இந்தியாவில் பெண்கள் அணியை மையப்படுத்தி நடத்தப்பட்டு வரும் டபிள்யூ.பி.எல். லீக் கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ள நிலையில், இந்த தொடர் வரும் பிப்ரவரி 14-ந் தேதி தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் கிரிக்கெட் போட்டிக்கு அதிக ரசிகர்கள் உள்ள நாடு இந்தியா. இந்த ரசிகர்களை திருப்திப்படுத்தும் நோக்கத்தில், இந்திய கிரிக்கெட் வாரியம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தொடங்கப்பட்ட உள்நாட்டு கிரிக்கெட் தொடர் தான் இந்தியன் பிரீமியர் லீக் தொடர். கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தொடரில், இந்திய வீரர்கள் மட்டுமல்லாமல், வெளிநாட்டு வீரர்களும் விளையாடி வரும் இந்த தொடர் உலகளவில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
ஆண்கள் அணியை போல் பெண்கள் கிரிக்கெட் அணிக்கும், வுமன் பிரீமியர் லீக் என்ற தொடர் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2023-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் இந்த தொடரில், டெல்லி, குஜராத், மும்பை, பெங்களூர், யூபி உள்ளிட்ட 5 அணிகள் பங்கேற்று வருகிறது. இதில் 2023-ம் ஆண்டு மும்பை அணியும், 2024-ம் ஆண்டு பெங்களூர் அணியும் சாம்பியன் பட்டம் வென்ற நிலையில், 2025-ம் ஆண்டுக்கான தொடர் எப்போது தொடங்கும் என்ற அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
இந்த தொடர் வரும் பிப்ரவரி மாதம் 14-ந் தேதி தொடங்குகிறது. தொடரின் முதல் போட்டியில் கடந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற, பெங்களூர் அணி குஜராத் அணியுடன் மோதுகிறது. இதில் வாதரோ, லக்னோ, மும்பை மற்றும் பெங்களூருவில் போட்டிகள் நடைபெற உள்ளது. அனைத்து போட்டிகளும், இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. பிப்ரவரி 14-ந் தேதி தொடங்கி மார்ச் 15-ந் தேதி வரை போட்டிகள் நடைபெற உள்ளது.
ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 முறை மோதும். மார்ச் 11-ந் தேதியுடன் லீக் சுற்றுக்கள் முடிவடையும் நிலையில், மார்ச் 3-ந் தேதி எலிமினேட்டர் சுற்று நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து இறுதிப்போட்டி மார்ச் 15-ந் தேதி மும்பையில் நடைபெற உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“