உலககோப்பை கிரிக்கெட் : கேம் பிளான் சொதப்பல் – இந்தியாவுக்கு முதல் தோல்வி

இதே போன்றதொரு மனநிலையில் பின் கள வீரர்கள் ஆடும் பட்சத்தில், வங்கதேசத்திடம் கூட இந்தியா தோற்க அதிக வாய்ப்புள்ளது என்பதே நிதர்சன உண்மை!.

By: July 1, 2019, 8:34:44 AM

போராட முடியாமல் சரணாகதி அடைந்த இந்திய அணியை பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டது. அதை, 2019ம் ஆண்டில், உலகக் கோப்பை போன்ற மிக முக்கிய தொடரில், அதுவும் தலைசிறந்த வீரரை களத்தில் வைத்துக் கொண்டு பார்ப்பேன் என்று நினைக்கவில்லை.

எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் இந்தியாவும், இங்கிலாந்தும் நேற்று (ஜூன் 30) மோதின. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கன் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அவரது முடிவு மிகச் சரியானது. விக்கெட் அப்போது பேட்டிங்குக்கு ஆதரவாக இருந்தது. விராட் கோலியும் ‘டாஸ் வென்று இருந்தால் பேட்டிங் செய்யவே விரும்பினோம்’ என்று கூறியிருந்தார். இருப்பினும், இந்த உலகக் கோப்பையில் இந்திய அணி அதிகம் சேஸிங் செய்யவில்லை. ஆகையால், இந்தியாவுக்கு சேஸிங் செய்வதில் தங்களை சுய பரிசோதனை செய்ய நல்ல வாய்ப்பாக இந்தப் போட்டி அமைந்தது.

காயத்தில் அவதிப்பட்ட ஜேசன் ராய் மீண்டும் அணிக்கு திரும்பியிருக்க, ஜானி பேர்ஸ்டோவுடன் தொடக்க வீரராக களமிறங்கினார். முதல் 3 ஓவர்களை பொறுமையாக சோதனை செய்த இங்கிலாந்து தொடக்க வீரர்கள், பிட்ச் பேட்டிங்குக்கு ஆதரவாக இருப்பதை உறுதி செய்து கொண்டனர். அதன்பிறகு, இருவரும் இந்திய பவுலர்களை மிக அதிரடியாக அடிக்க ஆரம்பித்துவிட்டனர். பிட்ச் பந்துவீச்சுக்கு ஆதரவு தராததால், 6வது ஓவரிலேயே சுழற்பந்து வீச்சாளரான சஹாலை கோலி கொண்டு வந்துவிட்டார். அதன்பிறகு, அவர்கள் இன்னும் அதிரடியாக அடிக்க, நிலை குலைந்து போனது இந்தியா.
இருவரும் சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு, 22.1 ஓவரில் 160 ரன்கள் குவித்தனர். ஜேசன் ராய் 66 ரன்களில், குல்தீப் ஓவரில் கேட்ச்சானர். தொடர்ந்து அதிரடியாக ஆடிய ஜானி பேர்ஸ்டோ 109 பந்துகளில் 111 ரன்கள் விளாசி ஷமி ஓவரில் வெளியேறினார். பிறகு, சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தாலும், ஜோ ரூட் 44 ரன்களும், பென் ஸ்டோக்ஸ் 79 ரன்களும் விளாச, இங்கிலாந்து 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 337 ரன்கள் குவித்தது.
முகமது ஷமி, 10 ஓவர்கள் வீசி 69 ரன்கள் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார். சஹால் 10 ஓவர்களில் 88 ரன்கள் விட்டுக் கொடுத்து, ஒருநாள் போட்டிகளில் தனது மோசமான பந்துவீச்சை பதிவுசெய்தார். முதலில், இங்கிலாந்து அடித்த அடிக்கு 370 – 400 ரன்கள் வரை அடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இறுதியில் பும்ராவின் அபாரமான பவுலிங்கால் 337 ரன்களில் கட்டுப்பட்டது இங்கிலாந்து.

