WTC Final 2023 - IND vs AUS, Ravichandran Ashwin Tamil News: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, இங்கிலாந்தில் உள்ள லண்டன் ஓவலில் நேற்று (புதன்கிழமை) மாலை 3 மணிக்கு தொடங்கியது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 469 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 163 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 121 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் சிராஜ் 4 விக்கெட்டுகளும், ஷர்துல் தாகூர் ஷமி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனையடுத்து, முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா 15 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். மறுமுனையில் இருந்த கில் 13 ரன்னில் கிளீன் போல்டானார். புஜாரா 14 ரன்கள் எடுத்த நிலையில் கில் ஆட்டமிழந்ததைப் போலேவே ஆட்டமிழந்து வெளியேறினார். கோலி14 ரன் எடுத்து அவுட் ஆகி பெரும் ஏமாற்றம் கொடுத்தார். பின்னர் வந்த அஜிங்கியா ரஹானே மற்றும் ரவீந்திர ஜடேஜா நிலைத்து நின்று ஆடி ரன்கள் சேர்த்தனர். எனினும், ரவீந்திர ஜடேஜா எளிதான பந்தில் 48 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அடுத்து வந்த விக்கெட் கீப்பர் கேஎஸ் பரத் 14 பந்துகள் பிடிப்பதற்குள்ளாக மார்பு, முழங்கைப் பகுதியில் காயம் ஏற்பட்டார். இதே போன்று அஜிங்கியா ரஹானேவிற்கு கையில் காயம் ஏற்பட்டு பேண்டேஜ் போடப்பட்டது. அடுத்து தலையிலும் காயம் ஏற்பட்டது. இப்படி அடிமேல் அடி வாங்கி இந்திய வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்து இருந்தது.
இந்நிலையில், இறுதிப் போட்டி தொடங்குவதற்கு முன்னதாகவே ஓவல் ஆடுகளம் குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் கருத்து தெரிவித்திருந்தார். 'இந்திய வீரர்கள் பயிற்சி செய்வதற்கு நல்ல ஒரு பிட்ச் தான் வழங்குவார்கள். ஆனால், இந்த முறை வழங்கப்பட்டுள்ள ஆடுகளம் கொஞ்சம் மோசமானதாக உள்ளது. பந்து பவுன்சராக வருகிறது. இதன் காரணமாக அணி வீரர்கள் காயம் அடைந்து வருகின்றனர். மேலும், இறுதிப் போட்டிக்காக வழங்கப்பட்டுள்ள ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமற்றதாக கூட இருக்கலாம்' என்று அஸ்வின் கூறியிருந்தார். இதன் மூலம் அஸ்வின் கூறியது தற்போது உண்மையாகியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil