உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் கடந்த புதன்கிழமை (ஜூன்.7) தொடங்கி நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 469 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய இந்தியா முதல் இன்னிங்சில் 296 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனை தொடர்ந்து 173 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சில் விளையாடிய ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
Advertisment
இதனால், இந்தியா வெற்றிபெற 444 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியா 4-ம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் சேர்த்தது. இந்நிலையில், இறுதி நாள் ஆட்டம் நேற்று (ஞாயிற்று கிழமை) நடைபெற்ற நிலையில் இந்திய அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரியத்தொடங்கின.
கோலி 49 ரன்களுடனும், ஜடேஜா (0) ரன் எதுவும் எடுக்காமலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர். சற்று நிலைத்து நின்ற ரஹானே 46 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த ஷர்துல் (0) ரன் எதுவும் எடுக்காமலும் அவுட் ஆனார். உமேஷ் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். சற்று நிலைத்து நின்று ஆடிய பரத் 23 ரன்னில் கேட்ச் மூலம் அவுட் ஆனார்.
இறுதியில், இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 234 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்தியாவை 209 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை ஆஸ்திரேலியா வென்றது. இந்த ஆட்டத்தில் அடைந்த தோல்வியின் மூலம் இந்திய அணியின் கடந்த 10 ஆண்டுகால சோகம் இன்னும் நீள்கிறது.
Advertisment
Advertisements
இந்திய அணி கடைசியாக 2013ம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்றிருந்தது. அதன் பிறகு நடைபெற்ற அனைத்து ஐசிசி தொடர்களிலும் இந்திய அணி கோப்பையை வென்றதில்லை என்ற நீண்ட ஆண்டுகால சோகம் தொடர்கிறது. இந்தியாவில் இந்த ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை நடைபெறுகிறது. சொந்த மண்ணிலாவது அந்த நீண்ட ஆண்டு கால சோகத்துக்கு இந்திய அணி முடிவு கட்டுமா என ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டுள்ளனர்.
இந்திய அணி - கில்லுக்கு அபராதம்
இந்த நிலையில், தனக்கு தவறான அவுட் கொடுத்ததாக நடுவரை விமர்சனம் செய்ததாக இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மன் கில்லிற்கு போட்டி சம்பளத்திலிருந்து 15 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல், இந்திய அணி மெதுவாக பந்து வீசியதற்கு (ஸ்லோ ஓவர் ரேட்) 100 சதவிகிதமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஸ்லோ ஓவர் ரேட்டிற்காக ஆஸ்திரேலியாவுக்கு போட்டி சம்பளத்திலிருந்து 80 சதவிகிதம் வரையில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.