உலகக் கோப்பை தொடரில், ஒரு கடினமான அணியை, கடினமான போட்டியில், கடுமையாக போராடி வென்றிருக்கிறது இந்திய கிரிக்கெட் அணி.
இங்கிலாந்துக்கு எதிராக தோற்ற அதே எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில், வங்கதேசத்தை எதிர்கொண்டது உண்மையில் இந்திய அணிக்கு பெரும் சாதகமாக அமைந்துவிட்டது எனலாம். பிட்ச் எப்படி ஒத்துழைக்கும், என்ன மாதிரி ஒத்துழைக்கும், எப்போது ஏமாற்றும், எப்போது அது ஏமாறும் என்ற தெளிவான கணக்கீடோடு களமிறங்கியது இந்தியா. அவர்களுக்கு தேவையான ஒன்றாக இருந்தது டாஸ் மட்டுமே. அதையும் கோலி வெல்ல, கண்களை மூடிக் கொண்டு பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இங்கிலாந்துக்கு எதிரான அதே நிலவரத்தை மீண்டும் எதிரொலித்தது எட்ஜ்பாஸ்டன் பிட்ச். அது தெரிந்து தானே கோலி பேட்டிங் தேர்வு செய்தார். ரோஹித், லோகேஷ் ராகுல் இணை பொறுமையாக இன்னிங்சை தொடங்கினாலும் ரோஹித் , தனக்கான வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டே இருந்தார். மோசமான பந்துகளை பவுண்டரி தாண்டி சிக்ஸர்களுக்கும் அனுப்பினார்.
இந்த இணையை பிரிக்க முடியாமல் வங்கதேசம் தடுமாறிக் கொண்டிருக்க, இந்த உலகக் கோப்பையின் நான்காவது சதத்தை நிறைவு செய்தார் ரோஹித் ஷர்மா. இதில் 7 பவுண்டரிகளும், 5 சிக்ஸர்களும் அடங்கும். இதன் மூலம், ஒரே உலகக் கோப்பையில் நான்கு சதங்கள் அடித்த சங்கக்காராவின் சாதனையை ரோஹித் சமன் செய்திருக்கிறார். ஆனால், சதம் அடித்தவுடன் சௌமியா சர்கார் ஓவரில் 104 ரன்களில் ரோஹித் கேட்ச் ஆனார். பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்திற்கு பிறகு, இப்போட்டியில் அரைசதம் அடித்த லோகேஷ் ராகுல் 77 ரன்களில் ருபெல் ஓவரில் கேட்ச்சானார்.
இதன்பிறகு, கேப்டன் விராட் கோலி 26 ரன்களிலும், ரிஷப் பண்ட் 48 ரன்களிலும் அவுட்டாக, ஹர்திக் பாண்ட்யா 0 ரன்களில் வெளியேறினார். மீண்டும் தோனி ஒரு பொறுமையான இன்னிங்ஸ் ஆட, 33 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் அவுட்டானார். இதனால், இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில், 9 விக்கெட்டுகளை இழந்து 314 ரன்கள் மட்டும் எடுத்தது. முஸ்தாபிசூர் ரஹ்மான் 10 ஓவர்கள் வீசி 59 ரன்கள் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
29.2வது ஓவரில் 180 ரன்களில் முதல் விக்கெட்டை இழந்த இந்தியா, அடுத்த 20.4 ஓவரில் எட்டு விக்கெட்டுகளை பறிகொடுத்து 134 ரன்களே எடுத்தது. குறிப்பாக 40 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் எடுத்திருந்த இந்திய அணி, கடைசி 10 ஓவர்களில் 63 ரன்களே எடுத்தது.
இதையடுத்து, 315 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேசம், இந்தியாவை இறுதி வரை அச்சுறுத்தலிலேயே வைத்திருந்தது. தொடக்க வீரர் தமீம் இக்பால் 22 ரன்களில் ஷமி ஓவரில் போல்டாக, மற்றொரு தொடக்க வீரர் சவுமியா சர்கார் 33 ரன்களில், பாண்ட்யா ஓவரில் கேட்ச் ஆனார். தொடர்ந்து முஷ்பிகுர் ரஹீம் 24 ரன்களில் சாஹால் ஓவரில் அவுட்டாக, லிட்டன் தாஸ் 22 ரன்களில் பாண்ட்யா பந்தில் வெளியேறினார். மொசடேக் ஹொசைன் 3 ரன்களில் அவுட்டாக, மறுபுறம் நங்கூரம் போட்டு சிறப்பாக ஆடி வந்த ஷகிப் அல் ஹசன் 66 ரன்களில் பாண்ட்யா பந்தில் அவுட்டானார்.
சகிப் அல் ஹசன் இந்த உலகக் கோப்பையில் அடித்திருக்கும் ஆறாவது 50+ ஸ்கோராகும். 2003 உலகக் கோப்பையில் சச்சின் மட்டுமே அதிக அரைசதங்கள்(7) அடித்திருந்தார்.
