World Test Championship 2023 Tamil News: 2022 – 23 ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, இங்கிலாந்தின் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் ஜூன் 7ம் முதல் 11ம் தேதி வரை நடைபெறுகிறது. மறுநாள் 12ம் தேதி ‘ரிசர்வ் டே’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போட்டியில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ள ஆஸ்திரேலியா – இந்தியா அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
இப்போட்டிக்காக இந்தியா - ஆஸ்திரேலிய வீரர்கள் ஏற்கனவே லண்டன் சென்றுள்ள நிலையில், அங்கு அவர்கள் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய அணியில் ரிஷப் பண்ட், பும்ரா, கே.எல்.ராகுல், ஸ்ரேயஸ் அய்யர் ஆகியோர் இல்லாதது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இந்திய அணியில் பேட்டிங்கில் சுப்மன் கில், ரோகித் சர்மா, விராட் கோலி, புஜாரா ஆகியோரை தான் நம்பி உள்ளது. பந்து வீச்சில் ஷமி, சிராஜ், உமேஷ் யாதவ், அஷ்வின், ஜடேஜா ஆகியோர் பலம் சேர்க்கின்றனர்.
சமீபத்தில் இந்திய மண்ணில் நடந்த பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரின் போது இந்தியா மூன்று சுழற்பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்தியது. அப்போது இந்திய சுழற்பந்துவீச்சு வரிசையை அஷ்வின் (25 விக்கெட்கள்) மற்றும் ஜடேஜா (22) ஆகியோர் வழிநடத்தினர். மேலும், தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றவும் உதவினார்கள்.
ஆனால் 2021ல் நியூசிலாந்திடம் தொடக்க உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணியில் இடம்பெறும் போது ஜடேஜா மற்றும் அஷ்வின் வழக்கமான தாக்கத்தை ஏற்படுத்தத் தவறிவிட்டனர். மேலும் இந்த ஜோடிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுமா அல்லது தேர்வாளர்கள் அதிக வேகம் பந்துவீச்சாளர்கள் கொண்ட வரிசையை தேர்வு செய்வார்களா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
இந்திய அணியின் அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்களான முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் ஆடும் லெவனில் இடம் பிடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது, அதே நேரத்தில் உமேஷ் யாதவ் மற்றும் ஜெய்தேவ் உனட்கட் ஆகியோரும் மீண்டும் அழைக்கப்பட்ட ஆல்-ரவுண்டர் ஷர்துல் தாக்கூருடன் மோதலில் உள்ளனர்.
ஆதிக்கம் செலுத்துவாரா அஷ்வின்
இங்கிலாந்து மண்ணில் அஷ்வின் சிறப்பான சாதனையைக் கொண்டுள்ளார். இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 28.11 சராசரியுடன், 18 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். ஆனால் ஆச்சரியப்படும் விதமாக 36 வயதான அவர் ஓவலில் ஒரு டெஸ்டில் மட்டுமே விளையாடியுள்ளார்.
அந்த போட்டி 2014ல் இங்கிலாந்துக்கு எதிராக நடந்தது. அந்தப் போட்டியில் அஷ்வின் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி 72 ரன்களை விட்டுக்கொடுத்து இருந்தார். தற்போது தரமான ஃபார்மில் இருக்கும் அஷ்வின் இந்தியாவின் இரண்டாவது முன்னணி டெஸ்ட் விக்கெட்-டேக்கரராக (474) வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.