உலககோப்பை கிரிக்கெட் தொடரில், ஆப்கானிஸ்தானிற்கு எதிரான போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்ததன் மூலம், இந்த சாதனையை நிகழ்த்திய இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை முகமது ஷமி பெற்றுள்ளார்.
உலககோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. தொடர், தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. சனிக்கிழமை, சவுத்தாம்ப்டன் மைதானத்தில் நடந்த போட்டியில், இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. முதலில் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 224 ரன்கள் எடுத்தது.
225 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி சீரான இடைவெளிகளில் விக்கெட்களை பறிகொடுத்துவந்தது. 49.5 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 213 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்தியா, 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. உலககோப்பை அரங்கில், இது இந்திய அணிக்கு கிடைத்த 50வது வெற்றி ஆகும். அதிக வெற்றிகள் பெற்ற அணிகளின் வரிசையில், இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. முதல் 2 இடங்களில் ஆஸ்திரேலியா (67 வெற்றிகள்) மற்றும் நியூசிலாந்து (52 வெற்றிகள்) உள்ளது.
ஷமி ஹாட்ரிக் : போட்டியின் 50வது ஓவரை வீசிய முகமது ஷமி, 3,4 மற்றும் 5வது பந்துகளில் ஆப்கானிஸ்தான் அணியின் முகமது நபி, அப்தாப் ஆலம் மற்றும் முஜிபுர் ரஹ்மான் விக்கெட்களை கைப்பற்றினார். இது இந்த சீசனில் பதிவான முதல் ஹாட்ரிக் விக்கெட் ஆகும்.
32 ஆண்டுகளுக்கு பின், உலககோப்பையில் இந்தியா சார்பில் ஹாட்ரிக் சாதனை பதிவாகியுள்ளது. கடைசியாக 1987ல் இந்தியாவின் சேட்டன் சர்மா, நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றியிருந்தார்.
உலககோப்பை அரங்கில் ஷமி நிகழ்த்தியது 10வது ஹாட்ரிக் ஆகும். இலங்கை வீரர் லசித் மலிங்கா இந்த சாதனையை 2 முறை நிகழ்த்தியுள்ளார்