75 vs தென் ஆப்ரிக்கா
64 vs நியூசிலாந்து
121 vs இங்கிலாந்து
124 vs வெஸ்ட் இண்டீஸ்
41 vs ஆஸ்திரேலியா
51 vs ஆப்கானிஸ்தான்
66 vs இந்தியா
இறுதிக் கட்டத்தில் சபீர் ரஹ்மான் - சைபுதீன் ஜோடி இந்திய அணியை கடுமையாக சோதித்தது. இருவரும் 7வது விக்கெட்டுக்கு 66 ரன்கள் விளாசினர். சபீர் 36 ரன்களில் பும்ரா ஓவரில் போல்டாக, சைபுதீன் அரைசதம் அடித்து 51 ரன்களுடன் களத்தில் இருந்தார். ஆனால், அதன்பிறகு களமிறங்கிய மொர்டாசா, ருபெல் ஹொசைன் மற்றும் முஸ்தாபிசூர் ஆகியோர் அவருக்கு பார்ட்னர்ஷிப் கொடுக்காமல் அவுட்டானதால், 48 ஓவர்களில் 286 ரன்களுக்கு வங்கதேசம் ஆல் அவுட்டானது. 48வது ஓவரில் கடைசி இரு பந்துகளிலும் துல்லியமான யார்க்கர்கள் வீசி, கடைசி இரு விக்கெட்டுகளையும் பும்ரா சாய்த்தார். இல்லையெனில், முடிவு எப்படி வேண்டுமானாலும் அமைந்திருக்கலாம். பும்ரா 4 விக்கெட்டுகளும், பாண்ட்யா 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
வங்கதேச அணியில் பெரும்பாலான வீரர்கள், நல்ல தொடக்கத்தை கொடுத்தாலும், உறுதியான பார்ட்னர்ஷிப் அமைக்கத் தவறிவிட்டனர். 30, 40 என குறுகிய ஆயுள் கொண்ட பார்ட்னர்ஷிப்புகளால் தான் வங்கதேசம் தோற்றது. ஒரு சதக் கூட்டணி அமைந்திருந்தாலும், அந்த அணியின் வெற்றி வாய்ப்பு அதிகமாகியிருக்கும். இந்த வெற்றியின் மூலம், உலகக் கோப்பைத் தொடரில், ஆஸ்திரேலியாவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது அணியாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது இந்திய அணி. எட்டாவது போட்டியில் ஆடிய வங்கதேசம், 4 தோல்விகளை பெற்றதால், தொடரில் இருந்து வெளியேறியது.
தவிர, தொடர்ந்து ஆறாவது முறையாக ஐசிசியின் முக்கிய தொடரில் அரையிறுதி வரை முன்னேறி இருக்கிறது இந்திய அணி.
சாம்பியன்ஸ் டிராபி 2019 (சாம்பியன்)
உலகக் கோப்பை டி20 (இரண்டாம் இடம்)
உலகக் கோப்பை 2015 (அரையிறுதி)
உலகக் கோப்பை டி20 2016 (அரையிறுதி)
சாம்பியன்ஸ் டிராபி (இரண்டாம் இடம்)
உலகக் கோப்பை 2019 (அரையிறுதி)*
மீண்டும் ஒருமுறை மிடில் ஆர்டர் பலவீனத்தை பகிரங்கமாக வெளிக்காட்டி இருக்கிறது இந்திய அணி. வலிமையான ஹிட்டர்கள் இல்லாமல், இந்திய அணியால், கடைசி கட்டங்களில் ரன்களே அடிக்க முடிவதில்லை. குறைந்தபட்சம் தோனியும் அடிக்காததால், கடைசி 10 ஓவர்களில், இந்திய அணி 70 ரன்களைக் கூட அடிக்க முடியாமல் திணறுகிறது. இத்தனைக்கும், ரிஷப் பண்ட் அணியில் இணைந்துமே, இந்தியாவால் இன்று 314 ரன்களே அடிக்க முடிந்திருக்கிறது.
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியின் முடிவில், விராட் கோலி பேசிய போது, 'தோனி பெரிய ஷாட்களை அடிக்க முயன்றார்; ஆனால் முடியவில்லை' என்றார். லீக் போட்டிகள் என்பதால், கோலி இதனை ஈசியாக சொல்லிவிட்டார். அதுவே அரையிறுதிப் போட்டியாக இருந்திருந்தால்? இறுதிப் போட்டியாக இருந்திருந்தால்? அப்போதும் இதைத் தான் சொல்லி இருப்பாரா?
உலகக் கோப்பை 2019 தொடரில் 41-50 ஓவர்களில் ரோஹித் அல்லது கோலி ஆடிய போது இந்தியா அடித்த ரன்கள்:
59/1(7.3)
116/3
88/3
40 ஓவர்களுக்கு முன்பே, ரோஹித் மற்றும் கோலி இருவரும் அவுட்டான பிறகு இந்தியா கடைசி பத்து ஓவர்கள் அடித்த ரன்கள்:
49/4
82/2
72/1
63/5
தோனியை மட்டும் நாம் கார்னர் செய்ய வேண்டும் என்பதற்காக இதைச் சொல்லவில்லை. தோனியை யாரும் கார்னர் செய்துவிடக் கூடாது என்பதற்காவே சொல்கிறோம். இப்போது கூட ஒவ்வொரு போட்டியிலும், குறைந்தது 30 ரன்களாவது அவர் அடித்துவிடுகிறார். ஆனால், இந்த தற்காப்பு தோனியை எந்த ரசிகனும் விரும்புவதில்லை. எதிர் தாக்குதல் நடத்தும் தோனியையே நாம் பார்க்க விரும்புகிறோம். தவிர ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் மெச்சூரிட்டியுடன் தோனிக்கு கைக்கொடுக்கும் பட்சத்தில், கடைசி ஓவர்கள் சொதப்பலை இனி வரும் போட்டிகளில் இந்தியாவால் தவிர்க்க இயலும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.