Wrestlers protest Tamil News: இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பா.ஜ.க. எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண்சிங் மீது 7 மல்யுத்த வீராங்கனைகள் கொடுத்த பாலியல் புகார் குறித்து டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, பிரிஜ் பூஷனை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த 23ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த வாரத்தில் புதிய நாடாளுமன்றம் நோக்கிப் பேரணி நடத்த முயன்ற மல்யுத்த வீராங்கனைகள், வீரர்களை டெல்லி போலீஸார் கைது செய்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மல்யுத்த வீரர்களுக்கு எதிரான காவல்துறை நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பில் இருந்து விமர்சனங்கள் எழுந்தன. மே 30 அன்று ஹரித்வாருக்கு தங்கள் போராட்டத்தை எடுத்துச் சென்ற மல்யுத்த வீரர், வீராங்கனைகள் அங்கு அவர்களின் பதக்கங்களை கங்கையில் தூக்கி ஏறியப் போவதாக தெரிவித்தனர். ஆனால், அதை செயல்படுத்தவில்லை.
இந்நிலையில், மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அவர்கள் தங்கள் பதக்கங்களை புனித கங்கை நதியில் மூழ்கடிக்கும் போன்ற விபரீத முடிவு எடுக்க வேண்டாம் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக 1983ம் ஆண்டு இந்தியாவுக்காக உலகக் கோப்பை வென்ற கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எங்கள் சாம்பியன் மல்யுத்த வீரர்கள் மனிதாபிமானமற்ற முறையில் கையாளப்படுவதைக் கண்டு நாங்கள் மன உளைச்சலுக்கு ஆளாகிறோம். அவர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பதக்கங்களை கங்கை நதியில் கொட்ட நினைக்கிறார்கள் என்பதும் எங்களுக்கு கவலை அளிக்கிறது.
அந்த பதக்கங்கள் பல வருட முயற்சி, தியாகம், உறுதிப்பாடு மற்றும் மன உறுதியை உள்ளடக்கியவை. மேலும் அவை அவர்களுக்கு மட்டுமல்ல, தேசத்தின் பெருமையும் மகிழ்ச்சியும் ஆகும். இந்த விஷயத்தில் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். மேலும் அவர்களின் குறைகள் கேட்கப்பட்டு விரைவில் தீர்க்கப்படும் என்று நாங்கள் அன்புடன் நம்புகிறோம். நாட்டின் சட்டம் வெல்லட்டும்." என்று கூறியுள்ளனர்.
புகழ்பெற்ற கேப்டன் கபில் தேவ் தலைமையில், இந்திய கிரிக்கெட் அணி வலிமைமிக்க கிளைவ் லாயிட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி நாட்டிற்கு முதல் உலகக் கோப்பை கோப்பையை வென்றது. சுனில் கவாஸ்கர், மொஹிந்தர் அமர்நாத், கே ஸ்ரீகாந்த், சையத் கிர்மானி, யஷ்பால் ஷர்மா, மதன் லால், பல்விந்தர் சிங் சந்து, சந்தீப் பாட்டீல், கிர்த்தி ஆசாத் மற்றும் ரோஜர் பின்னி ஆகியோர் ஜூன் 25, 1983 அன்று லார்ட்ஸ் மைதானத்தில் விளையாடிய மறக்கமுடியாத இறுதிப் போட்டியில் இடம்பெற்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.