக்கெட்களை மட்டுமே இழந்து 173 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம், 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.
ஆப்கன் பவுலர், அப்தாப் ஆலம், 3 விக்கெட்களையும் கைப்பற்றினார்.