World Test Championship 2023, India’s scenarios explained Tamil News: இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் அகமாதபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது.
போட்டியை நேரில் காணும் இந்திய – ஆஸ்திரேலிய பிரதமர்கள்
உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான நரேந்திர மோடி ஸ்டேடியம் சுமார் ஒரு லட்சத்து 32 ஆயிரம் இருக்கை வசதி கொண்டது. முதல் நாள் ஆட்டத்தை காண ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் நேரில் பார்க்க வருகை தரவுள்ளனர். அதற்கான அலங்கார ஏற்பாடுகளும் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணியில் மட்டும் சுமார் 2 ஆயிரம் போலீசார் ஈடுபடவுள்ளதாக குஜராத் மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பரபரப்பு

இந்த தொடரில் இந்தூரில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவை வென்றதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு ஆஸ்திரேலிய தகுதி பெற்றது. முதல் இரண்டு போட்டிகளில் வென்ற இந்தியா 2வது இடத்தில் உள்ளது. ஆனால், 3வது இடத்தில் உள்ள இலங்கை அணி இந்தியாவுக்கு கடும் போட்டியாளராக உள்ளது. இதனால், இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் மீதமுள்ள ஒரு போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது.
4-வது டெஸ்ட்டை இந்தியா டிரா செய்தால் என்ன ஆகும்?
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி (WTC) புள்ளிகள் அட்டவணையைப் பொறுத்தவரை, ஆஸ்திரேலியா 68.52 சதவித புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. 60.29 சதவித புள்ளிகளுடன் இந்தியா 2வது இடத்திலும், 53.33 சதவித புள்ளிகளுடன் இலங்கை 3வது இடத்திலும் உள்ளது. எனவே இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெறுவதற்கான வழிகளை இங்கு பார்க்கலாம்.

- அகமதாபாத்தில் நடக்கும் 4வது டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றால், எந்த கவலையும் இன்றி நேரடியாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குள் நுழையும்.
- இந்தியா டிரா செய்தால், அவர்களின் சதவித புள்ளிகள் 52.9 ஆக குறையும். ஆனால் இலங்கை நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்யத் தவறினால், இந்தியா தகுதி பெற்று விடும்.
- இந்தியா தோல்வியுற்றால், நியூசிலாந்து – இலங்கை அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரின் முடிவை பொறுத்து இந்தியாவின் வாய்ப்பு அமையும்.

சுவாரசியமான விடயம் என்னவென்றால், இந்தியா – ஆஸ்திரேலியா 4வது டெஸ்ட் போட்டியும் இலங்கை – நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியும் நாளைய தினம் தான் (மார்ச் 9ம் தேதி) தொடங்குகின்றன. எனவே, இந்த இரண்டு போட்டிகளின் முடிவுகளுக்காகவும் இந்திய ரசிகர்களும், உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களும் எதிர்பார்த்து இருப்பார்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil