Sriram Veera
உலககோப்பை தொடரின் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று, இங்கிலாந்து அணிக்கு எதிரான தோல்வியை சரிகட்ட இந்திய அணி கடும்பிரயத்தனம் மேற்கொண்டு வருகிறது.
கடந்த மாதம் 30ம் தேதி பிர்மிங்ஹாமில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில், 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது. அதே மைதானத்தில் இன்று (ஜூலை 2ம் தேதி) நடைபெற உள்ள போட்டியில், இந்திய அணி, வங்கதேச அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று, தோல்வியை சரிகட்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில், இந்திய அணியின் துவக்க வீரர் ரோகித் சர்மா மற்றும் கேப்டன் விராட் கோலி மட்டுமே சிறப்பாக செயல்பட்டனர். ஹர்திக் பாண்டியாவின் செயல்பாடும் குறைசொல்ல முடியாது. ஆனால், தோனி உள்ளிட்ட மற்ற வீரர்களின் செயல்பாடுகள் கடும்விமர்சனத்திற்குள்ளானது. அந்த போட்டியில், ரோகித் சர்மாவுடன் இணைந்து களமிறங்கிய கே எல் ராகுல், ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனதன் மூலம் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்ப்பையும் அவர் சம்பாதித்துள்ளார்.
இன்றைய போட்டியில், இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய அதே வீரர்கள் இடம்பெற்றால், அவர்களின் பேட்டிங் ஆர்டர் வரிசையில் நிச்சயம் மாற்றம் இருக்கும், இது தவிர்க்க இயலாதது. இல்லையெனில், இப்போட்டியிலும் நாம் தோல்வி தான் அடைவோம், ஏனெனில், வங்கதேச அணியை எப்போதும் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது.
துவக்க வீரர் ராகுல், 4ம் இடத்தில் களமிறங்கினால், துவக்க வீரராக மயங்க் அகர்வால் இறங்குவார் ( அவர் போட்டி நடக்கும் மைதானத்திற்கு சரியான நேரத்தில் வந்துவிட்டால்). மயங்க் அகர்வால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அசத்தியுள்ளார். இந்த போட்டியில் நன்றாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கலாம்.
ராகுலுக்கு என்ன தான் பிரச்னை : கே எல் ராகுல், டெஸ்ட் போட்டி துவக்க வீரர். அவர் பெரும்பாலும் கிரீசில் நின்றே ஆட விரும்புகிறார் ; அதையேதான் செய்தும் வருகிறார். மற்ற ஷாட்களை அவர் பெரும்பாலும் அல்ல எப்போதுமே முயற்சிப்பதில்லை. அவர் கிரீசில் உள்ளே நின்றுகொண்டு, வேகத்தில் வரும் பாலை கவனிக்காமல், பேட்டை சுழற்றுவதால், அவரால் பாலை சரியாக எய்ம் பண்ணி அடிக்கமுடிவதில்லை. இதனால், விரைவாக அவுட் ஆகிவிடுகிறார். கடந்தாண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், ராகுல் சிறப்பாகத்தான் விளையாடினார். இல்லை என்று மறுக்கவில்லை ; ஆனால், டெஸ்ட் கிரிக்கெட் பாணியையே, ஒருநாள் அதுவும் உலககோப்பை கிரிக்கெட் தொடரின்போதும் பின்பற்றுவது முறையல்லவே!!!
ரவீந்திர ஜடேஜா எப்படி ? : அணி வீரர்கள் பட்டியலில் மாற்றம் செய்ய முயன்றால்,கேதர் ஜாதவிற்கு பதிலாக ரவீந்திர ஜடேஜாவை அணியில் சேர்க்கலாம். ஸ்பின் பவுலர் என ஆல்ரவுண்டர் ஆன ஜடேஜா, பேட்டிங்கிலும் கலக்குவார் என்ற நம்பிக்கை உள்ளது. 4ம் இடத்தில் ஜடேஜாவை நம்பி களம் இறக்கலாம்.
அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களின் நிறை, குறைகளை பட்டியலிடுவோம்...
கே எல் ராகுல் : டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், துவக்க வீரராக அசத்திய ராகுலை, ஒருநாள் போட்டியிலும் துவக்க வீரராக களமிறக்குவது வேண்டாத வேலை தான். இவர் கிரீசில் உள்ளே நின்றுகொண்டே பந்தை எதிர்கொள்வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், ரன் எடுக்க ஏதுவாக ஒருபோதும் இருக்காது. ராகுலை, துவக்க வீரர் என்ற நிலையில் இருந்து 4ம் இடத்தில் இறக்கினால், சற்று வலுவான அடித்தளம் அமைத்து தருவார்.
ரோகித் சர்மா : இவரின் துவக்க வீரர் என்ற நிலையில் எவ்வித மாற்றமும் தேவையில்லை. 3 இன்னிங்சில், வெவ்வேறான லெவலில், 3 சதங்கள் அடித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
விராட் கோலி : இந்த தலைமுறையின் நிகர் அற்ற பேட்ஸ்மேன். உலககோப்பை தொடரில், சதம் அடிக்கவில்லை என்றாலும், நிலையான செயல்பாடுகளால், தொடர்ந்து 5 அரைசதம் கடந்து அசத்தியுள்ளார்.
ரிஷப் பண்ட் : 4ம் இடத்திற்கு ஏற்ற வீரர் பண்ட் இல்லை. இவரின் செயல்பாடுகளின் அடிப்படையில் ரிஷப் பண்ட் 5 அல்லது 6ம் இடத்தில் களமிறங்கலாம்.
ஹர்திக் பாண்ட்யா : அதிரடி ஆட்டக்காரரான ஹர்திக் பாண்ட்யாவைத, தோனிக்கு பிறகே களமிறக்குவது நல்லது.
மகேந்திர சிங் தோனி : ஆட்டத்தை முடிப்பதிலேயே இவர் குறியாக உள்ளார். சிங்கிள் மற்றும் 2 ரன்கள் எடுப்பதற்கு மிகவும் திணறுகிறார்.
கேதர் ஜாதவ் : இவரின் செயல்பாடுகள், கழுவுற மீனில நழுவுற மீன் போன்றே உள்ளது. கேதர் ஜாதவ் 5ம் இடத்தில் களமிறங்கினால், போட்டியின் முடிவுகளில் நிச்சயம் மாற்றம் இருக்கும்.