Sunil Gavaskar on WTC final 2023 Tamil News: 2022 – 23 ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, இங்கிலாந்தின் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் ஜூன் 7ம் முதல் 11ம் தேதி வரை நடைபெறுகிறது. மறுநாள் 12ம் தேதி ‘ரிசர்வ் டே’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போட்டியில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த ஆஸ்திரேலியா – இந்தியா அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
இந்திய அணி விக்கெட் கீப்பரை மாற்ற வேண்டுமா?
சமீபத்தில், இந்திய மண்ணில் நடைபெற்ற 4 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. எனினும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன், அணியில் இந்திய நிர்வாகத்தால் தீர்க்கப்பட வேண்டிய பல சிக்கல்கள் உள்ளன. அதில் ஒன்றாக, விக்கெட் கீப்பர் இடம் உள்ளது.
கடந்த ஆண்டு இறுதியில் பயங்கரமான கார் விபத்தை சந்தித்த விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், தனது காயத்தில் இருந்து மீண்டு வருவதால் அவர் பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடவில்லை. பண்ட் முழு உடற்தகுதியை எட்ட இன்னும் 6 மாதங்களுக்கு மேல் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பண்ட் இல்லாத நிலையில், அவரது இடத்தில் விளையாட இஷான் கிஷன் மற்றும் கே.எஸ்.பாரத் அணியில் சேர்க்கப்பட்டனர். இந்த வீரர்களில் இஷான் கிஷன் தொடர் முழுதும் பெஞ்சில் அமர வைக்கப்பட்டார். களத்தில் விளையாடிய கே.எஸ்.பாரத்-தின் செயல்பாடுகளும் மெச்சும் பாடியதாக இல்லை. எனவே, ஓவலில் நடக்கும் இறுதிப்போட்டியில் இந்திய அணி விக்கெட் கீப்பரை மாற்றுமா? என்று சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கவாஸ்கர் சாய்ஸ்
இந்நிலையில், இந்த கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக பேசியுள்ள இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், கேஎல் ராகுலை கீப்பர்-பேட்டராக விளையாட நிர்வாகம் பரிசீலிக்க வேண்டும் என்றும், அவர் 2021ல் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது சிறப்பாக செயல்பட்டு இருந்தார் என்றும் தெரிவித்துள்ளார்.

“கே.எல். ராகுலை விக்கெட் கீப்பராக நீங்கள் பார்க்கலாம். ஓவல் மைதானத்தில் (உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில்) அவர் நம்பர் 5 அல்லது 6-ல் பேட் செய்தால், நமது பேட்டிங் வலுவாக இருக்கும். ஏனெனில் அவர் கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நன்றாக பேட்டிங் செய்தார். அவர் லார்ட்ஸ் மைதானத்தில் சதம் அடித்தார். ஆதலால், இறுதிப் போட்டிக்கான ஆடும் லெவன் வீரக்களை நீங்கள் தேர்ந்தெடுக்கும்போது கே.எல்.ராகுலை உங்கள் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.” என்று அவர் கூறியுள்ளார்.
கே.எல். ராகுல் சரியான ஃபார்மில் இல்லை என்ற காரணத்தால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்டுகளுக்குப் பிறகு அணியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும், அவர் டெஸ்ட் அணியின் துணைக் கேப்டன் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார். மேலும் அவர் தனது கடைசி 10 டெஸ்ட் ஆட்டங்களில் 25 ரன்களை தாண்டவில்லை. 47 டெஸ்டுகளில் விளையாடியுள்ள அவரின் சராசரி 35 க்கும் குறைவாக உள்ளது. அவருக்கு பதிலாக 3வது டெஸ்டில் ஷுப்மான் கில் சேர்க்கப்பட்டார். அவர் அகமதாபாத்தில் நடந்த கடைசி டெஸ்டில் சதம் அடித்து அசத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil