உலககோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிக்கு கூட தகுதி பெறுமா என்ற சோகநிலையில் தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணி தள்ளப்பட்டுள்ளது அதன் ரசிகர்களை மிகுந்த சோகத்திற்குள்ளாக்கியுள்ளது.
உலககோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடைபெற்று வருகிறது. தொடர் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று (ஜூன் 19ம் தேதி) நடந்த போட்டியில், நியூசிலாந்து - தென் ஆப்ரிக்க அணிகள் மோதின. இகுந்த போட்டி பிர்மிங்ஹாமில் நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசி.கேப்டன் வில்லியம்ஸ்சன் பவுலிங்கை தேர்வு செய்தார். ஆட்டத்தின் இடையே மழை குறுக்கிட்டதால், போட்டி 49 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
திணறல் தென் ஆப்ரிக்கா : போட்டியின் துவக்கத்திலேயே டி காக் 5 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். பின் வந்த வீரர்கள் சிறிது பொறுப்புணர்வுடன் விளையாடினர். தென் ஆப்ரிக்க அணி 49 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 241 ரன்கள் எடுத்தது. வான் டெர் டுசன் அதிகபட்சமாக 67 ரன்கள் எடுத்தார். நியூசி., தரப்பில் பெர்குசன் அதிகபட்சமாக 3 விக்கெட்கள் வீழ்த்தினார்.
வில்லியம்சன் அபாரம் : 242 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய நியூசிலாந்து அணி துவக்க வீரர் முன்ரோவின் விக்கெட்டை பறிகொடுத்தாலும் குப்டில் நிதான ஆட்டம் ஆடினார். அடுத்து களமிறங்கிய கேப்டன் வில்லியம்சன், சதமடித்து அசத்தினார். 138 பந்துகளில் 106 ரன்களில் வில்லியம்சன் பெவிலியன் திரும்பினார். கிராண்ட்ஹோமே 60 ரன்கள் விளாசினார். 48.3 ஓவர்களில் 245 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. தென் ஆப்ரிக்க தரப்பில், கிறிஸ் மோரிஸ் அதிகபட்சமாக 3 விக்கெட்கள் வீழ்த்தினார்.
6 போட்டிகளில் 1ல் மட்டுமே வெற்றி பெற்று, 4 போட்டிகளில் தோல்வியடைந்துள்ள தென் ஆப்ரிக்க அணிக்கு அரையிறுதி வாய்ப்பு கானல்நீராக மாறியுள்ளது.
5 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றியும், 1 போட்டி மழை காரணமாக ரத்தும் செய்யப்பட்டது. 9 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் நியூசிலாந்து அணி முதலிடத்தில் உள்ளது.