WTC Final 2021 Tamil News: இங்கிலாந்தின் சவுத்தம்டன் நகரில் நடந்த முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய நியூசிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்றது. மிகவும் விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் முன்னணி வீரர்கள் ஒருவர கூட அரைசதம் அடிக்காமல் ஏமாற்றம் அளித்தனர். மேலும் முதல் இன்னிங்ஸில் நிதானம் காட்டிய கேப்டன் கோலி 44 ரன்னிலும், ரஹானே 49 ரன்னிலும் தங்களது விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினர். 2வது இன்னிங்ஸிலாவது கேப்டன் கோலி ரன்களை குவிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கையில், முதல் இன்னிங்ஸில் தனது விக்கெட்டை பறிகொடுத்த அதே நியூசிலாந்து வீரரிடமே ஆட்டமிழந்து பெவிலியன் நோக்கி நடையை கட்டினார்.

கேப்டன் கோலியின் விக்கெட்டை 2 இன்னிங்ஸிலும் வீழ்த்திய அந்த நியூசிலாந்து வீரர் வேறு யாரும் இல்லை, 14வது ஐபிஎல் தொடருக்கான பெங்களூரு அணியில் கேப்டன் கோலி தலைமையில் விளையாடிய கைல் ஜேமிசன் தான் அவர். அந்த அணிக்காக ஏலத்தில் மிகப் பெரிய தொகைக்கு எடுக்கப்பட்ட இவர் ஐபிஎல் தொடரில் பெரிதும் சோபிக்கவில்லை. மேலும் அவரது பந்து வீச்சு சுமாராகவே இருந்தது.

ஆனால், இந்திய அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் களம் கண்ட இவரின் பந்து வீச்சு மெச்சும் படியே இருந்தது. குறிப்பாக முதல் இன்னிங்ஸில் நல்ல பார்மில் இருந்த கோலியை வீழ்த்திய இவர், 2 வது இன்னிங்ஸில் அதற்கு நேரம் கொடுக்காமல் விரைவிலே அவரை பெவிலியன் நோக்கி நடக்க செய்து அனைவரின் கவனத்தையும் பெற்றார்.

இது குறித்து பேசியுள்ள ஜேமிசன், “ஐபிஎல் தொடரில் கேப்டன் கோலிக்கு எதிராக வலைப்பயிற்சியில் நான் அதிக முறை பந்து வீசிய அந்த அனுபவம் எனக்கு இந்த டெஸ்டில் நன்கு கைகொடுத்தது. கோலி போன்ற ஒரு வீரரின் விக்கெட் எவ்வளவு முக்கியம் என்பது எங்களுக்குத் தெரியும். அவரது விக்கெட்டை வீழ்த்துவது என்பது சாதாரண விஷயம் இல்லை.

எனவே தான் அவருக்கு எதிராக பந்துவீசும் போது கூடுதல் கவனத்துடனும்,இன்னும் அதிக அளவு ஸ்விங் செய்தும் வீசினேன். இதன் காரணமாகவே அவரை என்னால் வீழ்த்த முடிந்தது. இந்த டெஸ்டில் 2 முறை கோலியை வீழ்த்தியது மிகவும் மகிழ்ச்சியான ஒன்றாக உள்ளது” என்றுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“