இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி நாளை மறுநாள் இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் நடைபெற உள்ளது இதற்கு கிரிக்கெட் ரசிகர்களின் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை தூண்டியுள்ள நிலையில், இந்த இறுதி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள வீரர்கள் தனித்தனியாக நேர்காணல்களை வழங்கி வருகிறார்கள்.
இந்த நிலையில், நியூசிலாந்து அணியின் முன்னனி வீரர் ஒருவர் வழங்கியுள்ள பேட்டி ஒன்றில், இந்திய அணியானது எந்த ஒரு சூழ்நிலையிலும் வலுவான எதிரணியாகவே இருக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து அணியின் மூத்த வீரராக வலம் வரும் ராஸ் டெய்லர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய பேட்டியில், “இந்திய அணியானது அதன் சொந்த மண்ணில் மட்டுல்ல மற்ற நாட்டு ஆடுகளங்களில் மற்றும் பொதுவான ஆடுகளங்களில் விளையாடும்போதுகூட வலுவான எதிரணியாக தான் இருக்கும். இளம் வீரர்கள் பலபேர் அந்த அணியில் தங்களது திறமைகளை நிரூபித்து உள்ளனர். கடந்த ஆஸ்திரேலிய தொடரில் அவர்களால் தான் இந்திய அணி வெற்றி பெற்றது என்பதை நாம் மறந்து விடக் கூடாது.
எனவே இந்த இறுதிப் போட்டிக்கு எந்த மாதிரியான உத்தியோடு களமிறங்க வேண்டும் என்பதை அவர்கள் நன்றாகவே அறிந்து வைத்திருப்பார்கள். இந்த இறுதிப் போட்டிக்கு முன்பாக இந்திய அணிக்கு எந்த ஒரு பயிற்சி போட்டியும் இல்லாததால், இந்திய அணியின் வீரர்கள் தங்களுக்குள்ளாகவே இரண்டு அணிகளாக பிரிந்து இன்ட்ரா ஸ்குவாட் பயிற்சி போட்டியில் விளையாடி முடித்திருக்கின்றனர்.
நாங்கள் இந்த இறுதிப் போட்டிக்கு முன்பாக இங்கிலாந்து அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகளை விளையாடியுள்ளோம். அதனால் சில விடயங்களை எங்களால் அறிந்து கொள்ள முடிந்தது. ஆனால் இந்திய அணிக்கு அப்படி எதுவும் இல்லை. அவர்கள் விளையாடிய பயிற்சிப் போட்டியைப் பார்த்தால், அதை அவர்கள் பயிற்சி போட்டியாக நினைத்து விளையாடியதுபோல் தெரியவில்லை. ஒவ்வொரு வீரரும் தங்களது திறமையை வெளிக்காட்டி உள்ளனர். கொடுக்கப்பட்ட சிறிது நாட்களுக்கு உள்ளாகவே அவர்கள் இந்த இறுதிப் போட்டிக்கு தயாராகி இருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. பேட்டிங் மட்டுமில்லாமல் அவர்களின் பௌலிங் வரிசையும் மிக வலுவானதாகவே இருக்கிறது.” என்றுள்ளார்

நாளை மறுதினம் நடக்கவுள்ள இந்த இறுதிப் போட்டிக்கு முன்பாக 15 வீரர்கள் கொண்ட பட்டியலை அறிவிக்கும்படி 2 அணிகளிடமும் ஐசிசி தெரிவித்து இருந்த நிலையில், 2 அணிகளும் தங்களது இறுதிகட்ட அணியைத் தேர்ந்தேடுத்துள்ளன. இந்திய அணியில் மயாங் அகர்வால், கே எல் ராகுல், ஷர்தூல் தாக்கூர் ஆகிய வீரர்கள்15 பேர் கொண்ட பட்டியலில் இடம்பெறவில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“