WTC Final Tamil News: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் ஜூன் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை இங்கிலாந்தின் சவுத்தாம்டன் நகரில் நடைபெறுகிறது. இதில் ஐசிசி – யின் டெஸ்ட் அணிகள் தரவரிசை பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ள இந்திய அணி, 2ம் இடத்தை பிடித்துள்ள நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.

இதற்கிடையில் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதன் முதல் போட்டி ட்ராவில் முடிந்துள்ள நிலையில் 2வது போட்டி வரும் 10ம் தேதி முதல் துவங்குகிறது.

இந்த நிலையில், இங்கிலாந்திற்கு எதிரான முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 13 ரன்களையும், 2வது இன்னிங்ஸில் 1 ரன்னையும் எடுத்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்த நியூசிலாந்தின் கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் கலந்து கொள்ளவாரா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

மேலும் அந்த அணியின் நட்சத்திர பவுலர்கள் மிட்சல் சாண்ட்னர், ட்ரெண்ட் போல்ட் ஆகியோரும் காயத்தால் அவதிப்பட்டு வருகின்றனர். இதில் ட்ரெண்ட் போல்ட் காயத்தில் இருந்து மீண்டுள்ள நிலையில், சாண்ட்னர் தொடரில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கேப்டன் வில்லியம்சனின் உடற்தகுதி குறித்து இதுவரை தகவல் ஏதும் வெளியிடப்படாமல் உள்ளது. ஒரு வேளை இங்கிலாந்திற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் அவர் கலந்து கொள்ளவில்லை என்றால், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் அவரால் பங்கேற்க முடியாது என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து நியூசிலாந்து அணியின் நிர்வாகம் கூறுகையில், “வில்லியம்சனுக்கு இடது முழங்கையில் காயம் ஏற்பட்டுள்ளது. அதனை மருத்துவர் குழு ஆராய்ந்து வருகின்றனர். அவர் இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பது குறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை. மேலும் மிட்செல் சான்ட்னருக்கு ஆள்காட்டி விரலில் காயம் ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளது.
கேப்டன் வில்லியம்சனை பரிசோதனை செய்துள்ள மருத்துவர் கூறுகையில், “காயத்தின் தன்மை பெரிதாக இல்லை. இருப்பினும் அவர் இரண்டாவது போட்டியின்போது விளையாடி மீண்டும் வலி அதிகமாகும் பட்சத்தில் இது பெரிய பிரச்சனையாக மாறும்” என்று தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“