தொடர்ந்து, களமிறங்கிய இந்திய அணியில், லோகேஷ் ராகுல் 0 ரன்களில் வோக்ஸ் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதன்பின் ஜோடி சேர்ந்த ரோஹித் – விராட் கூட்டணி, இங்கிலாந்தின் மிரட்டலான பந்துவீச்சை எதிர்கொண்டு மிகச் சிறப்பாக விளையாடியது. இருவரும் அரைசதம் அடிக்க, 66 ரன்களில் பிளங்கட் ஓவரில் கோலி கேட்ச் ஆனார். இன்னொரு பக்கம், ரோஹித் ஷர்மா இந்த உலகக் கோப்பையில் தனது மூன்றாவது சதத்தை விளாசினார். ஆனால், அவரும் 102 ரன்களில் அவுட்டாக, ரிஷப் பண்ட் – ஹர்திக் பாண்ட்யா கூட்டணி தங்களால் முடிந்த வரை போராடியது. பண்ட் 32 ரன்களிலும், பாண்ட்யா 45 ரன்களிலும் அவுட்டாகி வெளியேறிய போது, இந்தியாவின் ஸ்கோர் 45 ஓவர்களில் 267 ரன்கள்.
அதன்பிறகு முழுதாக கையில் இருந்தது 30 பந்துகள். களத்தில் இருந்தது தோனியும், கேதர் ஜாதவும். ஆனால், இந்தியா அடித்த ரன்கள் 39. அதாவது தோனியும், ஜாதவும் சேர்ந்து கடைசி 30 பந்துகளில் 39 ரன்கள் அடித்திருந்தனர்.

இப்படியொரு மெகா சொதப்பலை நீங்கள் இந்தியாவிடம் பார்த்திருக்கிறீர்களா? இங்கிலாந்து பவுலர்கள் எப்பேர்ப்பட்ட சூரர்களாக இருந்தாலும், அவர்கள் எவ்வளவு துல்லியமான லென்ந்தில் பந்து வீசி இருந்தாலும், 30 பந்துகளில் 39 ரன்கள் என்பதை எந்த வகையில் ஏற்றுக் கொள்வது?
இந்தியா தோற்றதற்காக இந்த கேள்வியை முன்வைக்கவில்லை. தோல்வி ஒரு பொருட்டே அல்ல. ஆனால், போராட்டம் எங்கே போனது? கோடிக் கணக்கான ரசிகர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு சர்வதேச போட்டியில் ஆடும் தோனி போன்ற உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் இதுபோன்று விளையாடினால் இதை நாம் என்னவென்று எடுத்துக் கொள்வது? உண்மையில், அவ்விரு வீரர்களின் மனநிலை என்ன என்பதே புரியவில்லை.
அடிக்க வேண்டும் என்று நினைத்திருந்தால், பெரிய ஷாட்களுக்கு போயிருக்க வேண்டும். அதனால், அவுட்டாகி இருந்தாலும் பரவாயில்லையே. கடைசி ஓவர் வரை, இருவரும் களத்தில் நின்று சிங்கிள் எடுத்துக் கொண்டு இருப்பதற்கு எதற்காக? ரன் ரேட்டை உயர்த்துவதற்கா?
48.5வது ஓவரில், ஆர்ச்சர் பந்தில் தோனி சிங்கிள் எடுத்த போது, வர்ணனை செய்துக் கொண்டிருந்த சவ்ரவ் கங்குலி சொன்ன வார்த்தைகள் இவை.
‘இந்த சிங்கிளுக்கு நான் எந்த விளக்கமும் சொல்லப் போவதில்லை’

கோடிக்கணக்கான பேர் பார்த்துக் கொண்டிருக்கும் போட்டியில், இவ்வளவு வெளிப்படையாகவே கங்குலி தனது அதிருப்தியை வெளிப்படுத்திவிட்டார். சம்பளத்துக்காக வர்ணனை செய்யும் கங்குலிக்கே இவ்வளவு அதிருப்தி இருக்கும் போது, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், கிரிக்கெட் வீரர்களைக் கொண்டாடும் கடைநிலை ரசிகனுக்கு எவ்வளவு அதிருப்தி இருந்திருக்கும்! அதிலும், கடைசி ஓவர்களில் கேதர் ஜாதவ் 13 பந்துகளில் 12 ரன்கள் எடுத்ததை எந்த வகையில் சேர்த்துக் கொள்வது என்று சத்தியமாக தெரியவில்லை!முடிவில், 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, அரையிறுதி வாய்ப்பை மேலும் பலப்படுத்திக் கொண்ட இங்கிலாந்து. இந்தியாவுக்கு இன்னும் இரண்டு ஆட்டம் மீதமிருக்கும் நிலையில், அதில் ஒன்றில் வெற்றிப் பெற்றால் கூட அரையிறுதிக்கு முன்னேறிவிட முடியும்.

ஆனால், இதே போன்றதொரு மனநிலையில் பின் கள வீரர்கள் ஆடும் பட்சத்தில், வங்கதேசத்திடம் கூட இந்தியா தோற்க அதிக வாய்ப்புள்ளது என்பதே நிதர்சன உண்மை!.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

Web Title:Worldcup cricket england beat india by 31 runs

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X