இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் சொத்து மதிப்பு ரூ.1,000 கோடியைத் தாண்டியதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. அவ்வகையில், கோலி தான் தற்போது உலகின் பணக்கார வீரர் என்று சொன்னால் மிகையாகாது. பி.சி.சி.ஐ-யின் ஒப்பந்தத்தின் கீழ் ஏ+ (A+) கிரேடாக, விராட் கோலி ஆண்டுக்கு 7 கோடி பெறுகிறார். இது தவிர, டெஸ்ட் போட்டிக்கு ரூ.15 லட்சமும், ஒருநாள் போட்டிக்கு ரூ.6 லட்சமும், டி20 போட்டிக்கு ரூ.3 லட்சமும் பெறுகிறார். இவை தவிர, ஐ.பி.எல் தொடருக்கான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி) அணியிடம் இருந்து விராட் கோலி ஆண்டுக்கு ரூ.15 கோடி பெறுகிறார்.
இந்திய அணியின் ஜாம்பவான் வீரரான சச்சின் டெண்டுல்கரின் சொத்து மதிப்பு ரூ.1,250 கோடியாகவும், முன்னாள் இந்திய கேப்டன் எம்.எஸ் தோனியின் சொத்து மதிப்பு ரூ.1,040 கோடியாகவும் உள்ளது என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், உலகின் பணக்கார கிரிக்கெட் வீரராக இந்தியரான சமர்ஜித்சின் ரஞ்சித்சிங் கெய்க்வாட் உள்ளார்.
யார் இந்த சமர்ஜித்சிங் கெய்க்வாட்?
கடந்த ஏப்ரல் 25, 1967ல் பிறந்த சமர்ஜித்சிங் கெய்க்வாட் முன்னாள் முதல்தர பேட்ஸ்மேன் வீரர் ஆவார். சமர்ஜித்சிங் கெய்க்வாட் குஜராத்தில் உள்ள பரோடாவின் முன்னாள் மன்னர் ஆவார். ரஞ்சித்சிங் பிரதாப்சிங் கெய்க்வாட் மற்றும் சுபாங்கினிராஜே ஆகியோரின் ஒரே மகன் சமர்ஜித்சிங் கெய்க்வாட். டேராடூனில் உள்ள தி டூன் பள்ளியில் படித்தார். மே 2012ல் அவரது தந்தையின் மரணத்திற்குப் பிறகு சமர்ஜித்சிங் கெய்க்வாட் மகாராஜாவாக முடிசூட்டப்பட்டார். அவருக்கு 20,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்கள் உள்ளன.
சமர்ஜித்சிங் கெய்க்வாட் உலகின் மிகப்பெரிய தனியார் இல்லமான லக்ஷ்மி விலாஸ் அரண்மனையின் உரிமையாளரும் ஆவார். குஜராத் மற்றும் உத்தரபிரதேசத்தின் பனாரஸில் உள்ள 17 கோயில்களை இயக்கும் கோயில் அறக்கட்டளைகளையும் அவர் கட்டுப்படுத்துகிறார். அவர் வான்கனேர் மாநிலத்தின் அரச குடும்பத்தைச் சேர்ந்த ராதிகாராஜை மணந்தார்.
சமர்ஜித்சிங் கெய்க்வாட் ரஞ்சி டிராபியில் பரோடாவைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். டாப்-ஆர்டர் பேட்ஸ்மேனாக 6 முதல்தர போட்டிகளில் விளையாடியுள்ளார். பரோடா கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil