WTC Final 2023 - Travis Head Tamil News: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, இங்கிலாந்தில் உள்ள லண்டன் ஓவலில் நேற்று (புதன்கிழமை) மாலை 3 மணிக்கு தொடங்கியது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 469 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 163 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 121 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் சிராஜ் 4 விக்கெட்டுகளும், ஷர்துல் தாகூர் ஷமி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனையடுத்து, முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியின் டாப் ஆடர் வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா (15 ரன்), கில் (13 ரன்), புஜாரா (14 ரன்), விராட்கோலி (14 ரன்) சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். சிறிது நேரம் தாக்குப்பிடித்து அதிரடியாக விளையாடிய ஜடேஜா 51 பந்துகளில் 48 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார். ரஹானே 29 ரன்களுடனும், பரத் 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை விட 318 ரன்கள் பின்தங்கியுள்ளது.
வெளுத்து வாங்கிய ஹெட்
இந்த ஆட்டத்தின் முதல் நாளில் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட்- ஸ்டீவ் ஸ்மித் ஜோடி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 3 விக்கெட்டுக்கு 76 ரன்கள் என இருந்தது போது ஜோடியில் இணைந்த இவர்கள் இருவரில், ஹெட் ஒருமுனையில் அதிரடி ஆட்டம் காட்ட மறுமுனையில் ஸ்மித் இந்திய பந்துவீச்சாளர்களை நோகடித்தார். இவர்களின் ஜோடி உடைக்க எவ்வளவு முயன்றும் தோல்வியில்தான் முடிந்தது. ஆஸ்திரேலிய அணி முதல் நாள் முடிவில் 85 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 327 ரன்கள் எடுத்த நிலையில், ஹெட் 146 ரன்களுடனும், ஸ்மித் 95 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
ஷார்ட்-பால் வீக்னஸ்
இருப்பினும், குழப்பமான விஷயம் என்னவென்றால், இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர்கள் டிராவிஸ் ஹெட்-க்கு ஷார்ட் பந்துகளை வீசி சோதிக்கத் தவறி இருந்தனர். அவர் கடந்த காலங்களில் ஷார்ட் பந்துகளுக்கு எதிராக போராடி இருந்தார். 2018/19 டெஸ்ட் தொடரின் போது கூட, ஷார்ட்-பால் உத்தியை ஹெட்டிற்கு எதிராக நன்றாக இந்தியா பயன்படுத்தியது. ஆனால் முதல் நாள், ஹெட் 90 களுக்குச் செல்லும் வரை அவர்கள் அதை முற்றிலும் புறக்கணித்தனர். முகமது சிராஜ் மற்றும் முகமது ஷமி ஆகியோர் ஒரு சில ஷார்ட் பந்துகளை வீசி அவரை தொந்தரவு செய்தனர், ஆனால் அது மிகவும் தாமதமாக போனது.
இந்நிலையில், டிராவிஸ் ஹெட் குறித்து பேசிய ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், "அவரது இன்னிஙஸின் தொடக்கத்தில் அணிகள் அவரை ஷார்ட்-பால் உத்திகளால் தாக்குவதை நாம் பார்த்திருக்கிறோம். அவர் 90 ரன்களில் இருக்கும் வரை, அவர்கள் நீண்ட நேரமாக ஷார்ட் பந்துகளை வீசவில்லை. இந்த நேரத்தில், ஒவ்வொரு முறையும் அவர் பேட்டிங் செய்யும் போது, அவர்கள் பந்தை மேலே பிட்ச் செய்தார்கள். அதனால் அவர்கள் அவரை ஆட்டமிழக்க செய்துவிடலாம் என்று நினைத்தார்கள். ஆனால், அது வேலை செய்யவில்லை. இரண்டு ஆண்டுகளாக வேலை செய்யவில்லை" என்று கூறினார்.
மேலும் ரிக்கி பாண்டிங், "இந்த மாத இறுதியில் தொடங்கும் ஆஷஸுக்கு முன்னதாக இந்தியா சில முக்கியமான பாடங்களை இங்கிலாந்துக்கு வழங்கியுள்ளனர்" என்றும் கூறினார்.
இறுதியில், 2வது நாளில் ஹெட் ஷார்ட் பந்தில் ஆட்டமிழந்தார். 174 பந்துகளை எதிகொண்ட ஹெட் 25 பவுண்டரிகள் 1 சிக்ஸருடன் 163 ரன்கள் எடுத்த நிலையில் சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்து இருந்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil